
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வரும் டாக்டர் பீலா ராஜேஷ் அந்தத் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் புதிய சுகாதார துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜெ. ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலராக 2012 – 2019 வரை பதவியில் இருந்தார். அவரே தற்போது மீண்டும் சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார் .
தற்போது ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனோ தொற்றுநோய் தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதார துறை செயலராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது