சென்னை :
சென்னை, வானகரத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுனை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக எம்.எல்.ஏ., வெற்றிவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் தாக்கலான மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், எந்த அடிப்படையில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியும்? இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தையே அணுகலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு . பொதுக்குழு தொடர்பான தீர்மானத்தில் பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லை என்று வாதத்தை முன்வைத்தார் வெற்றிவேல் தரப்பு வழக்குரைஞர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன் தனிநபர் என்ற அடிப்படையிலேயே வெற்றிவேல் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக அவர் வழக்கு தொடரவில்லை. எதிர்தரப்பு வாதியாக தினகரனின் பெயரையும் அவர் சேர்த்துள்ளார். இதனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்த எம்.எல்.ஏ., வெற்றிவேலுவுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும், இந்தப் பொதுக்குழுவை எப்படியும் தடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வெற்றிவேல் கூறியிருந்தார்.
முன்னதாக, சட்டப் பேரவை சபாநாயகர் தனபாலிடம், தினகரன் தரப்பு சார்பில், அவைக் கொறடா ராஜேந்திரனை நீக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்த சட்ட நுணுக்கங்களை ஆராய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திடீரென்று சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.