இன்னும் சில அதிமுக அமைச்சர்கள் சிறை செல்வர்; மேகதாதுவுக்கு சோனியா தீர்வு தருவார்: விஜயகாந்த்

சேலம்: கர்நாடகா மேகதாதுவில் அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, தமிழக விவசாயிகள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; இன்னும் சில அதிமுக அமைச்சர்களும் சிறை செல்வர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார். தேமுதிக மகளிர் அணி சார்பில் சேலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தவறு எங்கு நடந்தாலும், அதனைத் தட்டிக் கேட்பதற்கு தான் தயாராக இருக்கிறேன். தற்போது பெங்களூரில் நடந்துவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் 10 நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். அந்த வழக்கில் அவர் சிறை செல்வது உறுதி. அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்குப் போய்விட்டார். விரைவில் இன்னும் சில அதிமுக. அமைச்சர்களும் அடுத்தடுத்து சிறைக்குப் போய்விடுவார்கள். கர்நாடகாவில் இப்போது நடப்பது காங்கிரஸ் ஆட்சி. ஏற்கெனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில்தான் காவிரி பிரச்சனை குறித்து பேசி தீர்வு காண முடிந்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியால் எதுவும் செய்ய முடியாது. நாம் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க வேண்டும். அவரை சந்திக்க ஒரு குழுவை நானே அழைத்துச் செல்லத் தயார். தில்லி சென்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பேசுவோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் சோனியாதான் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தித் தர முடியும். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அப்படித்தான் நடந்தது. நாம் இப்படி நாம் எடுத்துச் சொன்ன பிறகும் சோனியா காந்தி நம்மை சந்திக்க மறுத்தால் அவர் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டமும் நடத்துவோம். மேகதாது அணை பிரச்னையில் அரசியல் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டுமெனில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள் முறையிட வேண்டும்.. என்று பேசினார்.