சுங்கச்சாவடியில் ஊழியர்கள்-லாரி ஓட்டுனர்கள் இடையே மோதல்!

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியர்களுக்கும் லாரி ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுங்க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறி வட மாநில சுங்கச்சாவடி ஊழியர்கள் அபராத கட்டணம் செலுத்த சொன்னதாக தெரிகின்றது. இதனால் லாரி ஓட்டுநருக்கும் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டதில், லாரி ஓட்டுநரை ஊழியர் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லாரி ஓட்டுநருக்கு ஆதரவாக மற்ற லாரி மற்றும் பிற வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் அருகில் இருந்த சுங்கச்சாவடி அலுவலக கண்ணாடி, இருசக்கர வாகனம், மற்றும் பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.
இதனால் மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கே வந்த மேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போக்குவரத்து சீரடைந்தது.