சென்னை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம் என்று கூறிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடும் மீரா குமார் வெற்றிபெற திமுக சார்பில் வாழ்த்துகள் என்றும் கூறினார்.
திமுக., செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியது..
- எதிர் கட்சிகளின் சார்பில் நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டு இருக்கிறாரே…
அந்தக் கூட்டத்தில் திமுக சார்பில், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டார். குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் குறித்து திமுக எந்த உணர்வுடன் இருந்ததோ, அதேபோன்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் வெற்றிபெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பாஜக சார்பில் ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறாரே?
எதிர்க் கட்சிகளுடன் கலந்து பேசி, அதன் பிறகு தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம் என்று பாஜக வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதனை செயல் வடிவத்துக்குக் கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தினார்களே தவிர, இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அதனால் தான் எதிர் கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
- இந்திய குடியரசுத் தேர்தலில் மதச்சார்பு வேட்பாளருக்கு அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களே?
எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொடுத்திருப்பது மதச்சார்பு மிக்கவர்களுக்கு மட்டுமல்ல, தாங்கள் அனைவரும் வருமான வரித்துறை ரெய்டில் இருந்து தப்பிக்க வேண்டும், அமலாக்கத்துறையில் இருந்து தப்பிக்க வேண்டும், வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவு தெரிவித்து இருக்கிறார் என்பது தான் உண்மை.
- தமிழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை எழுப்புமா?
எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து முடிவு செய்துள்ள வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, அதனடிப்படையில் ஆதரவு கேட்க தயாராக இருக்கிறோம்.
- திமுக தலைவரின் வைர விழாவில் பங்கேற்ற நிதிஷ்குமார், பாஜக., வேட்பாளரை ஆதரிப்பது குறித்து…
தலைவரின் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி குடியரசுத் தேர்தலை முன்னிட்டு நடந்த விழாவல்ல. அது தலைவருக்காக மட்டுமே நடைபெற்ற விழா. அதனால் தான் அவர் விழாவில் பங்கேற்றபோதும் தலைவரைப் பற்றி மட்டும் பேசிவிட்டுச் சென்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.