திருச்சி மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி: நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சியில் மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு முயல்வதும் வருத்தம் அளிக்கிறது. மருத்துவ அதிகாரியான நேருவைப் பொருத்தவரை மிகவும் நேர்மையான அதிகாரி; கண்டிப்பானவர்; கடுமையான உழைப்பாளி என்று கூறப்படுகிறது. மிகவும் கண்டிப்பாக இருந்ததால் அதிருப்தி அடைந்த சில மருத்துவர்கள் ஒத்துழைப்பு அளிக்காததாலும், இடைவிடாமல் மருத்துவ முகாம் நடத்தும்படி திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் கட்டாயப்படுத்தியதாலும் அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் அவருக்கு தேவையில்லாத தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.   கடந்த திங்கட்கிழமை மருத்துவ முகாம் நடத்தி விட்டு நள்ளிரவில் இல்லம் திரும்பிய மருத்துவ அதிகாரி நேருவை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அழைத்து அடுத்த மருத்துவ முகாமுக்கு தயாராகும்படி கட்டாயப்படுத்தியதால் தான் மன உளைச்சலின் உச்சத்தில் உயிரையே மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ அதிகாரி நேருவின் தற்கொலை முயற்சியையும், பணிச்சுமையாக அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் ஏதோ தனித்த ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழகத்திலுள்ள பெரும்பாலான நேர்மையான மருத்துவர்கள் பணிச்சுமையாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவப் பணியிடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக நிரப்பப் பட்டுள்ள போதிலும், மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிக்க இவையும் முக்கியக் காரணங்கள் என்பதை மருத்துவ வல்லுனர்களே ஒப்புக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவமனைக்கான தேவைகளை தங்களின் உயரதிகாரிகளிடம் கேட்டுத் தான் பெற வேண்டியிருக்கிறது. மருத்துவர்களின் இந்த கோரிக்கைகளை பெரும்பாலான நேரங்களில் உயரதிகாரிகள் செவிமடுப்பதில்லை என்பதால் மருத்துவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, மருத்துவமனைகளுக்கு தேவையான பொருட்களை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே வாங்கிக் கொள்ள வசதியாக தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க ஆணையிட்டேன். இப்போதும் அந்த முறை வழக்கத்தில் இருந்தாலும் அந்த தொகை முழுவதையும் மாவட்ட அளவிலான உயரதிகாரிகளே எடுத்துக்கொண்டு, தங்களது விருப்பத்திற்கேற்ப பொருட்களை வாங்கி அனுப்புகின்றனர். இதில் பெருமளவில் ஊழல் நடப்பது ஒரு புறமிருக்க, மருத்துவமனைகளுக்கு வாங்கி அனுப்பப்படும் பொருட்கள் பயன்படாதவையாக உள்ளன. இதனாலும் மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்போருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்கு தேவையான அதிகாரங்களை அவற்றின் தலைமை மருத்துவர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் அரசு மருத்துவர்களின் பணிச்சுமையையும், மன உளைச்சலையும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.