ஊழல், மது, புகையிலைக்கு எதிராக பிரச்சார இயக்கம்: பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஊழல் மது, புகையிலைக்கு எதிராக பிரசார இயக்கம் நடத்துவது என்று பாமக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை மந்தைவெளியில் இன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் அப்துல் அலி சையது, இணைப்பொதுச் செயலாளர் இசக்கி படையாச்சி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதை மத்திய சுகாதாரத் துறை ஒத்திவைத்திருப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ‘‘புகையிலையின் பாதிப்பு குறித்து இந்தியாவில் எந்த விதமான ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதால், புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை தான் காரணம் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. எனவே, இதுகுறித்து தெளிவான முடிவுக்கு வரும் வரை எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் தலைவரும், பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான திலிப்குமார் காந்தி பரிந்துரை செய்ததற்கும், ‘‘ புகை பிடிப்பதால் தான் புற்றுநோய் வருகிறது என்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களில் பலருக்கு இதுவரை புற்றுநோய் வரவில்லையே ஏன்? புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றால், சர்க்கரை நோயை உருவாக்குகிறது என்பதற்காக வெள்ளை சர்க்கரையை தடை செய்யப்பட்டதா? புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவது தேவையற்றது’’ என்று குழு உறுப்பினரும், பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான ஷியாம்சரண் குப்தா கூறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஷியாம் பீடி என்ற பீடி நிறுவனத்தின் உரிமையாளரான ஷியாம் சரண் குப்தாவை புகையிலையின் தீமைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினராக நியமித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம் பிரசாத் சர்மா, தினமும் 60 சிகரெட் பிடிக்கும் முதியவர்கள் கூட இன்னும் உயிருடன் வாழ்கிறார்கள்…. புகையிலைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை என்று கூறியதற்கும் கூட்டத்தில் பேசிய மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை உடனே வெளியிடவேண்டும் என்றும் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ள நிலையில் 2015&16ஆம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஊழல் அதிகரித்து வருவது குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தை சீரழிக்கும் ஊழல், மது ஆகியவற்றின் தீமைகள் குறித்தும், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் முடிவை மத்திய அரசு ஒத்தி வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழகம் முழுவதும் அடுத்த 30 நாட்களுக்கு பரப்புரை இயக்கம் மேற்கொள்வது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.