சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட்’ தேர்வை தடை செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் செயல்படும் பள்ளி மாணவிகள் தீடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 25 மாணவிகள், சாலையில் அமர்ந்து கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் இது குறித்து பேசியபோது, போலீஸ்காரங்களுக்காகவும் தானே நாங்க போராடுறோம். ஞாயப்படி போலீஸ்காரங்களுக்கும் நீட் எக்ஸாம் வெக்கணும். நீட் எக்ஸாம்லாம் எழுந்திருந்தா போலீஸ்காரங்க இப்டி வேலைக்கு வந்திருப்பாங்களா?
நாங்க சொல்றத புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க எங்க டீச்சர்ஸ். அவங்களும் நீட் எக்ஸாம் எழுதினா தெரியும்” என்று ஆவேசமாகக் கூறினார்.
நுங்கம்பாக்கம் சூசைபுரம் சர்ச் அருகே அதனைச் சார்ந்த பள்ளியில் 7,8,9,10 ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவியரின் போராட்டத்தால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்; ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதா சாவுக்கு நீட்டா என்று முழக்கமிட்டவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் ஆசிரியைகள், காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கலைந்து போகச் செய்தனர். சென்னையில் மாணவிகள் சாலை மறியலால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து ஊடகத்தின் செய்திகளிலும் இந்தப் போராட்டம் நேரலையாக ஒளிபரப்பானது.