சென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்: கோளரங்கில் மாணவர்கள் உற்சாகம்

lunar-eclipse சென்னை: இன்று உலகின் பல பகுதிகளில் தெரிந்த சந்திர கிரகணத்தை, சென்னையிலும் கண்டு ரசித்தனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் சந்திர கிரணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கிரணத்தை பார்வையிட்டனர். தமிழகம் முழுவதும் வெறும் கண்களாலும் இரவு, 8:30 மணி வரை ஏராளமானோர் இந்த சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். இருப்பினும், சென்னையில் மேக மூட்டமாக இருந்ததால், தெளிவாகக் காண முடியவில்லை. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாகக் கண்டுகளித்தனர். வட அமெரிக்கா, ஹாவாய் தீவுகள், ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, கிழக்கு ஆசியா என பல இடங்களில் மக்கள் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணம் மாலை 3:45 மணிக்கு துவங்கி 7:14 மணி வரை நீடித்தது. மாலை 5.27க்குத் தொடங்கி முழு கிரகணம் சுமார் நான்கரை நிமிடம் நீடித்தது.