சென்னை:

நீட் தேர்வு தோல்வியால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதியும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திங்கட்கிழமை எனது தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்டமாக இந்த பிரச்னையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். அதன் அடிப்படையில் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய 3 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனிடையே, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், முரசொலி விழாவில் மட்டுமே தான் கலந்து கொள்ளப் போவதாகவும், மதிமுக., பொதுச் செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருத ஜி.கே.வாசன், தமது கட்சி இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று கூறினார். தாம் இன்று அரியலூருக்குச் சென்று அனிதாவின் தந்தையிடம் இரங்கல் தெரிவிக்க செல்வதாகக் கூறிய வாசன், நீட் தேர்வு குறித்த திமுக.,வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு தனக்கு வந்தது என்றும், ஆனால் த.மா.கா. இதில் பங்கேற்காது என்றும் கூறினார். இவ்வாறு இந்தக் கூட்டத்துக்கான மற்ற கட்சியினர் ஆதரவு குறைந்து கொண்டே வந்தது குறிப்பிடத் தக்கது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...