பொ.செ. பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி

பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை  தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகினார். டிசம்பர் மாதத்தில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்த தீர்மான நகல், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டன. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடியானது. இதற்கிடையில் சசிகலாவுக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டி காரணமாக உள்கட்சி பூசல் ஏற்பட்டது. சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு போர்க்கொடி தூக்கியது. இதில் ஒருகட்டமாக சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், பிப்ரவரி 28-ம் தேதிக்குள் (இன்று) சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களில் சிலரும், சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனும் சந்தித்து பேசினர். அப்போது கட்சியின் உள்விவகாரங்களையும், தமிழக அரசியல் சூழ்நிலைகளையும் கேட்டறிந்த சசிகலா, அதற்கான ஆலோசனைகளையும் தெரிவித்தார். பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை  அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, தேர்தல் ஆணைய விவகாரம், சிறை மாற்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் மறு சீராய்வு மனு உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியின் உள்விவகாரங்கள், பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "அ.தி.மு.க.வின் விதியில் 5 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். அந்தவகையில் பார்த்தால் சசிகலா, தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியில் இல்லை. 2011ம் ஆண்டில் ஜெயலலிதாவால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கட்சியிலிருந்தும், போயஸ் கார்டனிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். இதில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா மீண்டும் சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வின் விதிப்படி சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது. இதை நிச்சயம் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டும். மேலும் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியும் அ.தி.மு.க.வில் இல்லை. இதனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சசிகலாவே, பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார். அதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் சசிகலா வெளியிட வாய்ப்புள்ளது.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல், பெங்களூரு சிறையிலிருந்து தமிழக சிறைக்கு மாற்றம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில நாள்களுக்கு முன்பு தீபக் அளித்த பேட்டி தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. தீபக்கை இயக்குபவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சசிகலா உத்தரவிட்டுள்ளார். அடுத்து மக்களை சந்திக்கும் பன்னீர்செல்வத்துக்கு எப்படி முட்டுக்கட்டை போடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. சசிகலாவின் சந்திப்பில் பங்கேற்ற மன்னார்குடியின் பவர்புல் மனிதர் ஒருவர், 'எந்த காரியத்திலும் அவசரப்பட வேண்டாம். ஏற்கெனவே நாம் அவசரப்பட்டதால்தான் சிறை வரை வந்து விட்டோம். இனிமேல் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் தீவிர ஆலோசனைக்குப்பிறகே எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். அமைச்சர்களைச் சந்தித்த சசிகலா, முதல்வர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளதை கட்சியில் ஒரு தரப்பு விரும்பவில்லை. இதனால் அவர்களை சரிகட்டும் வகையில் கட்சியில் முக்கியப்பதவி அந்த தரப்புக்கு கொடுக்கலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட அந்த தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர்" என்றனர்.