தி.க.வின் தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை

சென்னை: திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ள தாலியறுக்கும் நிகழ்வை தடுத்து நிறுத்த, காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், புனிதமான நாளில் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் தி.க.விற்கு பாடம் புகட்டுவோம்.. தமிழ்ப் புத்தாண்டு இந்துக்களுக்கு புனிதமான நாள். உலகின் தலைசிறந்த பாரம்பரியத்தைக் கொண்ட இந்து தர்ம வாழ்க்கையின் அடையாளமாக விளங்கும் தாலியை அறுத்து, இந்துக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்ட நினைக்கும் திராவிடர் கழகத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருவரின் நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதனை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. திராவிடர் கழகமானது இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் மாட்டிறைச்சி பிரியாணி விருந்து என அறிவித்திருப்பதையும் கண்டிக்கிறோம். ஏப்ரல் 14 சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள். இந்த நாளில் சமுதாய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்து வரும் வேளையில், மக்களிடையே பகையை வளர்க்கவும், தங்களை விளம்பரப்படுத்த கீழ்த்தரமான காரியத்தை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஜனநாயக ரீதியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்க இந்து மதத்தின் மீதும், புனிதமான தாலியின் மீதும் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் வீடுகளில் ஈ.வெ.ராவின் படத்தை கிழித்து தக்க மரியாதை செய்து தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுகிறது. கோவையில் 8.4.2015 அன்று நடைபெற இருந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்துக்கு, இந்து முன்னணியின் எதிர்ப்பை அடுத்து காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனை வரவேற்கிறோம். இதுபோல திராவிடர் கழகத் திடலில் நடைபெறும் நிகழ்வும் தடுத்து நிறுத்திட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

  • என்று அவர் கூறியுள்ளார்.