
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் என மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியுடன் பாக்கி செலுத்த வேண்டி உள்ளது.
இந்த தொகையை செலுத்துமாறு அந்த நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் ஜியோவின் வருகைக்கு பின்னர் பெரும் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனங்கள் அதனை செலுத்த முடியாமல் திணறி வந்தன.
எனவே நிலுவைத்தொகை செலுத்தாத தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின் போது தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத்தொகையை செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொலை தொடர்புத் துறை சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை கட்டுவதற்கு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங்கள் நிலுவை தொகையில் 10 சதவீதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். நிலுவைத்தொகை தவணையை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்- அவ்வாறு கட்டத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதன் விளைவாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்தக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டண விகிதங்கள் மலிவானவையாக இருக்கும் ஒரு நாட்டில் தங்கள் வாடிக்கையாளர்களின் பைகளில் இருந்து அதிக பணம் பெற இந்த நிறுவனங்கள் திட்டமிடக்கூடும் என்றும் தெரிகிறது.
இதை ஈடுசெய்ய தொலை தொடர்பு நிறுவனங்கள் 10-27% வரை கட்டணங்களை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.