இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறையில் ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த அதிகாரிகள் இருந்தனர். தற்போது, அது பொய், புரட்டு, புளுகுன்னிகளின் ராஜ்யமாக அது விளங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை! இதனை கூறும்போது நமக்கே கூசுகிறது, மனம் வேதனைப் படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் படுகொலையை திசைத்திருப்ப அப்போதைய காவல்துறை தலைவர் அவதூறான அறிக்கையை வெளியிட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே நிலையைத் தான் தொடர்ந்து காவல்துறை பின்பற்றி வருகிறது. சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக, அந்த அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்து பொய் வழக்குப் போட்டது. அதுபோல, கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி காந்தி பூங்காவில் உட்கார்ந்து பொது அமைதிக்கு எதிராக சதி செய்ததாக மாநிலப் பொறுப்பாளர்கள் கிஷோர், சிங்கை பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் குணா, சதீஷ், ஜெய்சங்கர் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாநிலப் பொறுப்பாளர்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகாரிகள் உடன் இருக்கிறார்கள். காவல்துறை குறிப்பிடும் நாளில் அவர்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்போதோடு அவர்களோடு இருந்த காவல்துறை அதிகாரிகளின் பயணப்பதிவும் உள்ளது. இப்படியிருக்க பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கோவையில் ஜுன் 7ஆம் தேதி நடைபெற உள்ள இந்து முன்னணியின் 7வது மாநில மாநாட்டை சீர்குலைக்க காவல்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகம் எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதிகளின் சதிகள் தலைவிரித்தாடுகிறது. அதுபோன்ற குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தை ஏவ தயக்கம் காட்டும் காவல்துறை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இலக்காவது ஏன்? சென்னையிலும், கோவையிலும் தொடுத்துள்ள வழக்குகளால் காவல்துறை நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. தமிழக அரசிற்கு தவறான வழிகாட்டுதலை தரும் அந்த அதிகார வர்க்கத்தின் இதுபோன்ற செயல்களால் தமிழக அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீதும் மக்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரப்பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சட்ட ஒழுங்கு முதலானவற்றில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. ஊழலும், ஒழுங்கினமும், பயங்கரவாதமும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது. தமிழக முதல்வர் தனது நிலையை உணர்ந்து, நியாய உணர்வுடன் செயல்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் இந்து முன்னணியினர் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற தமிழக முதல்வர் உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.