பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தேச விரோத இயக்கம் தான்: எஸ்.குருமூர்த்தி

 
துக்ளக் 8.2.2017 இதழில், ‘அராஜகத்தில் முடிந்த அமைதிப் போராட்டம் தரும் பாடங்கள்’ என்கிற தலைப்பில் வெளியான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றிய கட்டுரையில், தேசவிரோத சக்திகள் எப்படி அந்தப் போராட்டத்தில் ஊடுருவின என்பதை விளக்கியிருந்தோம். ‘தன்னிச்சையாக உருவாகி நடந்த, அமைதியான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்து, போராடுகிறவர்களை நாசவேலையில் ஈடுபடுத்த, பல தேச விரோத அமைப்புகள், 19-ஆம் தேதி முதலே ஊடுருவ ஆரம்பித்தன. எப்படிப்பட்ட அமைப்புகள் இதில் ஊடுருவின? பல தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற இஸ்லாமிய அடிப்படை இயக்கம், அதன் கீழ் இயங்கி வரும் ‘காம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ என்கிற மாணவர் அமைப்பு, அதே பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் கீழ் இயங்கும் அதனுடைய அரசியல் பிரிவான ‘இந்திய சமூக ஜனநாயகக் கட்சி’ போன்றவை போராட்டத்தில் ஊடுருவின’ என்று, அந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தோம்.
வரவேற்கிறோம்
‘மேலே குறிப்பிட்ட கட்டுரையில், மற்ற இயக்கங்களோடு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பையும் இணைத்து, தேசவிரோத அமைப்பு என்று ‘துக்ளக்’கில் வந்த ஆதாரமற்ற கட்டுரை; PFI-ஐ களங்கப்படுத்தியிருக்கிறது; PFIஅரசியல் சாஸனத்துக்குக் கட்டுப்பட்ட, தாழ்த்தப்பட்டோருக்காகப் பாடுபடும், தேசவிரோத சக்திகளை எதிர்க்கும் அமைதியான இயக்கம்; PFI-ஐ களங்கப்படுத்தி எழுதியதற்காக துக்ளக் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையென்றால், ‘துக்ளக்’குக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்று PFI-யின் தமிழ்நாடு கிளையின் செயலாளரான காலித் மொஹம்மத் 24.2.2017-ஆம் தேதியிட்டு, நமக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.'
வக்கீல் நோட்டீஸுக்குப் பதில் கொடுப்பது நம்முடைய முதல் கடமை. PFI-யின் வக்கீல் நோட்டீஸுக்கு ஆரம்பத்திலேயே நாம் கூறும் பதில் இதுதான்: மறுபடியும் கூறுகிறோம், PFI இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் மட்டுமல்ல, அது பயங்கரவாத இயக்கமும், தேசவிரோத அமைப்பும் கூட. இரண்டாவதாக, துக்ளக், உண்மைக்குப் புறம்பாக எழுதாத பத்திரிகை. 8.2.2017 கட்டுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்கங்களில், PFI மற்றும் அதைச் சார்ந்த இயக்கங்களை மட்டும்தான் தேசவிரோத இயக்கங்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். மற்ற இயக்கங்களை, தீவிரவாத அமைப்புகள் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். இந்த வக்கீல் நோட்டீஸ் வராவிட்டால் நாம் PFI பற்றி மேலும் எழுத நினைத்திருக்கவே மாட்டோம். இது வந்ததால், PFI-ப் பற்றி விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. PFI-பசுத்தோல் போர்த்திய புலியல்ல; அது புலித்தோல் போர்த்திய புலி. ஜல்லிக்கட்டு கட்டுரையில் (8.2.2107) PFI-யைப் பற்றி விபரமாக எழுத வாய்ப்பில்லை. இப்போது காலித் மொஹம்மத், அந்த வாய்ப்பை நமக்கு அளித்திருப்பதால், PFI-யின் சுய உருவத்தை ‘துக்ளக்’ வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பும் நமக்கு வந்திருக்கிறது. துக்ளக் மீது காலித் மொஹம்மத் நடவடிக்கை எடுத்தால், PFI பயங்கரவாத இயக்கம் என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்கும் வாய்ப்பு ‘துக்ளக்’குக்குக் கிடைக்கும். இதனால் துக்ளக் மீது நடவடிக்கை எடுக்க, காலித் மொஹம்மதை வரவேற்கிறோம்.
PFI பயங்கரவாத அமைப்பான SIMIயின் மறு அவதாரம்
Students Islamic Movement of India (SIMI) என்கிற அகில இந்திய அளவிலான இஸ்லாமிய மாணவர் அமைப்பு, 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பிறகு, SIMI அமைப்பிலிருந்த பயங்கரவாதிகள் கலைந்து, வெவ்வேறு பெயர்களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கினார்கள். அப்படி உருவானதுதான் PFI அமைப்பு. PFI -யின் அகில இந்தியத் தலைவர் அப்துல் ரஹ்மான். இவர் தடை செய்யப்பட்ட SIMI அமைப்பின் செயலாளராக இருந்தவர். கேரள SIMI அமைப்பின் செயலாளர்தான் பின்பு, கேரள PFI-யின் தலைவரானார்.
பொதுவாகவே, SIMI-யில் இருந்தவர்களுக்கு, PFI-யில் பதவி கொடுக்கப்பட்டது. இந்த விபரங்கள் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தவை தான். குறிப்பாக, sifynews என்ற இணையதளம் 10.7.2010-ல் இந்தச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை (27.3.2015), நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைக் குடித்த 2011 மும்பை, 2012 புனே, மற்றும் 2013 ஹைதராபாத் தாக்குதல்களில் PFI-யின் கையும் இருக்கிறது என்று புலனாய்வுத் துறை விசாரணை செய்து முடிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது. அந்தத் தாக்குதல்களை, பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் செய்தது. ஆனால், அதற்கு குண்டு செய்வதற்கு வெடிமருந்து சப்ளை செய்தது PFI அமைப்பு என்று, அந்த வழக்குகளில் கைதாகிய, தடை செய்யப்பட்ட SIMI அமைப்பைச் சேர்ந்தவரான, சையத் இஸ்மாயில் அபாஃக் என்பவரின் வாக்குமூலத்தின் மூலமாக இது தெரிய வந்திருக்கிறது என்று கூறியது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
PFI உருவானவுடன், அதனுடன் சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் இணைந்தன. 1993-லிருந்து கேரளாவில் இருந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான National Development Front,, 2006ல் PFI-யுடன் இணைந்தது. பிறகு, தமிழ்நாட்டில் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவில் National Development Front போன்ற இஸ்லாமிய தீவிராத அமைப்புகளும் PFI-யுடன் இணைந்தன. பின்பு PFI, பெண்களுக்காக �National Women's Front என்கிற கிளை அமைப்பையும், மாணவர்களுக்காக Campus Front of India் என்கிற கிளை அமைப்பையும் உருவாக்கியது. பல சிந்தனையாளர்களால் நடத்தப்படும் South Asia Terrorism Portal என்கிற பயங்கரவாதம் பற்றி ஆய்வு செய்யும் இணைய தளம் இவ்வாறு கூறுகிறது:- ‘தடை செய்யப்பட்ட SIMI அமைப்பைச் சேர்ந்தவர்கள் PFI-யின் கீழ் மீண்டும் ஒன்று திரண்டிருக்கிறார்கள்’. இதுதான் PFI உருவாகிய, விரிவான கதை.
PFI-யின் பயங்கரவாத வரலாறு
பல ஆண்டுகளாகச் (2010 முதலே) சந்தேகிக்கப்பட்டு வந்த PFI-யின் சாயம், 2013-ல் முழுவதுமாக வெளுத்தது. சிறுபான்மையினரையும், தாழ்த்தப்பட்டவர்களையும் முன்னேற்றுவதற்காகப் பாடுபடுகிறோம் என்று பறைசாற்றி வந்த PFI-யின் முகத்திரையை கேரளப் போலீஸ் கிழித்தது என்று, நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் (28.4.2013) உள்பட பல பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.
அப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சியில் இருந்தது. வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராக இருந்தார்.PFI-யின் முகத்திரை கிழியக் காரணம் என்ன? முஹம்மது நபியை அவமானப்படுத்தி விட்டார் என்று குற்றம் சாட்டி, 2010-ஆம் ஆண்டு டி.ஜே.தாமஸ் என்கிற பேராசிரியரின் கையை வெட்டித் தூக்கி எறிந்தவர்கள் PFI அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது தெரிந்த பிறகு, அது வெகுவாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது. 27.7.2010-ல் முதல்வர் அச்சுதானந்தன், 'PFI அமைப்பின் நோக்கம், கேரளாவை இஸ்லாமிய மயமாக்குவது' என்று கூறினார். அப்போது காங்கிரஸ் கட்சி, அச்சுதானந்தன் அப்படிப் பேசியதற்காகக் கண்டனம் தெரிவித்தது. 2011தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கட்சி தோற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு 2011-க்கு முன்பு PFI-யைப் பற்றி என்ன கூறியதோ, அதையேதான் அதற்குப் பிறகு பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கமும் கூறியது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான ஆர்யாடன் முகமத், 'PFI போன்ற அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை' என்று அச்சுதானந்தன் கூறியதைப் போலவே கூறினார். பிறகு, 2012-ல் கேரள காங்கிரஸ் அரசு ’PFI தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும், அது 27 கொலைகளைச் செய்திருக்கிறது என்றும், அது SIMI-யின் மறு அவதாரம்’ என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர் நீதிமன்றம், PFI-யின் அணிவகுப்பு ஊர்வலத்தை கேரள அரசு தடை செய்ததை ஆமோதித்தது. 2012-ல் பெங்களூரிலிருந்த வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை மிரட்டி, பயந்து ஓடச் செய்த இணையதளச் செய்திகளை PFI பரப்பியது என்பதையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அமெரிக்கப் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் (5.2.2011), ‘பயங்கரவாத இயக்கமான PFI வேகமாக வளர்ந்துவருகிறது. அது SIMI அமைப்பின் தொடர்ச்சி, அது மார்க்ஸிஸ்ட், மற்றும் RSS தொண்டர்கள் பலரைக் கொலை செய்திருக்கிறது’ என்கிற செய்தியை வெளியிட்டது.
PFI பற்றிய ஆதாரங்களைச் சேகரித்த பிறகு, 23.4.2013-ல் கேரள போலீஸ்,PFI அலுவலகங்களைச் சோதனை செய்தது. சோதனையில் 21 இளம் பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டனர். யார் யார் தீர்த்துக் கட்டப்பட வேண்டும் என்கிற பட்டியல், வெடிகுண்டுகள், வெடி மருந்து, கத்திகள், வெளிநாட்டுக் கரன்ஸி நோட்டுகள், ஈரான் செல்வதற்கான அனுமதி கார்டு எல்லாம் கைப்பற்றப்பட்டன. உடனேயே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் எல்லோரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாள் கழித்து மீண்டும் நடந்த சோதனையிலும், வன்முறை ஆயுதங்கள் பிடிபட்டன. அப்போதுதான் PFI என்பது பயங்கரவாதிகளின் பாசறை, அது பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடவும், நடத்தவும் பயிற்சி முகாம்களை நடத்துகிறது என்பது அதிகாரபூர்வமாகத் தெரிய வந்தது. PFI-பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது, ஆயுதங்களைச் சேர்க்கிறது, பணத்துக்காக கடத்தல், மற்றும் கொலைகளைச் செய்கிறது, மதக் கலவரங்களைத் தூண்டுகிறது, ஹிந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்துக் காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்கிறது என்பன போன்ற செய்திகள் ஏப்ரல் 2013-லிருந்து வெளிவர ஆரம்பித்தன. பத்திரிகைகளும் இந்தச் செய்திகளைப் பெரிய அளவில் வெளியிட்டன.
PFI அமைப்பைச் சே்ர்ந்தவர்கள் ஹிந்து – கிறிஸ்தவப் பெண்களைக் குறிவைத்துக் காதலிப்பது, கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ என்று பிரபலமானது. இது பற்றி, லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான ‘டெய்லி டெலிகிராப் யு.கே.’ கூடச் செய்திகளை வெளியிட்டது. ‘லவ் ஜிகாத்’ பரவலானவுடன், பாதிக்கப்பட்ட பெண்களைத் தொடர்பு கொள்ள ஒரு கைபேசி எண்ணும், ஈமெயிலும் தரப்பட்டன. அதில், ஏமாற்றப்பட்ட 1500 பெண்கள் தொடர்பு கொண்டனர். அதன் பிறகு கேரள உயர் நீதிமன்றம், அந்த வழக்கையே ‘லவ் ஜிகாத் வழக்கு’ என்று பெயரிட்டு, விசாரணை செய்ய போலீஸுக்கு உத்தரவிட்டது. விசாரணையில் லவ் ஜிஹாதில் சிக்கிய பெண்களுக்கு, தீவிரவாத, பயங்கரவாதச் சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன என்கிற உண்மையெல்லாம் வெளிவந்தது. ‘இது அதிர்ச்சியானது. ஆனால், உண்மையில் நடக்கிறது’ என்று கூறினார் கேரள கத்தோலிக்க பிஷப் கௌன்ஸிலின் செயலாளரான பேராயர் ஜானி கொச்சீப்பாரம்பில். இதுதான் PFI-யின் உண்மையான முகம். அது, தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபடுகிறோம் என்று கூறுவது வெறும் வேஷம்.
2010-லும் சரி, பின்பு 2013-லும் சரி, PFI பற்றி மறுக்க முடியாத வன்முறைச் செய்திகள் வெளிவந்தபோது, PFI தன்னுடைய அறிக்கையில் – இப்போது ‘துக்ளக்’குக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் பாசாங்கு செய்வது போல – தான் அமைதியான இயக்கம் என்றும், தான் செய்ததாக் கூறி வெளிவந்த வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத தனித்தனி நடப்புகள் என்றும் சப்பைக் கட்டுக் கட்டியது. இப்போதும் அப்படியே சப்பைக் கட்டுக் கட்டுகிறார் காலித் மொஹம்மத். இதற்கு மேல் இப்போது, ஒன்றும் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
Source: Thuglak