spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்த வேண்டுமாம்: ஊடகங்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்த வேண்டுமாம்: ஊடகங்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஊழல் ஆட்சியை அம்பலப் படுத்த ஊடகங்கள் மவுனம் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர்  வெளியிட்ட அறிக்கையில்…

ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி எவ்வாறு நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரும்பிய திசையெல்லாம் ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள், சட்டப்பேரவை ஜனநாயகப் படுகொலை, அடக்குமுறைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு என மோசமான ஆட்சிக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ, அவை அனைத்துக்கும் ஒட்டுமொத்த உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இன்றைய தமிழக அரசு.
எங்கும் ஊழல்… எதிலும் ஊழல்
தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத அமைச்சகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும் காண முடியாது; வலைவீசித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஊழல் இல்லாத துறையை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசே வழங்கலாம். அந்த அளவுக்கு எங்கும் ஊழல்… எதிலும் ஊழல் என்ற அவல நிலை நிலவுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை முதல் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரம் வரை அனைத்துக் கொள்முதல்களிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது. அரசுத் துறையில் எந்த வேலை நடக்க வேண்டியிருந்தாலும் அதற்கான கையூட்டுத் தொகையை நிர்ணயித்து வெளிப்படையாகவே பேரம் பேசும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.  ஆற்று மணலில் தொடங்கி, கிரானைட், தாது மணல் வரை அனைத்து இயற்கை வளங்களும் ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன் கொள்ளையடிக்கப் படுகின்றன. இயற்கை வளங்கள் கொள்ளை பற்றி அரசிடம் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரசே வெளியிடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறது. அரசின் தடையை மீறி, தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கனிமங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. அரசே அதற்கான உதவிகளை திரைமறைவில் செய்து கொடுத்துவிட்டு அப்படி ஒரு கடத்தலே நடக்கவில்லை என்று சாதிக்கிறது. இந்த ஊழல்கள் தொடர்பாக 18 குற்றச்சாற்றுகள் கொண்ட பட்டியலை ஆளுனரிடம் அளித்து அவை குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி கோரியது. அதன்பிறகு கூட ஆட்சியாளர்கள் திருந்தவில்லை… மாறாக இது போன்ற புகார் பட்டியல்களை கிடப்பில் போடச் செய்வதற்கான வித்தைகள் எங்களுக்குத் தெரியும் என்று திமிராக கூறுகின்றனர்.
சட்டமன்றமா… புகழ்பாடும் மன்றமா?
மக்கள் மன்றமான சட்டப்பேரவை தனிநபர் புகழ் பாடும் அவையாக மாறி விட்டது. மன்னர்களின் அவையில் மன்னனை புலவர்கள் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வார்கள். தமிழக சட்டமன்றத்திலோ ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வரும், அவருக்கு துணையாக உள்ள அமைச்சர்களும் மக்களைச் சுரண்டி பொருள் ஈட்டுவதற்கு வாய்ப்பு அளித்ததற்காக ஊழல் குற்றவாளியின் இல்லாத பெருமையை 80 பக்க நோட்டுகளில் எழுதி வைத்துப் படிக்கிறார்கள். மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை; வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால் அடக்கி அமர வைக்கப்படுகிறார்கள். அவையில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் உறுப்பினர்களை அன்றைக்கு மட்டும் வெளியேற்றும் நடைமுறையிலிருந்து மாறி, அடுத்தக் கூட்டத் தொடர்வரைக்கும் நீக்கி வைக்கும் அளவுக்கு சட்டப்பேரவை ஜனநாயகம் தழைத்தோங்கியிருக்கிறது.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை 
சட்டப்பேரவையில் இப்படி என்றால், அவைக்கு வெளியே அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு, அதையும் தாண்டி குரல் கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துதல் என்று விதவிதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடுக்கடுக்காக அவதூறு  வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. என் மீதும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டது. இத்தகைய வழக்குகள் தொடரப்படுவதற்கு உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து வரும் போதிலும் அவதூறு வழக்கை மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தும் அரசின் அணுகுமுறை தொடர்கிறது.
நிர்வாகச் சீர்கேடு
தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா? எனக் கேட்கும் அளவுக்கு நிர்வாக சீர்கேடு நிலவுகிறது. திறமையான அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் அதிகாரிகளுக்கு மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஊழலுக்கு எதிரான அதிகாரிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன. இன்னொருபுறம் கடந்த 46 மாதங்களில் 8,000-க்கும் மேற்பட்ட கொலைகள், 81 ஆயிரம் கொள்ளைகள், 4700-க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
நாளொரு பூஜை, பொழுதொரு யாகம்! 
ஆட்சியாளர்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஊழல் குற்றவாளியை மீண்டும் முதல்வராக்க நாளொரு பூஜை, பொழுதொரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் மீறி, ஊழல் குற்றவாளியின் வழிகாட்டுதலில் தான் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் அறிவிக்கிறார்.மக்கள் தான் பாவம்….. இந்த கோமாளிக் கூத்துக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
நீதியை நிலைநாட்டுமா நீதிமன்றங்கள்?
இந்த அவல ஆட்சியை கண்டிக்க வேண்டிய பொறுப்பும், திருந்தாவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் விதைக்க வேண்டிய கடமையும் ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு உண்டு. அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் என்பதைப் போல ஊழல் செய்யும் ஆட்சியாளர்களை மக்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தண்டிக்க முடியும்; நீதிமன்றங்களால் தான் அப்போதைக்கு அப்போதே தண்டிக்கமுடியும். எனவே, ஊழல் குறித்த  வழக்குகளின் விசாரணையை விரைவாக முடித்து தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும்.
ஊடகங்கள் மவுனம் ஏன்? 
இன்னொருபுறம், ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளும், அவதூறு வழக்குகளும் கட்டவிழ்த்து விடப்படும் போதிலும் அதற்கு எதிராகவும், ஆட்சியின் அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் ஊடகங்கள் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது. ஆட்சியின் கேடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேட்கை ஊடகத்தினருக்கு இருந்தாலும், அதிகார மட்டத்திலிருந்து அளிக்கப்படும் நெருக்கடிகள் தான் அவர்களின் கைகளையும், பேனாவையும் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது.
வெள்ளையரையும், கொள்ளையரையும் விரட்டிய ஊடகங்கள்
வெள்ளையர்களின் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்ற உணர்வை தமிழக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக சுதேச மித்திரன், இந்தியா, தேசபக்தன், சுதேசபிமானி, தமிழ்நாடு, தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி உள்ளிட்ட இதழ்கள் ஆற்றிய பணியை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் படித்திருக்கிறோம். ஆனால், 1991&96 ஆட்சிக் காலத்தின் அவலங்களையும், ஊழல்களையும் தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், தினமலர் உள்ளிட்ட இதழ்கள் அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த ஆட்சி  விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்ததை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
2001-2006 ஆட்சி 
1991-96 ஆட்சியை விட 2001-06 ஆட்சியில் ஊழலும், அடக்குமுறையும் 10 மடங்கு அதிகமாக இருந்தது. ஒரே இரவில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம், மக்களுக்கான உரிமைகள் பறிப்பு, பேரூந்து மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட தவறுகளை ஊடகங்கள் தோலுரித்ததால் தான் 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை ஆளுங்கட்சி சந்தித்தது;இது 2006 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், அதைவிட 100 மடங்கு மோசமான, ஊழல் நிறைந்த ஆட்சி இப்போது நடைபெற்று வரும் நிலையில், அதைத் தோலுரிக்கத் தயங்கி மவுனம் கடைபிடிப்பது நியாயமா? என ஊடகங்கள் சிந்திக்க வேண்டும்.
இதுவே தக்க தருணம்
ஊடகங்கள் தங்களின் மவுனத்தைக் கலைக்க இதுவே சரியான நேரம் ஆகும். இதற்குப் பிறகும்  ஊடகங்கள் தங்களின் கடமையை செய்யாவிட்டால், நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் போல தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும். எனவே, அ.தி.மு.க. அரசின் தவறுகள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இதுவே, தாங்க முடியாத துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு அவை ஆற்றும் ஈடு இணையற்ற சேவை என்பதில் ஐயமில்லை – என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe