spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாலடாக், லே பகுதியில்... ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

- Advertisement -
modiji speech
modiji speech

பாரத் மாதா கீ …… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ……. பாரத் மாதா கீ….. நண்பர்களே, உங்களுடைய இந்த மனவுறுதி, உங்களுடைய இந்த தைரியம்…. மேலும், பாரத அன்னையின் பெருமிதத்தையும் மானத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு, ஈடு இணையே இல்லாத ஒன்று. உங்களுடைய வாழ்க்கையும் கூட, இந்த உலகத்திலே, யார் ஒருவருக்கும் சளைத்தது கிடையாது.

இத்தனை கடினமான சூழ்நிலைகளிலும் கூட, இத்தனை உயரங்களில், நீங்களனைவரும், பாரத அன்னையின் கவசமாக இருக்கிறீர்கள், அவளைப் பாதுகாத்து வருகின்றீர்கள், அவளுக்கு சேவை புரிந்து வருகின்றீர்கள். இதற்கு இணையாக, ஒட்டுமொத்த உலகத்திலுமே, யாராலும் செய்யவே முடியாது.

உங்களுடைய வீரம், இப்போது நீங்கள் இருந்து கொண்டிருக்கும், உயரத்தைக் காட்டிலும், மிக மிக, பெரியது மகத்துவம் வாய்ந்தது. உங்களுடைய உறுதிப்பாடு, நீங்கள் தினந்தோறும் அளந்து பார்க்கும், பள்ளத்தாக்கைக் காட்டிலும், மிகமிக ஆழமானது அகலமானது.

உங்களுடைய தோள்வலிமை, உங்கள் அருகிலே உயர்ந்து நின்று கொண்டிருக்கும், இந்த மலைகளைக் காட்டிலும் வலிமையானது. உங்களுடைய மனவுறுதி, அக்கம்பக்கத்தில் இருக்கும் மலைகளைக் காட்டிலும், அசைக்க முடியாதது. இன்று, உங்கள் மத்தியில் வந்திருக்கும் வேளையிலே, என்னால் இதை உணர முடிகிறது. நேரடியாகவே, இதை என் கண்களால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே, தேசத்தின் பாதுகாப்பு என்பது, உங்கள் கைகளில் இருக்கும் போது, உங்களுடைய உறுதியான சீரிய நோக்கங்களில் இருக்கும் போது, அப்போது, ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை பிறக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல, நாடு முழுவதுக்குமே, உறுதியான நம்பிக்கையும் இருக்கிறது; மேலும் தேசம், கவலையில்லாமலும் இருக்கிறது.

காலூன்றி நீங்கள் சிகரங்கள் மீது திடமாக இருக்கும் போது, இந்த விஷயம் தான், நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும், தேசத்திற்காக, இரவுபகல் பாராமல், பணியாற்ற உத்வேகத்தை அளிக்கிறது.

தற்சார்பு பாரதத்தை ஏற்படுத்தும் உறுதிப்பாடு, உங்கள் அனைவரின் காரணமாகத் தான், உங்களுடைய தியாகம் தவம் நேரிய நோக்கங்கள் காரணமாகத் தான், மேலும் உறுதிபடைத்ததாக உருவெடுக்கிறது. மேலும், இப்போது நீங்கள் அனைவரும், மேலும் உங்களுடைய நண்பர்கள் அனைவரும், வெளிப்படுத்தியிருக்கும் வீரம் இருக்கிறதே, இதுதான், உலகனைத்திற்கும் பாரதத்தின் பலம் என்ன, என்பது தொடர்பான செய்தியை அளித்திருக்கிறது.

இன்று என் முன்னாலே, என்னால் இராணுவ வீராங்கனைகளையும் பார்க்க முடிகிறது. யுத்த களத்திலே, எல்லைப்புறத்திலே, இத்தகைய காட்சி, இதுவே கருத்தூக்கம் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நண்பர்களே, தேசியக்கவி ராம்தாரி சிங் தினகர் அவர்கள் எழுதியிருக்கிறார்….. जिनके सिँहनाद से सहमी, யாருடைய, சிம்ம கர்ஜனையால் இப்போது, பூமி நடுங்குகின்றதோ, பூமியையே நடுங்க வைக்கும் அந்த சூரர்களுக்காக…… कलम, आज, उनकी जय जय बोल. பேனாவே, இன்று, அவர்களுக்கு நீ வாழ்த்துப்பா பாடு. இன்று நான், ஓங்கி என்னுடைய குரலெடுத்து, நீங்கள் வாழ்கவென்று முழங்குகிறேன்.

உங்களுக்குத் தலைவணங்குகிறேன். நான் கல்வான் பள்ளத்தாக்கிலே, உயிர்த்தியாகம் செய்த, நம்முடைய வீரம்நிறை இராணுவ வீரர்களுக்கும் கூட, மீண்டும், நான் ச்ரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கின்றேன். இவர்களில், கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், தேசத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், வீரர்கள், தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுடைய பராக்கிரமம், அவர்களுடைய சிம்ம கர்ஜனை காரணமாக, இந்தபூமி, இப்போதும்கூட, அவர்களுக்கு வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருக்கிறது. இன்று, நாட்டுமக்கள் ஒவ்வொருவருடைய தலையும், உங்கள் முன்பாக, தாய்நாட்டின் வீரம்நிறை இராணுவ வீரர்களின் முன்பாக, மிகுந்த மரியாதையோடு, நன்றிகலந்த தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தியர்கள் ஒவ்வொருவருடைய நெஞ்சும், உங்களுடைய வீரம், மற்றும் பராக்கிரமம் காரணமாக, விம்மிக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, சிந்துநதியின் ஆசிகள் காரணமாக, இந்த பூமி புனிதப்படுத்தப் பட்டிருக்கிறது. வீரநெஞ்சங்களின் தீரம் தைரியம் ஆகியவற்றின் வீரக்கதைகளை, இந்த பூமி தனக்குள்ளே கரைத்துக் கொண்டிருக்கின்றது.

லே லத்தாக் தொடங்கி, கர்கில் சியாச்சென் ஆகியவை வரை, ரெஜாங்க் லாவின் பனிமூடிய சிகரங்கள் தொடங்கி, கல்வான் பள்ளத்தாக்கின் குளிர்ந்த நீர் நிறைந்த ஆறுவரை, ஒவ்வொரு சிகரமும், ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு நீர்நிலையும், ஒவ்வொரு சிறுகல்லும், ஒவ்வொரு பாறையும், பாரதநாட்டு வீரர்களின் தைரியத்துக்கான, சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.

14ஆம் பிரிவினுடைய, சாகஸ வெளிப்பாட்டின் காதை என்னவோ, அனைத்துத் திசைகளிலும் பரவியிருக்கிறது. இந்த உலகம், உங்களுடைய ஆச்சரியமேற்படுத்தும் வீரத்தைப் பார்த்திருக்கிறது, அறிந்திருக்கிறது, உங்களுடைய வீரம்நிறை காதைகள், வீடுகள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. மேலும், பாரத அன்னையின் எதிரிகள், உங்களுடைய, ஜுவாலை, உங்களுடைய ஜுவாலையையும் பார்த்திருக்கிறார்கள், மேலும், உங்களுடைய ஆக்ரோஷத்தையும்கூட.

நண்பர்களே, லத்தாக்கின் இந்த ஒட்டுமொத்த பகுதியும், இது பாரதநாட்டின் நெற்றித்திலகம். 130 கோடி நாட்டுமக்களின் மானம் பெருமை ஆகியவற்றின் அடையாளச் சின்னம். இந்த பூமி, பாரத நாட்டுக்கு, அனைத்தையும் முழுமையாகத் தியாகம் செய்ய, எக்காலத்திலும், தயாராக இருக்கக்கூடிய, தேசபக்தர்கள் நிறைந்த பூமி இது. இந்த மண் தான், குஷத் பகுலா ரிங்க்போச்சே, போன்ற மகத்தான, தேசபக்தர்களை நாட்டுக்கு அளித்திருக்கிறது.

நமது இந்த ரிங்க்போச்சே அவர்கள், அவர் காரணமாகத் தான், அவர் தான், எதிரிகளின் கயமைத்தனமான நோக்கங்களுக்கு எதிராக, வட்டாரத்து மக்களை, ஒன்று திரட்டிக் காட்டினார். ரிங்போச்சே அவர்கள் தலைமையில், இங்கே பிரிவினையை ஏற்படுத்த, மேற்கொள்ளப்பட்ட அனைத்து சூழ்ச்சிகளையும், லத்தாக்கின் நாட்டுப்பற்று உடைய மக்களனைவரும், தோல்வியடையச் செய்தார்கள். அவருடைய உத்வேகம் அளிக்கும் முயற்சிகள் காரணமாகவே, இந்த நாட்டுக்கும், இந்திய இராணுவத்துக்கும், லத்தாக்….. ஸ்கௌட் என்ற பெயரில், காலாட்படை பிரிவு ஒன்றை ஏற்படுத்த, கருத்தூக்கம் பிறந்தது. இன்று, லத்தாக்கின் மக்கள், அனைத்து மட்டங்களிலும்…… அது இராணுவமாகட்டும், அல்லது பொதுமக்கள் ஆற்றும் கடமை என்பதாகட்டும், தேசத்தை வலுவுள்ளதாக ஆக்க, தங்களுடைய அற்புதமான பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

நண்பர்களே, நம்நாட்டிலே ஒரு விஷயம் கூறப்படுவதுண்டு….. கட்கின், ஆக்ரம்ய, வஞ்சித:. கட்கின், ஆக்ரம்ய, குஞ்ஜித:. வீர்போக்யா வசுந்தரா. அதாவது, வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களின் பலத்தால் மட்டுமே, பூமியை தாய்நாட்டை காப்பாற்றி யளிக்கின்றார்கள்.

இந்த பூமியானது, வீரர்கள் துய்ப்பதற்குத் தான். இது வீரர்களுக்கு உண்டானது. இதைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும், நம்முடைய திறமைகளும், நமது வல்லமையும், நம்முடைய மனவுறுதியும், இமயமலையைப் போல உயர்ந்து ஓங்கியது.

இந்தத் திறமையையும், இந்த மனவுறுதிப்பாட்டையும், இந்த வேளையில், என்னால் உங்களுடைய கண்களிலே, கண்கூடாகக் காண முடிகிறது. உங்களுடைய முகங்களிலே, இது தெள்ளத்தெளிவாகப் பளிச்சிடுகிறது. நீங்கள், எந்த பூமியின் வீரமைந்தர்கள் என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல படையெடுப்பாளர்கள் ஆக்ரமிப்பாளர்களின் தாக்குதல்களுக்கு, மற்றும் கொடுமைகளுக்கு, பலமான பதிலடி கொடுத்தவர்கள்.

இதுதான், இது தான் நமது அடையாளச் சின்னம். நாம் எப்படிப்பட்டவர்கள் என்றால், நாம், குழல் ஊதும் க்ருஷ்ணனையும் வணங்குபவர்கள், அதே நேரத்திலே நாம், சுதர்சனச் சக்கரத்தைத் தாங்கி நிற்கும், க்ருஷ்ணனையும் இலட்சியமாகக் கொண்டு பயணிப்பவர்கள். இந்த உத்வேகம் காரணமாகவே, ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னரும், பாரதம், மேலும் சக்திபடைத்த நாடாக பரிமளித்து வந்திருக்கிறது.

நண்பர்களே, தேசத்தினுடைய, உலகத்தினுடைய, மனித சமூகத்தின் வளர்ச்சியின் பொருட்டு, அமைதியையும் நட்பினையும், அனைவருமே மனமாற ஏற்றுக் கொள்ளுகின்றார்கள். அனைவரும் சம்மதிக்கிறார்கள் இது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், அதே வேளை இன்னொன்றையும் நாம் அறிவோம்…… அதாவது அமைதியை, பலவீனமான ஒருவனால் ஏற்படுத்த முடியாது. பலவீனமானவரால், அமைதிக்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியாது.

வீரம் மட்டுமே, அமைதியை ஏற்படுத்த முதல் அடிப்படையாக இருக்கிறது. பாரதம் இன்று, நீர், நிலம், ஆகாயம், மேலும் விண்வெளி வரை, நாம், பலத்தைப் பெருக்கி வருகிறது என்றால், இதன் பின்னணியில் இருக்கும் இலக்கு, மனித சமூகத்தின் நலன் மட்டும் தான். பாரதநாடு இன்று, அதிநவீன ஆயுதங்கள் தளவாடங்களை, உருவாக்கிக் கொண்டு வருகிறது.

உலகின் அதிநவீனம் நிறைந்த, தொழில்நுட்பங்களை, பாரத இராணுவத்திற்காக நாம் கொண்டு சேர்த்து வருகிறோம். இதன் பின்னணியில் இருக்கும் நோக்கமும் கூட, இது மட்டும் தான். பாரதம் இன்று, நவீனமான உள்கட்டமைப்பினை அதிவிரைவாக ஏற்படுத்தி வருகிறது என்றால், இதன் பின்னணியில் இருக்கும் செய்தியும் கூட, இது மட்டும் தான்.

உலகப் போரினை, நாம் நினைவுபடுத்திப் பார்த்தோமென்றால், அது உலகப் போராகட்டும், அல்லது அமைதிப் பேச்சாகட்டும், எப்போதெல்லாம் தேவை ஏற்பட்டதோ, அப்போது உலகம், நம்முடைய வீரர்களின் பராக்கிரமத்தையும் பார்த்தார்கள், மேலும், உலக அமைதியை நிலைநாட்ட அவர்களின் முயற்சிகளை, உணர்ந்தும் இருக்கிறார்கள்.

நாம் அனைத்துக் காலத்திலும், மனித சமூகத்திற்கு, மனித நேயத்திற்கு, மனித இனத்திற்கு, பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, சேவை ஆற்றியிருக்கிறோம் உயிர்த்தியாகம் புரிந்திருக்கிறோம். நீங்கள் அனைவரும், பாரதநாட்டின் இந்த இலட்சியத்தை, பாரத நாட்டின் இந்த பாரம்பரியத்தை, பாரதநாட்டின் இந்த மகத்தான கலாச்சாரத்தை, நிலைநிறுத்தக்கூடிய, முதன்மையான தலைவர்கள்.

நண்பர்களே, மகத்தான தூயவர், திருவள்ளுவர் அவர்கள், பலநூறு ஆண்டுகள் முன்பாக கூறிவிட்டுப் போயிருக்கிறார் – மறமானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம், எனநான்கே, ஏமம், படைக்கு. அதாவது, வீரம், மானம், கண்ணியமான வழியில் நடக்கும் நடக்கை, என்ற பாரம்பரியம், மற்றும், நம்பகத்தன்மை. இந்த நான்கு பண்புகளும், எந்த ஒரு தேசத்தின் படைக்கும், அரண்களைப் போல விளங்குவது. பாரத நாட்டின் இராணுவமானது, எக்காலத்திலுமே, இந்தப் பாதையிலே தான் பயணித்து வந்திருக்கின்றன.

நண்பர்களே, விரிவுபடுத்தும் கொள்கையின் காலகட்டமானது, என்றோ காலாவதியாகிப் போய் விட்டது. இந்தக் காலகட்டம், வளர்ச்சிப்பாதைக்குச் சொந்தமானது. வேகமாக மாற்றம் கண்டுவரும் இந்தக் காலகட்டத்தில், வளர்ச்சிக் கொள்கை மட்டுமே பயன் ஏற்படுத்தக்கூடியது. வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு மட்டுமே, வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், வளர்ச்சிக் கொள்கை மட்டுமே, எதிர்காலத்துக்கான அடிப்படையாக விளங்குகின்றது.

கடந்த நூற்றாண்டுகளில், கடந்த நூற்றாண்டுகளில், விரிவாக்கக் கொள்கை மட்டும் தான், மனித சமூகத்தை, மிக அதிகமாக நாசம் செய்தது, மனித சமுதாயத்தை அழிக்கும் முயற்சியை மேற்கொண்டது. விரிவாக்கக் கொள்கையால் வெற்றி அடைந்து விடலாம் என்ற உணர்வு மேலோங்கத் தொடங்கினால், அவர், எப்போதுமே, உலக அமைதிக்கு எதிரான, பேராபத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறார்.

மேலும் நண்பர்களே ஒரு விஷயத்தை மறக்க வேண்டாம்….. வரலாறு சாட்சி பகர்கிறது. இது மாதிரியான சக்திகள், அழிந்து போய் விட்டார்கள், அல்லது, தங்கள் நோக்கத்தை சீர்திருத்த வைக்கப்பட்டார்கள். உலகத்தின் அனுபவம் என்றைக்குமே, எப்போதுமே இப்படியே இருந்து வந்திருக்கிறது. மேலும் இந்த அனுபவத்தினுடைய, அடிப்படையிலே தான், இப்போது இந்த முறை, மீண்டும் ஒருமுறை, உலக நாடுகள் அனைத்தும், விரிவாக்கக் கொள்கைக்கு எதிராக, தீர்மானம் செய்திருக்கின்றன. இன்று உலகம், வளர்ச்சிக் கொள்கைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறது. வளர்ச்சியின் இந்த தடையற்ற சவாலுக்கு, வரவேற்பளித்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே, எப்போதெல்லாம் நான், தேசப்பாதுகாப்புத் தொடர்பான, எந்த ஒரு முடிவு பற்றியும் நினைக்கும் வேளையில், அப்போது நான், அனைத்திற்கும் முதன்மையாக, இரண்டு அன்னையர்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எப்போதெல்லாம் நான், தேசப்பாதுகாப்புத் தொடர்பாக சிந்தனை செய்யும் வேளையில், அப்போது அனைத்திற்கும் முதன்மையாக, இரண்டு அன்னையர்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

முதலாவதாக, நம்மனைவரின் தாயான பாரத அன்னை. நான் இரு அன்னையர்களை நினைவுபடுத்திக் கொள்ளுவேன் எனும் போது, முதன்மையாக, நம்மனைவருடைய, பாரத அன்னை. அடுத்து இரண்டாவதாக, வீர அன்னையர் திலகங்கள்…… அடுத்து இரண்டாவதாக, வீர அன்னையர் திலகங்கள்…..

அவர்கள் தாம், உங்களைப் போன்ற பெரும் பராக்கிரம சாலிகளை, போர் வீரர்களைப் பெற்றெடுத்தவர்கள். அந்த இரண்டு அன்னையர்களையும் நினைவுபடுத்திக் கொள்ளுவேன். என்னுடைய முடிவுகளின் உரைகல் இது மட்டும் தான் வேறில்லை. இந்த உரைகல்லால் சோதித்துப் பார்த்துக் கொண்டே, உங்களுடைய மானம், உங்களுடைய குடும்பங்களின் மானம், மேலும் பாரத அன்னையினுடைய பாதுகாப்பிற்கு, தேசம், மிகவுயர்வான முதன்மையை அளிக்கிறது.

நமது படையினருக்கு, அதிநவீன ஆயுதங்கள் கிடைக்க வேண்டும், அல்லது உங்களுக்குத் தேவையான, அனைத்துப் பொருட்களும் கிடைக்க வேண்டும், இவையனைத்தின் தொடர்பாக, நாங்கள் அதிகமான கவனத்தை, அளித்துக் கொண்டு வந்திருக்கிறோம்.

இப்போது தேசத்திலே, எல்லைப்புறக் கட்டமைப்பு தொடர்பாக, செலவினம் கிட்டத்தட்ட, மூன்று மடங்கு, அதிகரிக்கப் பட்டிருக்கின்றது. இதனால், எல்லையோரப் பகுதிகள், மற்றும் எல்லையோர மேம்பாடு, மேலும் எல்லைகளில், சாலைகள் பாலங்கள் அமைக்கும் பணிகள் அனைத்தும், மேலும் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனால் மிகப் பெரிய ஆதாயம் என்றால், பலவற்றில் ஒன்றைக் கூறினோமென்றால், அதாவது உங்களிடத்திலே, தேவைப்படும் பொருட்களை, குறைவான நேரத்திலே கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது.

நண்பர்களே, படைகளுக்கு இடையிலே, சிறப்பான ஒருங்கிணைப்பிற்காக, நீண்ட நெடுங்காலமாக ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது… அதாவது பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற, தலைமையை ஏற்படுத்துதல்…. இது பற்றிய விஷயமாகட்டும், அல்லது, தேசிய போர் நினைவுச் சின்னம் சமைப்பதாகட்டும், ஒரு ரேங்க் ஒரே ஓய்வூதியம் என்ற, தீர்மானம் ஆகட்டும், அல்லது, உங்களுடைய குடும்பங்களின், பராமரிப்புத் தொடங்கி, கல்வியளித்தல் வரை, சரியான ஏற்பாடுகளின் பொருட்டு, தொடர்ச்சியாக, பணிகளை, தேசம், இன்று, அனைத்து மட்டங்களிலும், தனது படைகளுக்கும், தனது படை வீரர்களுக்கும், பலப்படுத்தி வருகிறது.

நண்பர்களே, பகவான் கௌதம புத்தர் கூறியிருக்கிறார், தைரியம் எதோடு தொடர்புடையது என்றால், அது அர்ப்பணிப்போடு தொடர்புடையது. நம்பிக்கையோடு தொடர்புடையது. தைரியமே, கருணையாகும். தைரியம், நேசமாகும். தைரியம் எது தெரியுமா, அது நம்மை, துணிவுள்ளவர்களாக, தீர்மானமுள்ளவர்களாக, ஆக்குவதோடு, சத்தியப் பாதையில், நடைபோடக் கற்றுக் கொடுக்கிறது. தைரியம் எதுவென்றால், அது நமக்கு, சரியானதைச் சரியென்று சொல்லவும், அதைச் செய்யவும், சக்தியை அளிக்கக்கூடியது.

நண்பர்களே, தேசத்தின் வீரம்நிறை மைந்தர்கள், கல்வான் பள்ளத்தாக்கிலே, இணையற்றதொரு, தைரியத்தை வெளிப்படுத்தினார்களே, அது தான் பராக்கிரமத்தின், உச்சபட்ச நிலை.

நாட்டு மக்களிடம், உங்களைப் பற்றிய பெருமிதம் இருக்கின்றது. நாங்கள் புளகாங்கிதம் அடைகிறோம். உங்களுடைய சகாக்களான, ITBP படையைச் சேர்ந்த, வீரர்களாகட்டும், BSFஐச் சேர்ந்த நண்பர்களாகட்டும், நம்முடைய, BROவாகட்டும் பிற அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்களாகட்டும், இடர்கள் நிறை சூழ்நிலையில், பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, பொறியாளர்களாகட்டும், தொழிலாளிகள் ஆகட்டும், நீங்கள் அனைவருமே, அற்புதமான பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்.

அனைத்துப் பேர்களும், தோளோடு தோள் இணைத்து, பாரத அன்னையின் பாதுகாப்பிற்காக, பாரத அன்னையின் சேவையிலே, அர்ப்பணிப்போடு இருக்கின்றீர்கள். இன்று, உங்கள் அனைவரினுடைய, உழைப்பின் காரணமாக, தேசம், பல சங்கடங்களுக்கு மத்தியிலே, ஒரே குரலெடுத்து, முழு உறுதிப்பாட்டோடு, போராடி வருகின்றது. உங்கள் அனைவரிடத்திலிருந்தும், உத்வேகம் அடைகிறோம்.

நாமனைவரும் இணைந்து, ஒவ்வொரு பிரச்சனை, ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு, மிகக் கடுமையான சவால் களுக்கு எதிராக, வெற்றியையும் அடைந்திருக்கின்றார்கள், வெற்றியைத் தொடர்ந்து பெற்றும் வருவார்கள்.

எந்த பாரதத்தின் கனவுகளை, ஆம் நாமனைவரும், எந்த பாரதத்தின் கனவுகளை ஏந்தி, அதுவும் குறிப்பாக, நீங்கள் அனைவரும், சிகரங்களின் மீது, நம் தேசத்திற்கு, பாதுகாப்பு அளித்து வருகிறீர்களோ, அந்தக் கனவினை, நனவாக்கும் பாரதம் படைக்க, நீங்கள் கனவு காணும் பாரதத்தை படைக்க வேண்டி, 130 கோடி நாட்டு மக்களுமே கூட, பின் தங்கிப் போக மாட்டார்கள், இந்த நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

நாம், ஒரு சக்தி படைத்த, மற்றும் தற்சார்புடைய பாரதத்தை உருவாக்குவோம், கண்டிப்பாக உருவாக்கியே தீருவோம். மேலும் உங்களிடமிருந்து உத்வேகம் கிடைக்கும் போது, அப்போது தற்சார்பு பாரதம் படைக்கும் உறுதிப்பாடும்கூட, மேலும் வலிமையுடையதாக மாறுகிறது.

நான் மீண்டுமொருமுறை, உங்கள் அனைவருக்கும், என் இதயபூர்வமான, பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பலப்பல நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

நாட்டை அபகரிக்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர்… என்று பேசினார் பிரதமர் மோடி.

போர்முனையில் பிரதமர் மோடி முழக்கம்

இந்திய சீன எல்லைப்பகுதியில் அமைந்த லடாக்கிற்கு மோடி விஜயம் செய்து இராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுச்சியுரையாற்றினார். விளையாடும் கண்ணனையும் தெரியும் வீறு கொண்டு சுதர்சன சக்கரத்தை ஏவி விடும் கண்ணனையும் தெரியும் .தேவைகேற்ப எப்படி வேண்டுமென்றாலும் மாறுவோம் என்று நம் படைவீரர்களுக்கு உற்சாகம் ஊட்டிய எழுச்சியுரையைத் தமிழில் கேளுங்கள்

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe