spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு: பிரதமர் மோடியின் உரை!

பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியில் தன்னிறைவு: பிரதமர் மோடியின் உரை!

- Advertisement -
modi-speech
modi speech

அமைச்சரவையில எனக்கு உறுதுணையா இருக்கற,  திரு ராஜ்நாத் அவர்களே,  பாதுகாப்புப் படைகளின் தலைவர், தளபதி பிபின் ராவத் அவர்களே,  முப்படைகளின்…. மூன்று பிரிவுகளோட,  தளபதிகளே,  இந்திய அரசு தரப்பில இங்க இருக்கற,  உயர் அதிகாரிகளே,  தொழில்உலகத்தைச் சேர்ந்த,  அனைத்து நண்பர்களே,  வணக்கம்.  

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்….. நம்ம நாட்டுல, பாதுகாப்புத்துறைப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான பங்குதாரர்கள் எல்லாரும்,  இன்னைக்கு இங்க குழுமி இருக்காங்கங்கறது தான்.  

இந்த ஆய்வரங்கத்தை ஏற்பாடு செய்தமைக்காக,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் அவர்கள்,  மற்றும் அவரோட குழுவினர் எல்லாருக்கும், நான் பலவகையான பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன்.  

இன்னைக்கு இங்க நடக்கற இந்த அலசல் வாயிலா,  கிடைக்கற பயன்கள்….. இவை பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு,  தற்சார்பு அடையற திசையில நம்மோட முயற்சிகளுக்கு, கண்டிப்பா வலு சேர்க்கும்,  வேகம் பிறக்கும்…… மேலும் நீங்க எல்லாரும் ஆலோசனைகள் அளிச்சிருக்கீங்க…… 

இன்னைக்கு நீங்க எல்லாரும் இங்க கலந்தாய்வு செய்திருக்கீங்க.   இவை எல்லாம் இனிவரும் நாட்கள்ல அதிக உதவிகரமானவையா இருக்கும்.   என்னோட இன்னொரு சந்தோஷம் என்னென்னா,  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்,  இந்த வேலை விஷயத்தில,  மிஷன் மோட்ல இருக்காரு,  முழுமையா இதில ஈடுபட்டிருக்காரு.   எனக்கு நம்பிக்கை இருக்கு,  அவரோட இந்த அயராத முயற்சிகள் காரணமா,  ரொம்பவே நல்ல விளைவுகள் ஏற்படுங்கறதுல சந்தேகமில்லை.  

நண்பர்களே இது ஒண்ணும் யாருக்கும் தெரியாத விஷயம் இல்லை,  அதாவது பாரதம் பல ஆண்டுகளாகவே,  உலகத்திலேயே மிகப்பெரிய,  பாதுகாப்புத்….. தளவாடங்களை இறக்குமதி செய்யற,  மிக முக்கியமான நாடா இருந்து வருதுங்கறது.   நாடு சுதந்திரம் அடைஞ்ச காலத்தில,  அந்த காலகட்டத்தில,  பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில நமக்கு பெரிய திறமை இருந்திச்சு.  

அந்தக் காலகட்டத்தில இந்தியாவுல,  100 ஆண்டுகளுக்கும் மேலா நிறுவப்பட்ட,  பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கான,  சூழலமைப்பு இருந்திச்சு.   மேலும் பாரதம் மாதிரியா திறமையும்,  மேலும் வல்லமையும்,  வெகுசில நாடுகள் கிட்ட தான் இருந்திச்சு.  

ஆனா,  பாரதத்தோட துர்பாக்கியம் என்னென்னா,  பல தசாப்தங்களாகவே,  இந்த விஷயம் தொடர்பா,  எத்தனை கவனம் செலுத்தப்படணுமோ அத்தனை கவனம் செலுத்தப்படலைங்கறது தான்.    ஒரு வகையில பார்த்தா,  இது ஒரு வாடிக்கையான விஷயமாவும் எந்த ஒரு தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்படலை.   அதே வேளையில பிறகு,  நமக்குப் பின்னால முயற்சிகள் மேற்கொண்ட பல நாடுகளும்,  கடந்த 50 ஆண்டுக்காலத்தில,  நம்மை விட்டு எங்கயோ முன்னேறிப் போயிட்டாங்க.   ஆனா,  இப்ப நிலைமையில மாற்றம் ஏற்பட்டு வருது.  

கடந்த சில ஆண்டுகளா,  இதை நீங்களும் கவனிச்சு உணர்ந்திருக்கலாம்…. அதாவது இந்தத் துறையோட சம்பந்தப்பட்ட எல்லா தளைகளையும்,  தகர்க்கறதுக்கான,  தொடர் முயற்சி நடந்து வந்திருக்கு.   எங்களோட நோக்கம் என்னென்னா,  இந்தியாவுல தயாரிப்புக்கள் அதிகரிக்கணும்,  புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவுல மேம்படணும்,  மேலும்,  தனியார் துறையானது,  இந்தச் சிறப்பான துறையில,  அதிக விரிவாக்கம் அடையணும்.    

ஆகையினால இதில,  உரிமம் வழங்கல் செயல்முறையில மேம்பாடுகள்,  அனைவருக்கும் சமவாய்ப்புக்கான ஏற்பாடுகள்,  ஏற்றுமதி செயல்பாட்டை எளிமைப்படுத்தல்,  ஈடுசெய்தல் செயல்பாடுகள்ல மேம்பாடு,  இப்படி ஏராளமான நடவடிக்கைகள்,  மேற்கொள்ளப்பட்டிருக்கு.  

நண்பர்களே,  நான் முழுமையா நம்பறேன்….. அதாவது இந்த ஏற்பாடுகளை விடவும்,  அதிக மகத்துவம் வாய்ந்ததுன்னா,  அது பாதுகாப்புத் துறையில,  நம்ம நாட்டுல,  ஒரு புதிய மனோநிலையை,  நாம எல்லாரும் உணர்ந்து வர்றோம்.   ஒரு புதிய மனோநிலை பிறந்திருக்குன்னு சொல்லலாம்.   நவீனமான…. மற்றும் தற்சார்பு பாரதத்தை நிர்மாணிக்கணும்னு சொன்னா,  பாதுகாப்புத் துறையில,  தன்னம்பிக்கை உணர்வு ரொம்ப முக்கியமான ஒண்ணு.   ரொம்ப நீண்ட காலமாகவே,  தேசத்தில,  முப்படைகளின் தளபதி பதவி நியமனம் பேசப்பட்டு மட்டுமே வந்திச்சு.   ஆனா,  முடிவு ஏதும் எடுக்க முடியலை.  

இந்தத் தீர்மானம்,  புதிய பாரதத்தோட தன்னம்பிக்கையின் அடையாளமா விளங்குது.   ரொம்ப நீண்ட காலமாகவே,  பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாம இருந்திச்சு.   காலஞ்சென்ற அடல்ஜியோட ஆட்சிக்காலத்தில,   இந்த புதிய முன்னெடுப்பு, தொடங்கப்பட்டிச்சு.  

எங்களோட ஆட்சி அமைஞ்ச பிறகு,  இதில மேலும் மேம்பாடுகளை ஏற்படுத்தினோம்.   மேலும் இப்ப,  முதமுறையா, இந்தத் துறையில,  74 சதவீதம்,  74 சதவீதம் வரை,  அந்நிய நேரடி முதலீடு,   தன்னியக்க வகையில முதலீடு செய்யற வழிகள் திறக்கப்பட்டுக்கிட்டு வருது.   இது புதிய பாரதத்தோட தன்னம்பிக்கைக்கான பலனா கிடைச்சது.  

பல தசாப்தங்களாகவே,  ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் அரசுத் துறைகளை மாதிரியே செயல்படுத்தப்பட்டு வந்திச்சு.   ஒரு குறுகிய பார்வை காரணமா,  நாட்டுக்குக் கேடு என்னமோ….. ஏற்பட்டிச்சு.   அங்க வேலை பார்த்திட்டு இருந்தவங்க எல்லாம்,  அங்க இருந்த திறமையாளர்கள்லாம்,  அர்ப்பணிப்பு இருந்தவங்கல்லாம்,  உழைக்கறவங்கல்லாம்……

இப்படி நம்மோட ஏராளமான,  அனுபவம் நிறைஞ்ச,  நம்மோட உழைப்பாளி சகோதரர்கள் அங்க இருக்காங்களே,  அவங்களுக்குத் தான் பெரிய கேடு விளைஞ்சுது.   எந்தத் துறையில,  கோடிக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க முடியுமோ,  அதோட சூழலமைப்பு,  ரொம்பவே குறுகலானதா இருந்திச்சு.  

இப்ப,  ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகளை, நிறுவனமயமாக்கல் திசையில நாம முன்னேறிக்கிட்டு இருக்கோம்.   இந்தச் செயல்பாடு நிறைவு அடைஞ்ச பிறகு,  உழைப்பாளர்கள்,  மற்றும் இராணுவம்,  இருவருமே பலமடைவாங்க.   இது,  புதிய பாரதத்தோட தன்னம்பிக்கைக்கான சான்றா விளங்குது.  

நண்பர்களே,  பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில தற்சார்பு தொடர்பா,  எங்களோட அர்ப்பணிப்பு,  சொற்கள்ல மட்டுமோ,  இல்லை காகித எழுத்துக்களோடவோ நின்னு போகற விஷயம் கிடையாது.   இதைச் செயல்படுத்தறதுக்காக,  அடுத்தடுத்து முக்கியமான முன்னெடுப்புக்களை நாங்க எடுத்து வந்திருக்கோம்.  

CDS ஏற்படுத்தப்பட்ட பிறகு படைகளோட மூன்று பிரிவுகள்லயும்,  ஆயுதங்கள் வாங்கறதுல அதிக ஒருங்கிணைப்பு ஏற்பட்டிருக்கு.   இதனால பாதுகாப்புக் கருவிகள் வாங்கறதுல,  அளவை அதிகரிக்கறதுல உதவிகரமா இருக்கு.  

இனிவரக்கூடிய நாட்கள்ல,  உள்நாட்டுத் தொழில்களுக்கு,  அளிக்கப்படும் ஆர்டர்களோட அளவும் அதிகரிக்க இருக்கு.     இதை உறுதி செய்யற வகையில,  பாதுகாப்புத் துறையோட மூலதன பட்ஜெட்டுல,  ஒரு பகுதி,  நம்ம நாட்டுல தயாரிக்கப்படும் கருவிகளுக்காகன்னு,  தனியா ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கு.  

இப்பக்கூட, நீங்களே கவனிச்சிருக்கலாம்,  அதாவது 101 பாதுகாப்புத் துறைப் பொருட்களை,  முழுமையான முறையில,  உள்நாட்டுலயே வாங்கிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு.   இனிவரும் காலத்தில,  இந்தப் பட்டியல் மேலும் பரவலா விரிவாக்கப்படும்.   இதில… மேலும் பொருட்கள் சேர்க்கப்பட்டுவரும்.   இந்தப் பட்டியலோட நோக்கம்,  இறக்குமதியை நிறுத்தறது மட்டுமே இல்லை.   மாறா நாட்டுல தொழில்களுக்கு,  ஊக்கம் அளிக்கப்படவும் இந்த முனைவு மேற்கொள்ளப்பட்டிருக்கு.  

இதன் காரணமா,  நண்பர்களே உங்க எல்லாருக்கும்,  அது தனியார் துறையாகட்டும்,  பொதுத்துறையாகட்டும்,  MSME ஆகட்டும்,  ஸ்டார்ட் அப்பாகட்டும்,  எல்லார் விஷயத்திலயும் அரசோட உணர்வும்,  வருங்காலத்துக்கான சாத்தியக்கூறும்,  இப்ப உங்க எல்லாருக்கும் தெளிவா வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கு.    

இதைத் தவிர,  நாங்க கொள்முதல் செயல்முறையை,  விரைவுபடுத்தவும்,  பரிசோதனை செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும்,  மேலும்,  தரம்சார்ந்த தேவைகளை,  ஆய்வறிவுக்கு இணக்கமான வகையிலயும்,  தொடர்ந்து செயல்பட்டுக்கிட்டு இருக்கோம்.   எனக்கு என்ன சந்தோஷம்னா,  இந்த எல்லா முயற்சிகளையும்,  இராணுவத்தோட மூன்று பிரிவுகளும்,  மிகவும் ஒருங்கிணைஞ்ச வகையில,  ஒத்துழைப்போட செயல்படுறாங்க,  ஒருவகையில உயிர்ப்பான பங்களிக்கறாங்க.  

நண்பர்களே,  நவீன கருவிகள் உற்பத்தியில தற்சார்பு நிலையை அடைய,  தொழில்நுட்ப மேம்பாடு ரொம்ப அவசியமானது.   எந்தக் கருவிகளை இன்னைக்கு தயாரிக்கறோமோ,  அவற்றோட,  அடுத்த தலைமுறை மேம்பாட்டை செய்யற வேலைகள்ல ஈடுபடுவதும் ரொம்ப அவசியமானது.  

இப்ப இதுக்காக,  DRDOவைத் தவிர,  தனியார் துறையிலயும்,  கல்வி நிறுவனங்கள்லயும்,  ஆய்வுக்கும் நவீனக் கண்டுபிடிப்புக்கும்,  ஊக்கமளிக்கப்பட்டு வருது.   தொழில்நுட்ப பரிமாற்றங்கற நிலையிலேர்ந்து விலகி,  அந்நிய நாட்டு கூட்டாளிகளோட, கூட்டு முயற்சிகள் வாயிலா,  கூட்டுத் தயாரிப்புகள் மீது வலு சேர்க்கப்பட்டு வருது.  

நாட்டோட,  சந்தையளவைப் கருத்தில எடுத்துக்கிட்டு,  நம்மோட அயல்நாட்டுக் கூட்டாளிகளுக்கு,  இப்ப நம்மநாட்டிலேயே,  தயாரிப்புல ஈடுபடுவது,  மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும்.    

நண்பர்களே, எங்களோட அரசாங்கம் தொடக்கத்திலிருந்தே,  சீர்திருத்து…. செயல்படு….. மாற்றமேற்படுத்து……..   இந்த மந்திரத்தை இலக்கா வச்சு செயல்பட்டு வந்திருக்கு.  

சிவப்புநாட்டாவைக் குறைக்கறதும்,  சிவப்புக் கம்பள வரவேற்பை அளிக்கறதும்,  இவையே நம்மோட முயற்சியா இருந்து வந்திருக்கு.   தொழில் செய்வதில் சுலபத்தன்மை விஷயத்தில,  2014ஆம் ஆண்டிலேர்ந்து இப்பவரை,  செய்யப்பட்ட மேம்பாடுகள்,  இவற்றோட விளைவை,  உலகம் முழுவதும் கவனிச்சிருக்கு.  

அறிவுசார் சொத்து,  வரிவிதிப்பு,  திவாலா நிலை மற்றும் கடன் நொடிப்பு,  இவை தவிர,  விண்வெளி மற்றும் அணுசக்தி மாதிரியான மிகவும் கடினமான சிரமம் நிறைஞ்ச,  இப்படி கருதப்படுறவையிலயும்,  இவை போன்றவற்றிலயும் நாங்க,  சீர்திருத்தங்களை செஞ்சு காட்டியிருக்கோம்.  

உங்களுக்கு ஒரு விஷயம் நல்லாவே தெரியும்….. கடந்த நாட்கள்ல,  தொழிலாளர் சட்டங்கள்ல சீர்த்திருத்தங்களும் கூட,  தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்துக்கிட்டு இருக்கு.   சில ஆண்டுகள் முன்னால வரை,  இந்த மாதிரியான விஷயங்கள் பத்தின நினைப்புக்கூட இல்லாம இருந்திச்சு.  

ஆனா இன்னைக்கு இந்தச் சீர்திருத்தங்கள்,  அடிமட்டம் வரை செயல்படத் தொடங்கியாச்சு.   சீர்திருத்தங்களோட இந்தத் தொடர்,  தடைப்படப் போகறதில்லை.   நாங்க மேலும் முன்னேறப் போவது உறுதி.   ஆகையினால தான் சொல்றேன்,  தடைப்படுதலும் கிடையாது,  களைப்படைவதும் கிடையாது நானும் சளைக்கப் போகறதில்லை நீங்களும் சளைக்க முடியாது.  

வருங்காலத்திலயும் நாம தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரணும்.   எங்க தரப்பில நாங்க உறுதியளிக்கறோம் இது எங்க அர்ப்பணிப்பு.  

நண்பர்களே,  கட்டமைப்பு வசதிகள் பத்தின விஷயத்தில,  defence corridor தொடர்பா விரைவா மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்,  உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகளோட இணைஞ்சு,  அதிநவீன கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருது.   இதன் பொருட்டு,  வரவிருக்கற ஐந்தாண்டுகள்ல,  20,000 கோடி ரூபாய்களுக்கான முதலீட்டு இலக்கு தீர்மானிக்கப்பட்டிருக்கு.  

Msme,  மற்றும் ஸ்டார்ட் அப்புகளோட தொடர்புடைய,  நிறுவனத் தலைவர்களை ஊக்குவிக்கறதுக்காக,  idesk தொடர்பான செய்யப்பட்ட முன்னெடுப்பு,  இதுவும் நல்ல பலன்களைக்க் கொடுத்துக்கிட்டு இருக்கு.   இந்தத் தளம் வாயிலா,  ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்புகள்,  இராணுவப் பயன்பாட்டுக்காக,  தொழில்நுட்பம்,  மற்றும் பொருட்களை,  மேம்படுத்தி இருக்காங்க.  

நண்பர்களே,  நான் மேலும் ஒரு விஷயத்தை இங்க திறந்த மனதோட முன்வைக்க விரும்பறேன்.   தற்சார்பு பாரதம் தொடர்பான எங்களோட மனவுறுதி,  உள்நோக்கிப் பார்த்தல் கிடையாது.  

உலகப் பொருளாதாரத்தை மேலும் விரிவாற்றலுடையதாக,  அதிக ஸ்திரமானதா ஆக்க,  உலகத்தில அமைதியை நிறுவ,  திறன் படைத்த ஒரு பாரதத்தை படைக்கறது தான்,  இதோட இலக்கு.   இந்த உணர்வு தான்,  பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில,  தற்சார்புத் தன்மை விஷயத்திலயும் இருக்கு.   நம்ம நாட்டுல பல நட்பு நாடுகளுக்காகவும்,  பாதுகாப்புத் தளவாடங்களை அளிக்கும் நம்பகத்தன்மையான விற்பனையாளரா ஆகற,  வல்லமை இருக்கு.  

இதனால நம் நாட்டோட  தளத்தகை கூட்டுறவுக்கும்,  மேலும் பலம் கிடைக்கும்.   மேலும் இந்தியப்பெருங்கடல் பகுதியில,  முழுமையான ஒரு பாதுகாப்பு அளிக்கற நம்மோட பங்களிப்பு,  மேலும் உறுதிப்படுத்தப்படும்.  

நண்பர்களே,  அரசோட முயற்சிகளும் அர்ப்பணிப்பு உணர்வும்,  உங்க முன்னிலையில வைக்கப்பட்டிருக்கு.   இனி தற்சார்பு பாரதம்ங்கற நம்மோட உறுதிப்பாட்டை,  இணைஞ்சு,  நாம இணைஞ்சு சாதிச்சுக் காட்டணும்.   அது தனியார் துறையாகட்டும்,  இல்லை பொதுத்துறையாகட்டும்,  அல்லது நம்மோட அந்நிய கூட்டாளிகளாகட்டும்,  தற்சார்பு பாரதம் எல்லாருக்குமே,  வெற்றியை அளிக்கவல்ல ஒரு அர்ப்பணிப்பு.  

இதன் பொருட்டு,  ஒரு சிறப்பான சூழலமைப்பை உருவாக்கித் தர்றது,  எங்க அரசோட கடப்பாடு.   இந்த ஆய்வுல,  உங்க தரப்பிலிருந்து வந்திருக்கற எல்லா ஆலோசனைகளும்,  அதிக பயனுடையதா இருக்கப் போகுது.   எனக்கு என்ன சொல்லப்பட்டிருக்குன்னா,  பாதுகாப்புப் பொருட்கள் மற்றும்  ஏற்றுமதி முன்னேற்றத்துக்கான வரைவு,  எல்லா பங்குதாரர்களோட பங்களிப்போட தயாரிக்கப் பட்டிருக்குன்னு.  

உங்க பின்னூட்டங்கள் துணையோட,  அதிக விரைவா இந்தத் திட்டத்தை அமல் செய்யறதுல உங்க ஒத்துழைப்பு கிடைக்கும்.   இன்னொரு விஷயம் என்னென்னா,  இன்றைய இந்தக் கருத்தரங்கு,  ஒரு நாள் கூத்தா இருந்துடக் கூடாது.   மாறாக,  மேலும் இந்த மாதிரியான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறணும்.  

தொழில்துறை மற்றும் அரசாங்கத்துக்கு இடையில,  தொடர்ந்து கருத்துப் பரிமாற்றங்கள்,  மற்றும் பின்னூட்டங்களோட இயல்பான கலாச்சாரம் ஏற்படணும்.   நான் முழுமையா நம்பறேன்,  இதுமாதிரியான கூட்டு முயற்சிகள் காரணமா,  நம்மோட உறுதிப்பாடுகள் வடிவம் பெறும். 

நான் மீண்டும் ஒரு முறை,  இதுக்காக நீங்க நேரம் ஒதுக்கி இருக்கீங்க,  தற்சார்பு பாரதம் காண தன்னம்பிக்கையோட நீங்க ஒன்று திரண்டிருக்கீங்க.   எனக்கு நம்பிக்கை இருக்கு இன்னைக்கு நாம மேற்கொண்டிருக்கற இந்த உறுதிப்பாட்டை,  நிறைவேத்த நம்மால இயன்ற அளவு நம்ம கடமைகளை,  மிகச் சிறப்பான வகையில நாம நிறைவேத்துவோம்னு.   நான் மீண்டும் ஒரு முறை,  உங்க எல்லாருக்கும்,  பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.   பலப்பல நன்றிகள். 

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe