spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை கலைக்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை!

- Advertisement -
friends of police logo
friends of police logo

காவல் நிலைய சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது அடாவடி அத்துமீறலில் ஈடுபடும் சட்ட அங்கீகாரம் பெறாத FOP அமைப்பை மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில்…

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் சாத்தான்குளம் காவல் நிலையம் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற சட்ட அங்கீகாரமற்ற அமைப்பினரின் உதவியுடன் தந்தை மகன் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்நிகழ்வுக்குப் பின் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குறித்த விவாதங்கள் இப்போது பரவலாக நடைபெற்று வருகின்றது.

யார் இந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்? காவல் துறையினருக்கு இரவு ரோந்துப் பணி மற்றும் சில உளவுப் பணிகளில் உதவி செய்வதற்காக 1993 ஆம் ஆண்டு ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதில் காவல்துறையில் சேருவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். ஆனால், இவர்களுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் அதிகாரமும் கிடையாது. தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 10 முதல் 20 வரையிலான நபர்கள்
ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இருக்கின்றார்கள், 34 மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்களோடு செயல்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில்தான் சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகு இவர்கள் குறித்தான பல செய்திகள் இப்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றது. காவல்துறைக்கு நண்பர்களாக இருந்து உதவிட வேண்டி அமைக்கப்பட்ட இந்தக் குழு நாளடைவில் மெய்நிகர் காவலர்களாகவே மாறிப் போனார்கள். எஃப்.ஓ.பி (FOP) என்று அறியப்படும் இவர்கள் காவலர்களுடன் இரவு ரோந்துப் பணிக்கு செல்லும் பொழுதும் இன்னபிற விசாரணையின் போதும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பல பயங்கரங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட போலீஸ் யார்? போலீஸ் நண்பன் யார் (FOP)? என்று வித்தியாசம் தெரியாத அளவிற்கு இவர்களுடைய நடவடிக்கைகள் மாறிப்போய்விட்டது. இன்னும் சொல்லப்போனால் காவல்துறையினர் போலீஸ் என்றால் இவர்கள் போலீசுக்கு போலீசாக இருப்பவர்கள், காவல்துறையினர் எஜமான மனோபாவம் கொண்டவர்கள் என்றால் இவர்கள் நீதிபதியை போன்ற மனோபாவம் கொண்டவர்களாகவே செயல்படுகின்றனர்.

இரவு நேரங்களில் அவசரத் தேவைக்காக வேண்டி வெளியில் பயணித்த அனைவருக்கும் இவர்களுடனான கசப்பான அனுபவம் இருக்கும். அவர்களுடைய உடல்மொழியும் அதிகார தோரணையும் பல காவல்துறை அதிகாரிகளையே தோற்கடிக்கச் செய்துவிடும்.

ஆக, இந்த சட்ட அங்கீகாரமற்ற அமைப்பு சட்டவிரோதமாக பொதுமக்கள் மீது வன்முறையை பிரயோகித்து வரும் விஷயத்தை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஏனெனில், 2005 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் ‘சல்வார் ஜூடும்’ என்ற அமைப்பை துவங்கினார்கள். அந்த அமைப்பிலும் இதுபோன்று காவல்துறையில் சேர விருப்பம் உள்ள இளைஞர்களை சேர்த்து அவர்களுக்கு நவீனரக ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தார்கள்.

விளைவு, இந்த ‘சல்வார் ஜூடும்’ அமைப்பினர் வெறி கொண்டவர்களாக மாறி, பல நூற்றுக்கணக்கான கிராமங்களை தீயிட்டுக் கொளுத்தி பல ஆயிரம், பழங்குடியின பெண்களின் வாழ்வை சூறையாடி, பல இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கினர். இது நாடு முழுவதும் பெரிய விவாதமாக மாறி 2011 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த சட்டப்பூர்வமற்ற அமைப்பிற்கு ஆயுதம் கொடுத்தது யார்? உடனடியாக ஆயுதங்களை அவர்களிடம் இருந்து பிடுங்கி அந்த அமைப்பை கலைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது என்பதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இவர்களும் (FOP) இப்போது ஆயுதத்தோடு தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். சாத்தான்குளம் சம்பவம் தற்பாது வெளியில் வந்துள்ளது. வெளியில் வராத பல நூறு சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவர்கள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல செய்திகள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. காவல்துறையினரை அரசு செல்லமாக வளர்த்து வருகின்றது என்றால் காவல்துறையினர் இவர்களை செல்லமாக வளர்த்து வருகின்றார்கள்.

அரசு செய்யக்கூடிய ஒழுங்கீனங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கின்றது என்றால் காவல்துறை செய்யக்கூடிய ஒழுங்கீனங்களுக்கு இவர்கள் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறையினர் மற்றும் இந்த அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் தட்டையாக மறுத்து வருகின்றனர்.

இப்படி மறுதலித்து பேசுவதை விட்டுவிட்டு நிலைமை மோசமாவதற்கு முன்பு இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு மற்றும் காவல்துறை உடனடியாக இந்த அமைப்பு குறித்து தீவிரமாக ஒரு மீள் பரிசீலனை செய்து இவர்கள் விஷயத்தில் உறுதியான முடிவினை எடுத்திட வேண்டும். அதே போன்று எஃப்.ஓ.பி க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் சேவா பாரதிக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்பதினையும் உறுதிபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் சேவா பாரதி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எஃப்.ஓ.பி அமைப்பை பயன்டுத்துவதை உறுதிபடுத்துகிறது. இந்த கொலை வழக்கிலும் சேவா பாரதியின் பங்கு என்ன என்பதை விசாரனை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையெனில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்தது போன்ற ஒரு நிகழ்வை தமிழகமும் சந்திக்க நேரிடலாம் என்கின்ற கவலை சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரின் கவலையாக இருந்து கொண்டிருக்கின்றது. ஆதலால் இந்த அமைப்பின் ஆபத்தை உணர்ந்து இதனை மாநில அரசு தடைவிதிக்க வேண்டும் என்று கேட்டுக் காெள்கின்றேன். – என்று, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் M. முஹம்மது சேக் அன்சாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe