கோரோனா பரவல் குறித்த அச்சம் அதிகமாக இருக்கும் சூழலில், பல்வேறு கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் வணிக வளாகங்களும் அடைக்கப் பட்டன. அதைப் போல், டாஸ்மாக் கடைகளும் அடைக்கப் பட்டன. ஆனால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டதால், குடிமகன்கள் மட்டுமின்றி அரசும் கூட ஆடித்தான் போனது.
மக்களின் உணர்வு பூர்வமான கோயில்கள் மத வழிபாட்டுத் தலங்களே அடைக்கப் பட்டிருந்த சூழலில், டாஸ்மாக் கடைகளை திறப்பதில் ஆர்வம் காட்டியது அரசு. அப்போது, கொரோனா தொற்றுப் பரவல் குறித்து எச்சரிக்கை செய்த சமூக ஆர்வலர்கள், மது வாங்குவதில் காட்டும் முறைகேடுகள் குறித்து குறிப்பிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆயினும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்து டாஸ்மாக் மது விற்பனைக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியின் பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விர் என்று விற்பனை நடைபெறுகிறது. எவ்வளவுதான் சமூக இடைவெளி, பாதுகாப்பு முகக் கவசம் என கடைப்பிடித்தாலும், டாஸ்மாக் சென்று மது வாங்கி வந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்செந்தூரை அடுத்துள்ள மாவீரன் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவர் ஊரடங்கு காலங்களில் வேறெங்கும் செல்லவில்லையாம். டாஸ்மாக் திறந்த பிறகு நெல்லை – திருச்செந்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மட்டுமே 2 நாட்கள் சென்று வந்தாராம்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், டாஸ்மாக் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.