spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்காலமானார் பிரபல எழுத்தாளர் ‘கடுகு’ என்ற பி.எஸ்.ரங்கநாதன்!

காலமானார் பிரபல எழுத்தாளர் ‘கடுகு’ என்ற பி.எஸ்.ரங்கநாதன்!

- Advertisement -
kadugu psranganathan
kadugu psranganathan

கடுகு, அகஸ்தியன் என்ற இரு புனைபெயர்களைக் கொண்டு தமிழ் இலக்கிய உலகில் நிறைய கதைகள் கட்டுரைகள் எழுதியவரும், சிறுகதைத் தொகுப்புகள், நகைச்சுவை கதைத் தொகுப்புகள் அளித்தவருமான எழுத்தாளர் பிஎஸ் ரங்கநாதன் ஜூன் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு தமது 89 வது வயதில் காலமானார்.

கமலா என்ற கதாபாத்திரத்தைக் கொண்டு, தொடர் நகைச்சுவைக் கதைகள் எழுதியவர். கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் என்ற தொகுப்பு மிகவும் புகழ்பெற்றது. கமலாவும் நானும் என்ற சிறுகதைத் தொகுப்பை தமது 80 ஆவது வயதில் தொகுத்து வெளியிட்டார். ஐந்து தலைமுறைகளாக நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு பதம் பிரித்து நூலாக்கினார். எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம், பதங்கள் பிரித்து, பொருள் தரும்படி அதனை வெளியிட்டார். விஷ்ணு சஹஸ்ரநாமம் பெரியஎழுத்தில் அச்சில் கொண்டு வந்து பலருக்கு அளித்தார்.

ரொட்டி ஒலி, கமலா டியர் கமலா போன்ற தொகுப்புகள் இவரை இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவில் வைத்திருக்கும்.

விளம்பரப் பிரிவில் காபிரைட்டராக இருந்து, மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அதிகம் எழுதிக்குவித்தார். தினமணிக் கதிர், குமுதம், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, சாவி உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் எழுதிக் குவித்தவர்.

தாம் மிகச் சிறியவர் என்று பொருள் படும் வகையில் குறுமுனி அகஸ்தியன் பெயரையும், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ற வகையில் சிறிது எனும் பொருள் படும்படி கடுகு என்ற புனை பெயரையும் வைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுவார். அவர் எழுதிய நகைச்சுவை உரைநடை… கமலாவும் கத்திரிக்காய் கூட்டும் தொகுப்பில் இருந்து சிறு பகுதி…

கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்!
– கடுகு –

என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களில் ஒன்று, தினமும் என்னைக் கேட்டு, எனக்கு இஷ்டமான சமையலைச் செய்வது. அதே சமயம் அவளுக்கு இஷ்டமான சமையலாகவும் அது அமைந்து விடும். எப்படி?

நேற்றுக் காலை நடந்த சம்பாஷணையை அப்படியே தருகிறேன். கமலாவின் ‘நோஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும்!

‘‘ஏன்னா, உங்களைத்தானே, இன்னிக்கு என்ன சமையல் செய்யட்டும்? வீட்டில் கத்தரிக்காய்தான் இருக்குது. கூட்டு செய்யட்டுமா?’’ என்று கேட்டாள்.

kaduku books
kaduku books

‘‘கூட்டா கமலா… வேண்டாம். எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு செய்யேன்’’ என்றேன்.

‘‘எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புதானே, செய்துடறேன். ஆனால் ஓண்ணு, அப்புறம் ‘எங்கம்மா செய்யறமாதிரி இல்லை’ அப்படி இப்படின்னு ஆடக் கூடாது’’

‘‘வாயைத் திறக்காமல் சாப்பிடறேன்!’’

‘‘இல்லே, இப்படித்தான் சொல்வீங்க, அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க… எண்ணெய்க் குழம்பு சமாசாரமே வேண்டாம்.’’

‘‘அப்படியானால் கத்திரிக்காயைச் சுட்டுப் புளி மசியல் செய்யேன்.’’

‘‘ஐயோ மசக்கையே! கேஸ் அடுப்புலே கத்தரிக்காயைச் சுட முடியுமா? அதற்குக் கரி அடுப்பு வேணும். வருஷத்திலே ஒரு நாள் கத்தரிக்காயைச் சுடுவதற்கு நான் கரி அடுப்பையும் ஒரு மூட்டைக் கரியையும் கட்டிக் காப்பாத்த வேண்டுமா?…

உங்க அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பை வெச்சுண்டு இருக்கா… ஆயிரம் சம்பாதிச்சாலும் கேஸ் அடுப்பு வாங்க அவளுக்கு மனசு வராது… அக்காகிட்டே சீராடப் போகும் போது தினமும் சுட்டு மசியல் பண்ணிச் சாப்பிட்டு விட்டு வாங்க…’’

‘‘போகட்டும் கமலா, பொடி போட்டுக் கறி பண்ணிடு. அட்டகாசமாய் இருக்கும்.’’

‘‘வீட்டைத் தலைகீழாத் திருப்பினால் கூட ஒரு பிடி தனியா கிடையாது. நானும் நாலு நாளாகத் தனியா வாங்கிண்டு வாங்கோன்னு கத்திண்டு இருக்கேன். தனியா, சேர்ந்தான்னு பேத்தல் சிலேடை ஜோக் அடிச்சுண்டு மசமசன்னு உட்கார்ந்துண்டு இருந்தால் எப்படி பொடி போட்டுக் கறி பண்றது?’’

‘‘இப்போ என்னைக் கடைக்குத் தொரத்தாதே, கமலா… அப்போ, கத்தரிக்காயை வெறுமனே வதக்கி வச்சுடு.’’

‘‘வெறும் வதக்கல்தானே, ஆகா, பண்ணிடறேன். ஆனால் உங்கள் பொண்ணு இருக்காளே, ராங்கிக்காரி! வாயிலே வெக்க மாட்டாள். நறுக்கா இலையிலேருந்து ஒதுக்கிடுவா… இந்தப் பிடிவாதமெல்லாம் அப்படியே உங்கம்மா தான்.

கல்யாணம் ஆன புதுசுலே இப்படித்-தான் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுட்-டேன். அப்படியே விஷம் மாதிரி அதை ஒதுக்கி வெச்-சுட்டதும் இல்லாம ஒரு ‘பாட்டு’ வேற பாடினாளே… எத்தனை வருஷமானாலும் மறக்குமா? அப்போ உங்கம்மா பாடினாள்… இப்போ உங்க பொண்ணு பாடுவா…

தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டைக் கேட்கணும்னு என் தலையிலே எழுதியிருந்தால் அதை எந்த ரப்பராலும் அழிக்க முடியாது.’’

‘‘இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே, கமலா… கத்தரிக்காய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.’’

‘‘ஐயோ… இந்த மனுஷருக்கு வர்ற யோசனையைப் போய் யாரிடம் சொல்வேன்! நேத்துச் சாயங்காலம் உங்க ஆபீஸ் பிரண்ட்ஸை இழுத்துண்டு வந்து காப்பி போடச் சொன் னீங்க… அதனால் நேத்து பால் ஷார்ட்… தயிர் தோய்க்கவே இல்லை.

சாப்பிடறதுக்கே மோர், ஒன்ஸ்மோர் தான்! இந்த அழகில் மோர்க் குழம்பு, தயிர்ப் பச்சடி என்று சொல்றீங்க…!’’

‘‘விடு கமலா ரஸவாங்கி பண்ணிடேன்.’’

‘‘கோலி குண்டு சைஸ்லே கத்தரிக்காய் வாங்கிண்டு வந்திருக்கீங்க. நீள கத்தரிக்காயில்தான் பண்ண முடியும். குண்டு கத்தரிக்காயில் பண்ணால் வாயில் வைக்க வழங்காது. எனக்கென்ன பண்ணிடறேன்…’’

‘‘ரஸவாங்கி வேண்டாம் கமலா. கத்தரிக்காய்க் கூட்டு பண்ணிடு’’

‘‘கத்தரிக்காய் கூட்டா… ஊம், உங்க இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு பண்றேன். உங்களுக்குப் பிடிச்சதைப் பண்றதை விட எனக்கு வேறு என்ன வேலை?’’

இப்படியாக நேற்று காலை ‘என்’ (அதாவது கமலாவின்) இஷ்டப்படியே கத்தரிக்காய் கூட்டு செய்தாள் கமலா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe