ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு பிரவேசம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், ஆர்.கே. நகர் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று, வாக்குசேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று இரவு தீபா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின், நினைவிடத்துக்கு சென்றார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தீபா, தன்னை சிலர் மறைமுகமாக மிரட்டுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று அதிமுக செய்தி தொடர்பாள வைகை செல்வன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வருகிறார். இது எங்களுக்கு சந்தோஷம். அவரை வரவேற்கிறோம். ஆனால் அதிமுகவினர் மீது வீண் பழியை சுமத்தி வருவது தொடர்கதையாக கொண்டுள்ளார். இதுபோன்று அவர் பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா, தனது உறவினர்கள் யாரையும் அரசியலுக்கு அழைக்க வில்லை. சேர்க்கவில்லை. அப்படி செய்வதாக இருந்தால், தீபாவை எப்போதோ அழைத்து வந்திருப்பார். ஆனால், சசிகலாவை கடந்த 30 ஆண்டுகளாக உடன் வைத்திருந்து, அரசியல் குறித்து கற்று கொடுத்துள்ளார். அவரும் அறிந்து இருக்கிறார்.
சில நாட்கள் பிரிந்து இருந்த சசிகலாவை மீண்டும், கட்சியில் இணைத்து கொண்டதும் ஜெயலலிதாதான். இது அதிமுகவினர் அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது, மீண்டும் மீண்டும் தன்னை யாரோ மிரட்டுவதாக பொய் சொல்லிவரும் தீபா என்ன ஆதாயம் தேடுகிறார் என தெரியவில்லை.
அதேபோல் நடிகர் கமல், தனியார் டிவிக்கு பேட்டி அளித்தபோது, அரசியலில் மாற்றம் வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார். அவருக்கு சினிமா மட்டும் தொழில் அதை மட்டும் பார்த்தால், போதும்.
சினிமாவுக்கு கனவும், கற்பனையும் தேவை. அந்த கனவையும், கற்பனையையும் சினிமாவில் மட்டும் கமல் செலுத்த வேண்டும். தேவையில்லாமல், அரசியலில் செலுத்துவது சரியானது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.