சென்னை முக்கிய எதிர்க்கட்சியினர் இன்றி பேரவையை நடத்துவது ஜனநாயக விரோதம், தேமுதிக உறுப்பினர்கள் செய்த குற்றம்தான் என்ன என்று கேள்வி எழுபியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகச் சட்டப் பேரவையில் 31-3-2015 அன்று பேரவைத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆறு பேரை அடுத்து நடைபெறவுள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நீண்ட தொடர் முழுவதும், அதற்குப் பிறகு அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி பத்து நாட்களுக்கும் பேரவையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். இந்த முடிவுக்கு அனைத்து எதிர்க் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையைக் குறைக்கக் கேட்டுக் கொண்டும், பேரவைத் தலைவர் அதனைப் பிடிவாதமாக ஏற்கவில்லை. தேமுதிக உறுப்பினர்கள் மீது இந்தப் பெரிய கடுந் தண்டனைக்கு, அவர்கள் இழைத்த குற்றம் தான் என்ன? ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, 19-2-2015 அன்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பேசுகையில், “சட்ட மன்றப் பேரவையில் அனுமதி சீட்டு வாங்கி விட்டு ஒரு சிலர் அவைக்கு வருவதே இல்லை. அதில் ஒருவர் முதியவர். மற்றொருவர் சிட்டிசன் – “சிட்டிசன்” என்றால் குடி மகன்” என்று பேசினார். தே.மு.தி.க. உறுப்பினர்கள், “குடி மகன் என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றார்கள். அவை முன்னவரான நத்தம் விசுவநாதன் குடி மகன் என்று யாரையும் குறிப்பிட்டுப் பேச வில்லை என்றார். பின்னர் ஆளுநர் உரையில் பேசிய தேமுதிக உறுப்பினர், மோகன்ராஜ், ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தையை உச்சரித்த நிலையில், முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக வினர் அனைவரும் ஒரு சேர எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதாவைப் பற்றித் தேமுதிக உறுப்பினர் குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதோடு, அவரையும் வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவையிலே குழப்பமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே பேரவைத் தலைவர் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினார். பின்னர் நத்தம் விசுவநாதன் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும், அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தேமுதிக கொறடா சந்திரகுமார் உட்பட அனைவரையும் அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும், உரிமைக் குழுவுக்கு அதனை அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். தி.மு. கழகச் சட்டமன்றக் குழுத் தலைவர், மு.க. ஸ்டாலின் “அடுத்த கூட்டத் தொடர் வரை நீக்கம் என்பதைக் குறைக்க வேண்டும்” என்றார். பின்னர் நத்தம் விசுவநாதன், தேமுதிக உறுப்பினர்களை இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்தார். இதற்குப் பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. உரிமைக் குழுவில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, கழகத்தின் சார்பில் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தம்பி கம்பம் ராமகிருஷ்ணன் இதுவரை வழங்கப்பட்ட தண்டனையே போதும், இனிமேலும் தண்டிக்க வேண்டாம் என்று கூறிய கருத்துகளை ஏற்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 31-3-2015 அன்று பேரவையில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேரும், அடுத்த கூட்டம் தொடங்கி பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அதுவரை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையும், சலுகைகளையும் பெற இயலாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, முக்கிய எதிர்க் கட்சி இல்லாமல் பேரவையை நடத்துவது ஜனநாயக முரண் என்பதை உணர்ந்து இனியாவது அ.தி.மு.க. மனம் திருந்தி, பெருந்தன்மையோடு தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதான தண்டனையைக் குறைத்து, தங்களுக்கும் பேரவை நாகரிகத்தைப் போற்றிடத் தெரியும் என்பதை நிரூபித்துக் கொள்ள முன்வருவார்களா என்பதற்காகத் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்
எதிர்க்கட்சியின்றி பேரவை நடத்துவது ஜனநாயக விரோதம்: தேமுதிக செய்த குற்றம் என்ன?: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari