மதுரை:
‛அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இவ்வாறு ஜெயலலிதாவை பார்த்து பேசியதாக பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக் கொடுத்துள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமது பேச்சில் வழக்கம்போல் அண்ணா, எம்.ஜி.ஆர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் பேசிய விஷயம்தான் தொண்டர்களை அப்போது பரபரப்பில் ஆழ்த்தியது. வழக்கமான அரசியல் பேச்சின் இடையே ” டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிக்கும்போது சசிகலா படத்தை போடாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாருமே நேரில் சென்று பார்க்கவில்லை. அம்மாவைப் பார்க்க சசிகலா குடும்பம் எங்கள் யாரையுமே விடவில்லை. ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது நாங்கள் எல்லாம் பொய் சொன்னோம்… அதற்காக இப்போது உங்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கக் கூடாது என்று அவர்கள் செய்த மர்மம் என்ன எனத் தெரியவில்லை. எல்லாம் விசாரணை கமிஷனில் தெரியவரும்” என்று பகீர் தகவலை அதிரடியாகப் பேசினார். அவரது பேச்சைக் கேட்டு, கீழே அமர்ந்திருந்த அதிமுக., தொண்டர்கள் மட்டும் அதிரவில்லை, மேடையில் இருந்த ‘தலை’களும் நெளியத்தான் செய்தனர்.
அதன் பின்னர், ”அதிமுகவை ஒரேயடியாக ஒழிக்க வேண்டும் என்றுதான் டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளார். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது ” என பேசிவிட்டு அமர்ந்தார்.
இன்றைய மாறிவிட்ட அரசியல் சூழலில், சசிகலாவை ‘சீன்’க்குள் கொண்டு வர அமைச்சர் இப்படி பேசியிருந்தாலும், ”ஜெயலலிதாவின் மரணத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் உள்பட, இப்போதுள்ள ‘முன்னாள் சசிகலா அடிவருடிகளான’ அமைச்சர்கள், அப்பலோ நிர்வாகம், லண்டன் டாக்டர், ஆளுநர், நடிகர்கள், விஐபிக்கள் என யாரெல்லாம் ஜெயலலிதாவை அப்பல்லோவில் பார்த்தோம்’ என்று சொன்னார்களோ அவர்கள் அனைவருமே பொய் சொன்னதாகத்தான் இப்போது அவர் இழுத்து விட்டிருக்கிறார் என்ற குற்றச்சாடு இப்போது பலமாகத் திரும்பியிருக்கிறது.