சஸ்பெண்ட் ஆன தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் விடுதி, அலுவலகங்களுக்கு பூட்டு

சென்னை: பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் விடுதி அலுவலகங்களுக்கு பூட்டு போட்டப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடந்த விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் பற்றி தேமுதிக எதிர்க்கட்சி துணைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் விமர்சித்தார். அப்போது ஏற்பட்ட அமளியில் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலர் பேரவைத் தலைவரை முற்றுகையிட்டனர். அப்போது அவைக் காவலர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், தேமுதிகவைச் சேர்ந்த வி.சி. சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ், சி.எச்.சேகர், வெங்கடேசன், தினகரன், பார்த்திபன் ஆகிய ஆறு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அடுத்த கூட்டத்தொடரின் 10 நாட்கள் வரை இடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தக் காலத்தில் அவர்கள் எம்.எல்.ஏ. என்ற முறையில் எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுகைகளையும் தகுதிகளையும் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவை செயல்படுத்தும் நடவடிக்கையில் சட்டப்பேரவை செயலகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னை அரசினர் தோட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள 6 தேமுதிக பேரவை உறுப்பினர்களின் வீடுகளையும் காலி செய்யும்படி கூறினார். அதன் பிறகு இப்போது அந்த வீடுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதேபோன்று அவரவர் தொகுதியில் உள்ள அலுவலகங்களுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் 6 சட்டப் பேரவை உறுப்பினர்களும் விடுதி அறை மற்றும் அலுவலகங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.