July 28, 2021, 1:09 pm
More

  ARTICLE - SECTIONS

  மோடி 2.0 : ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை!

  பல தசாப்தங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர்.

  narendra modi
  narendra modi

  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக – 2 ஆட்சியின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தினை தமிழில் முழுமையாக மொழி பெயர்த்துள்ளேன். பார்த்துப் படித்து, அன்பர்கள் தமிழக மக்களுக்குச் சென்றடையுமாறு இதனைக் கொண்டு சேர்க்கக் கோருகிறேன்.

  • நாராயணன் திருப்பதி
   (செய்தித் தொடர்பாளர், பாஜக.,)
  modi namaskar
  modi namaskar

  அன்பிற்குரிய நண்பர்களே,

  சென்ற வருடம் இதே நாளில் இந்திய ஜனநாயக வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். இந்த அத்தியாயத்தின் முக்கிய பங்கு உங்களுடையதே. இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் உங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

  சாதாரண சூழ்நிலை இருந்திருந்தால், நான் உங்கள் மத்தியில் இருந்திருப்பேன்.ஆனால் உலகளாவிய கொரோனா தொற்றால் நிலவும் சூழ்நிலையின் காரணமாக , இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் நல்லாசிகளை நாடுகிறேன். கடந்த ஒரு வருடத்தில் உங்களின் அன்பு, நல்லெண்ணம் மற்றும் தீவிர ஒத்துழைப்பு ஆகியவைதான் எனக்குப் புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளன. இந்த கால கட்டத்தில் நீங்கள் வெளிப்படுத்திய ஜனநாயகத்தின் வலிமை ஒட்டுமொத்த உலகுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

  2014-ம் ஆண்டு மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர். நீங்கள் கொள்கை மற்றும் அமைப்பை மாற்றுவதற்காக வாக்களித்தீர்கள். கடந்த ஐந்து வருடங்களில் ஊழல் மற்றும் கொள்கை மந்தநிலை என்ற புதைகுழியிலிருந்து இந்த நாடு விடுபட்டது. அந்த ஐந்து வருடங்களில் கடையனையும் கடை தேற்றும் அரசு நிர்வாகத்தினால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியது.

  மேலும், அதே ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்த அதே வேளையில், அனைவருக்கும் வங்கி கணக்கு, இலவச எரிவாயு திட்டம், மற்றும் தடையில்லா மின்சார இணைப்பு, அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் போன்ற திட்டங்களின் மூலம் ஏழை மக்களின் கௌரவத்தை, கண்ணியத்தை உயர்த்தினோம்.

  கடந்த ஆட்சி காலத்தில், இந்தியாவை புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்று வதற்காகவே 2019-ம் ஆண்டு மக்கள் வாக்களித்தனர். கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றன.

  மேலும், கடந்த ஆட்சி காலத்தில், நுண்ணிய தாக்குதல்களும், வான் வழி தாக்குதல்களும் வெற்றிகரமாக நடத்திய நிலையில், ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம், நாடு முழுதும் ஒரே ஜி எஸ் டி வரி, பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த குறைந்த பட்ச விலை உட்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஐந்து வருட ஆட்சி நாட்டினுடைய பல தேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

  இந்தியாவிற்கான மிக பெரிய கனவை, எதிர்பார்ப்பை நனவாக்குவதற்கான தீர்ப்பே 2019ல் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியது. அந்த கனவுகளின், எதிர்பார்ப்புகளின் பிரதிபலிப்பே, கடந்த ஒரு வருட ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள். சாமான்ய மனிதனின் உந்துதலில் வெளிப்பட்ட மக்கள் சக்தியே தேசத்தின் திறமையாக, சக்தியாக ஒளிர்கிறது. கடந்த ஒரு வருடத்தில் எடுக்கப்பட்ட பல தீர்க்கமான நடவடிக்கைகள் தேசத்தினுடைய பல எதிர்பார்ப்புகளை, தேவைகளை, இலக்கை பூர்த்தியடைய செய்யும் படிக்கட்டுகளாக இருந்தன.

  modi speech2
  modi speech2

  இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தில், ஒவ்வொரு சமுதாயமும், ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளார்கள். அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, நம் தேசத்திலும், சர்வதேச அளவிலும், சமூக ரீதியாக ,பொருளாதார ரீதியாக அனைத்து திசைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

  கடந்த ஒரு வருடத்தில், சில முக்கிய முடிவுகள் விவாதங்களாக இருந்ததனால் அந்த சாதனைகள் நம் நினைவுகளில் வட்டமிட்டுக்கொண்டிருப்பது இயற்கையே. தேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 நீக்கம் அல்லது பல நூற்றாண்டுகளாக சர்ச்சையில் இருந்த ராமர் கோவில் கட்டுவது குறித்த மகிழ்ச்சியான தீர்ப்பு அல்லது சமூக சீர்திருத்தத்திற்கான உடனடி முத்தலாக் தடை சட்டம் அல்லது இந்தியாவின் கருணைக்கு அடையாளமாக விளங்குகின்ற குடியுரிமை சட்டம் – அனைத்து சாதனைகளுமே நம் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது.

  அடுத்தடுத்து மேற்கொண்ட இந்த முடிவுகளுக்கிடையில், மேலும் பல முடிவுகளும், மாற்றங்களும் இந்தியாவின் முன்னேற்ற பயணத்திற்கு அளித்துள்ள உத்வேகமானது, புதிய குறிக்கோள்களை நோக்கிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளது. முப்படைகளுக்கும் தலைமை தளபதி நியமனமானது, பாதுகாப்பு படைகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ககன்யான் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த காலகட்டத்தில் ஏழை மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டுக்கே முன்னுரிமை கொடுத்தோம்.

  தற்போது, ஒவ்வொரு விவசாயியும் பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ ஊக்க நிதி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ்,72,000 கோடிக்கும் மேலான நிதி 9.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.

  கிராமங்களை சேர்ந்த 15 கோடி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் பெறும் வசதியை வழங்குவதற்காக நீர் ஆதாரத் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்) தொடங்கப்பட்டுள்ளது.

  நம் கால்நடைகளின் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக, ஐம்பது கோடிக்கும் அதிகமான கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

  இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், சிறு கடை வணிகர்கள் ஆகியோருக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் பெறுவதற்கான ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

  நீலப் பொருளாதாரதத்தை வலுப்படுத்த தனி துறை உருவாக்கப்பட்டு, மீனவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல், வர்த்தக நிறுவனங்களின் குறைகள் களைய, அகில இந்திய வணிகர் ஆணையம் உருவாக்கப்படும் என்று முடிவு
  செய்யப்பட்டுள்ளது. ஏழு கோடி சகோதரிகள் இணைந்துள்ள சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்,
  பிணையில்லா கடன் தொகை பத்து லட்சத்திலிருந்து இருபது லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  பழங்குடியின மக்களின் குழந்தைகளை கருத்தில் கொண்டு, மேலும் 450 ஏகலைவா குடியிருப்பு பள்ளிகளை தொடங்கு வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது மத்திய அரசு.

  பொது மக்கள் நலன் குறித்த பல்வேறு சிறப்பு சட்டங்களை உருவாக்கும் தீவிர முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. நமது பாராளுமன்றம், பணியாற்றும் நேரத்தில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. ஆகவே தான், வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டம், சீட்டு நிதி நிறுவன சட்ட திருத்தம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் போன்றவை விரைவில் இயற்றப்பட்டன.

  நகரங்கள் மற்றும் கிராமப்புரங்களுக்கு இடையே இருந்த வாழ்வியல் வேறுபாட்டை இணைத்துள்ளது நம் அரசின் கொள்கைகள். முதல் முறையாக, நகரங்களில் வசிப்பவர்களை விட கிராமங்களில் வசிப்பவர்கள் 10 விழுக்காடு அதிகமாக இணையதளத்தை உபயோகப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த பணிகளையும், முடிவுகளையும் இந்த ஒரு கடிதத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் விழிப்போடும், சிந்தனை
  கலந்த உணர்வுடனும் முடிவுகளை எடுத்துள்ளது நம் அரசு.

  நம் நாட்டின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை அடையும் நோக்கில், நாம் வேகமாக பயணித்து கொண்டிருந்த வேளையில் தான் கொரோனா தொற்று இந்தியாவையும் சூழ்ந்து கொண்டது.

  மிக பெரிய பொருளாதார பலத்தோடும், நவீன தொழில்நுட்ப சுகாதார கட்டமைப்போடும் பல நாடுகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிக மக்கள் தொகையோடு பல்வேறு சவால்களோடும் இந்தியா உள்ளது. கொரோனா இந்தியாவை தாக்கினால் இந்தியா உலகிற்கே மிகப்பெரிய பிரச்சினையாக அமையும் என்ற அச்ச உணர்வை பலர் வெளிப்படுத்தினார்கள். ஆனால் இன்று, இந்தியா குறித்த தங்களின் பார்வையை அனைத்து தேசத்தை சேர்ந்தவர்களும் மாற்றி கொண்டு விட்டார்கள். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், மற்ற வளமிக்க, செழிப்பான நாடுகளை ஒப்பிடுகையில், இது வரை நிகழ்ந்திராத வகையில் உங்களுடைய ஒன்று பட்ட கூட்டு திறனை, ஆற்றலை நிரூபித்து விட்டீர்கள்.

  modi speech

  கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் பணியாளர்களை கௌரவிப்பதற்காக, நம் பாதுகாப்பு வீரர்களை கௌரவிப்பதற்காக அனைவரும் இணைந்து கைதட்டியது, ஒற்றுமையோடு ஒன்று சேர்ந்து விளக்கை ஏற்றியது,ஊரடங்கு உத்தரவை விதிமுறைகளை மீறாமல் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைத்தது போன்ற பல்வேறு நிலைகளில் உங்களின் ஒத்துழைப்பானது மட்டுமே, சிறந்த, மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதம்.

  இந்த இக்கட்டான நேரத்தில், யாருக்கும் தொந்தரவு இல்லை என்றோ, சங்கடங்கள் நிகழவில்லையென்றோ கூறமுடியாது. நம் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த சகோதரர்கள், தொழிலாள சகோதரிகள், சிறு குறு தொழிற்சாலைகளில் பணியாற்று பவர்கள், சுமை வண்டி இழுப்பவர்கள், வியாபாரிகள், வர்த்தக சகோதரர்கள், சகோதரிகள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களின் துயரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்.

  ஆனால் இந்த இடர்பாடுகள் நம் வாழ்க்கையை நெருக்கடிக்கு தள்ளிவிடாது கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இது வரை கடைபிடித்த அதே பொறுமை கலந்த துணிச்சலோடு முன்னேறி செல்ல வேண்டும். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியா, கொரோனா தொற்றை சமாளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு இதுவே காரணம்.

  இது நீண்ட யுத்தமாக இருந்தாலும், நாம் வெற்றி பாதையில் சென்று கொண்டிருப்பதோடு, வெற்றி ஒன்றே நம்முடைய தீர்க்கமான இலக்கு. சமீபத்தில், அம்பான் புயலினால் சந்தித்தவர்களிடமிருந்து, நாம் உத்வேகத்தை பெறுவோம். அந்த புயலினால் ஏற்பட்ட சேதத்தை சமாளிக்க, அவர்கள் கடுமையாக பாடுபட்டார்கள்.

  இந்த சூழ்நிலையில், மற்ற நாடுகளும், இந்தியாவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து எப்படி மீளும் என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அதே வேளையில், கொரோனா தொற்றை, இந்தியா எப்படி ஒற்றுமையோடு எதிர்த்து உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கியதோ, அதே போல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் ஒற்றுமையோடு செயல்பட்டு மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. 130 கோடி இந்தியர்கள் உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்குவதோடு மட்டுமல்ல, ஊக்குவிக்கவும் முடியும்.

  நாம் நமது கால்களில் நிற்க வேண்டும் என்பதே தற்போதைய நிலை என்பதோடு, நம் சொந்த பலத்தினாலேயே பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.சுயசார்பு இந்தியா (தன்னம்பிக்கை) என்பதே ஒரே வழி. சமீபத்திய 20 லட்சம் கோடி ஊக்க தொகுப்பு அறிவிப்பானது, சுயசார்பு இந்தியாவை நோக்கி நாம் எடுத்து வைக்கும் மிக பெரிய நகர்வு. சுய சார்பு இந்தியா என்ற இந்த திட்டம் பல்வேறு புதிய வகையிலான சந்தர்ப்பங்களை ஒவ்வொரு இந்தியருக்கும் உருவாக்குவதோடு, வழிகாட்டும். நம் விவசாயிகள், பணியாளர்கள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் துவங்கும் இளைஞர்கள் ஆகியோருக்கு உதவிகரமாக இருக்கும். குடிமக்களின் கடும் உழைப்பால், திறமையால், அவர்கள் சிந்தும் வேர்வை துளிகளினால், இறக்குமதியை குறைத்து கொள்வதின் மூலம்
  இந்தியா சுயசார்புள்ள நாடாகும்.

  உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தியா, முன்னெப்போதும் இல்லாத வகையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளோடு, வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கூட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது என்பதை நானறிவேன். தேசத்தின் முன் பல்வேறு சவால்களும், பிரச்சினைகளும் உள்ளன. நான் இரவு பகல் பாராமல் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். என்னிடம் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நம் நாட்டிடம் எந்த குறைபாடுகளும் இல்லை. அதனால் தான் உங்கள் மீது, உங்களின் வலிமையின் மீது, உங்களின் ஆற்றலின் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்களும், உங்கள் ஆதரவும், உங்கள் ஆசிகளுமே என் உறுதியின் பின்னால் இருக்கும் சக்தி.

  modi 4
  modi 4

  உலகளாவிய இந்த பரவல் ஒரு நெருக்கடியிலான சூழ்நிலையை உருவாக்கி விட்டிருந்தாலும், நாம் மன உறுதியோடு இருக்க வேண்டிய நேரமிது. 130 கோடி இந்தியர்களின் வாழ்வையோ, எதிர்காலத்தையோ, எந்த பேரிடரும்,இடர்பாடுகளும் தீர்மானிக்க முடியாது. நடப்பதையும், நடக்க போவதையும் நாம் தான் முடிவு செய்வோம்.

  “நாம் முன்னேறி செல்வோம், வேகமாக வளர்ச்சியை நோக்கி முன்னேறுவோம்,நாம் வெற்றி பெறுவோம். நமது ஒரு கையில் கடமையை உணர்ந்து செயல்பட்டால் மறு கையில் வெற்றி உறுதியாக வந்து சேரும்” என்ற வார்த்தைகளுக்கேற்ப செயல்படுவோம். எப்போதும் நம் நாட்டின் வெற்றிக்காக, மீண்டும் உங்களை வணங்குகிறேன்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள். நலமோடு இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். விழிப்போடு இருங்கள். கவனமாக இருங்கள்.

  உங்களின் பிரதான சேவகன்.

  (தமிழில் : நாராயணன் திருப்பதி).

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,322FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-