ஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் மூன்று நாட்களுக்கு முன் உருவான ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்காது என்றும் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. ஆம்பன் புயல் தற்போது அதி தீவிர சூப்பர் புயலாக மாறியுள்ளது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் வரும் 20ம் தேதி கரையை கடக்கிறது.
இந்த நிலையில் ஆம்பன் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அங்கு கடல் அலைகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் மேற்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளிலும் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ராமநாதபுரம், பாம்பன் பகுதிகளில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்க கடல் பகுதியில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொங்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இதனால் மழை பெய்யும். அங்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்யும்.
சென்னையில் இன்னும் சில நாட்களுக்கு சாரல் மழை பெய்யும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், நாகப்பட்டடினம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.