அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலையில் திடீர் நடவடிக்கை

agri-krishnamurthy சென்னை: மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று இரவு விசாரணைக்காக ஆஜரானார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. போலீஸார் அவரிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 5.00 மணியளவில் அவரைக் கைது செய்த போலீசார் அவரை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன், வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில், நெல்லையைச் சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்று தகவல் வெளியானது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு, வேளாண் துறை அமைச்சகம் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. தமிழக வேளாண் துறையில் ஓட்டுநர் பணி நியமனம் செய்த போது கொடுக்கப்பட்ட நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதன் பின்னணியில் துறையைக் கவனித்து வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் முத்துக்குமாரசாமியை மிரட்டியதாகக் கூறப்பட்டது. பலவித போராட்டங்களுக்குப் பின்னர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.