சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு குறித்து விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இப்படி ஒரு சலுகையை தமிழக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிக்கப்பதாகக் கூறி சூரிய ஒளி மின்சக்திக் கொள்கையை கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் வீதம் இதுவரை 2000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித்திறன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இந்த கொள்கையின்படி இதுவரை 115 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்னுற்பத்திக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த கொள்கையின்படி தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6.48 வீதம் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகளை பெற்றது. ஆனால், இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்ததையடுத்து இந்த திட்டத்தையே தமிழக அரசு கைவிட்டது. அதைத் தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் தனியாரிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மொத்தம் 5366 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுதொடர்பான ஆணை கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ஓராண்டுக்குள், அதாவது வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைத்து மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் இந்த விலை வழங்கப்பட வேண்டும். செப்டம்பருக்கு பிறகு மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படுவது தான் வழக்கமாகும். இந்த நிலையில், சூரிய ஒளி மின்னுற்பத்தியை தொடங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி தனியார் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை மின்வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மின்னுற்பத்தியை தொடங்கும் சூரிய ஒளி மின் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படும். இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் மூத்த உறுப்பினர் நாகல்சாமி, காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மை அடிப்படையில் மின்னுற்பத்தி தொடங்குவதற்கான கெடுவை நீட்டிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது. சூரியஒளி மின்நிலையம் அமைப்பதற்கான செலவு 14% குறைந்திருப்பதால், இனி புதிதாக ஒப்பந்தம் செய்து மின்னுற்பத்தி தொடங்கும் நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.84 மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதைமீறி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கொள்முதல் விலை வழங்க ஒப்புக்கொண்டிருப்பதால் மின்சார வாரியத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 5633 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே விலையில் வாங்குவதாக வைத்துக் கொண்டால் மின்வாரியத்துக்கு ரூ.23,000 கோடி இழப்பு ஏற்படும். சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு இனிவரும் காலங்களில் குறையும் என்பதால் இந்த இழப்பு மேலும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக மின்சாரத்துறை வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்குவதற்காக அவற்றிடம் இருந்து ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் கையூட்டு பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வகையில் மட்டும் சுமார் ரூ.850 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வாரியம் தான் ஆட்சியாளர்களுக்கு பணம் கொழிக்கும் அட்சயப் பாத்திரமாக திகழ்கிறது. ஆட்சியாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சுரண்டியதால் மின்சார வாரியம் இன்று ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையுடன் தள்ளாடுகிறது. இந்த நிலையில், மேலும் ரூ.23,000 கோடி இழப்பை மின்வாரியத்தால் தாங்க முடியாது. எனவே, தனியார் சூரியஒளி மின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை அரசு ரத்து செய்ய வேண்டும். மின்சார வாரியத்தை புதைகுழியில் தள்ளும் இம்முடிவு குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் கவலையளிக்கின்றன. மின்வாரியத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய ஆணையம், அனைத்துத் தவறுகளுக்கும் துணை போவது கண்டிக்கத்தக்கது. தகுதியில்லாத, நேர்மையில்லாத, ஆட்சியாளர்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அதிகாரிகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். எனவே, தற்போதுள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைக் கலைத்துவிட்டு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்