― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்இயற்கையை உயிரூட்டும் தென்மேற்கு பருவமழை!

இயற்கையை உயிரூட்டும் தென்மேற்கு பருவமழை!

- Advertisement -
தொங்கு சட்டிகளில் செடிகள் ( கூரை தோட்டத்தில்)

இயற்கையினையே உயிரூட்டும் தென்மேற்கு பருவமழை

^ ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

மஹாராஷ்டிராவின் விதர்பா பகுதியின் 11 மாவட்டங்களில் அனைத்து பருவ நிலைகளுமே மிகவும் கடுமையாய் இருக்கும் என்பது பொதுவான கருத்து.

ஒவ்வொரு பருவ நிலையும் தத்தம் தனித்துவத்துடன் இருக்கும். சில நகரங்களில் 48 டிகிரி செல்சியஸை தொடும் கோடை வெயில், சில நகரங்களில் 4 டிகிரி செல்சியஸ் வந்துவிடும் குளிர் காலம், என ஒரு வித்தியாசமான விதர்பா பகுதி.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று விதர்பா பக்கம் வீசும் சாரலினால் சில நாட்களாக ரம்மியமாய் உள்ளது.

ஆறுகளில், ஏரி குளங்களில் எல்லாம் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்து, மழை நீரைப் பெற்ற பல மரங்கள் புத்துணர்ச்சியுடன் பச்சைக் கம்பளத்தை தன் மேல் விரித்து பரவசப்படுத்தும் காட்சி, பூங்காக்களில் விதவிதமாய் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் சிறிய செடிகள், வீட்டுத் தோட்டங்களில் மனதை மயக்கும் பூக்கள்- என கண்களைப் பறிக்கும் காட்சியாய் இருக்கின்றன.

பைப்புகளில் வளர்க்கப் படும் அழகுப் பூக்கள் ( கூரைத் தோட்டம்).

வர்தாவில் 30 வருட காலமாக வசிக்கும் திரு. பாலகிருஷ்ணன் வீட்டு கூரைத் தோட்டம் ( Roof Garden) இன்றைய தினத்தில் பார்ப்பவர் மனதை கவரும் விதத்தில் உள்ளது.

ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர் பாலகிருஷ்ணன்!அவர் மனைவி மல்லிகா மற்றும் இரண்டாவது மகள் ஐஸ்வர்யாவின் உழைப்பாலும் ஈடுபாட்டாலும், செடிகளின் மேல் உள்ள பற்றாலும், தம் வீட்டு கூரைத் தோட்டத்துக் உயிர் கொடுத்துள்ளனர்.

ஒரு வகையான லில்லி இலைகள் (நாக்பூர்).

ஆறு மாத காலமாக கோடையிலும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்தும், சரியான பராமரிப்பாலும் பூ மற்றும் காய்கறிச் செடிகளை பாதுகாத்து வந்தவர்களுக்கு சமீபத்திய தென்மேற்கு பருவமழை வரப் பிரசாதமாக உள்ளதாக கூறுகின்றனர்.

பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் பணியில் இருந்த போது பல ரயில் நிலையங்களுக்கு அருகில் வாடும் செடிகளை, குறிப்பாக மருத்துவ குணமுடைய மூலிகளை பார்க்கும் போதெல்லாம் வள்ளலாரின் வாக்கான “வாடும் பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்ற எண்ணமே மனதில் எழும். அதனால், ஓய்வு பெற்ற பிறகு, என் இல்லத்தில் தோட்டமும், கூரைத் தோட்டமும் வடிவமைத்தேன்.

பூச்செடிகள் ( கூரைத் தோட்டத்தில்)

மழைக் காலத்தில் மணம் வீசும் என் இல்லத் தோட்டத்தில் (சுமார் 800 சதுர அடியில்) 125 பானைகளில் செடிகள் வைத்துள்ளோம்.
செம்பருத்தி – 12 வகைகள்,
ரோஜா- 20 வகைகள்,
டேபிள் ரோஜா- 15 வகைகள்,
செவந்தி- 10 வகைகள்,
சாமந்தி-10 வகைகள்,
அலங்கார செடிகள்-4 வகைகள்,
கோழிக்கொண்டை,
முல்லை, வெற்றிலைச் செடி- 2, தொட்டி சம்பகம்-1, அரளிப்பூ-2, கிருஷ்ண கமலம்- 2 வகைகள்- ஆக மொத்தம் 125 பானைகளில் வைத்து பராமரிக்கிறோம்.

இதைத் தவிர தக்காளி, முட்டை கோஸ், காலி ஃப்ளவர், வெண்டைக்காய் மற்றும் கத்தரிக்காய் செடிகளும் வைத்துள்ளோம் …

இவற்றைத் தவிர தோட்டத்தில் 20 சட்டிகளில் பலவிதமான செடிகளை வைத்துள்ளோம்’ என்றார்.

கிருஷ்ண கமலம் ( வர்தா)

தன் இல்லத்தில் இருக்கும் மூலிகை செடிகளைப் பற்றி கூறும் போது, ‘ துளசி, மஞ்சள், சென்னையில் இருந்து எடுத்து வந்த ஓமவல்லி, மராட்டிய மக்கள் சிறுநீர் கல் குணமாக்கப் பயன்படுத்தும் ‘பத்ரி’ (Patri) செடி, கருவேப்பிலை செடிகளும், வேம்பு மற்றும் எலுமிச்சை மரங்களும் உள்ளன” என்றார்.

பட்ட மேற்படிப்பு படித்த அவர்களின் இரண்டாவது பெண் ஐஸ்வர்யா, “கற்றாழையை முகப் பொலிவுக்கும், புதினாவை அக அழகிற்காகவும் என் தோழிகள் என் தோட்டத்திலிருந்து எடுத்து செல்வர்” என்றும், தன் வீட்டு மூலிகைகளை வைத்து சோப்புகள் தயாரிப்பதையும் பெருமிதத்துடன் கூறினார்.

பூங்கொத்து போன்ற விருக்‌ஷி மரம் (நாக்பூர்).

நாக்பூரில் ஸ்ரீநிவாஸன் என்பவரின் இல்லத் தோட்டத்தில் இருக்கும் விருட்சி மரமானது இயற்கை பரிசளித்த பூங்கொத்து போல் வருவோரை கவர்கிறது. லில்லி வகையில் ஒன்றும் கண்ணுக்கு விருந்தாகிறது.

தங்கள் பகுதிகளிலும் பருவ மழையின் ஒவ்வொரு துளியையும் அருமையை அறிந்து, மழை நீரைப் பயன்படுத்தி செடிகளை வளர்த்து இயற்கை அன்னையின் பசுமை கம்பளமாக மாற்ற நாமும் முயற்சி செய்யலாம். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பூக்களின் மலர்ச்சியுடன் பராமரிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version