Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர். குறிப்பாக கும்பாபிஷேக நிகழ்வின் போது வானத்தில் கருடன் வட்டமிட்டதைக் கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

பாடல்பெற்ற சிவத் தலங்களில் ஒன்று சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள விஜயகணபதி, சுப்பிரமணியர், மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் முதலான சந்நிதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து சந்நிதிகளும் தூய்மையாக்கப் பட்டு, விமானங்களில் வண்ணம் தீட்டப்பட்டு பளபள வெனக் காட்சி தந்தன.

கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷி கோபுரம், மேற்கு ஐந்துநிலை கோபுரம் ஆகியவற்றிலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1ஆந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன! 2-ஆம் தேதி கோ பூஜை, கஜபூஜை, கன்யாபூஜை, சுமங்கலி பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப் பட்டது. பக்தர்கள் நமச்சிவாய கோஷம் முழங்க, குடமுழுக்கு வைபவத்தைத் தரிசித்து மகிழ்ந்தனர். பக்தர்கள் மீது குடமுழுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

https://dhinasari.com/wp-content/uploads/2020/02/maruntheeswarar-temple-kumbabishekam.mp4

குடமுழுக்கு வைபவத்தின் போது, வானில் இரண்டு கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்கியதைக் கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். மேலும், கோபுர கலசங்கள் மீது டிரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்த கும்பாபிஷேக நிகழ்வில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இன்று இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version