
சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவின் மனதிலிருந்து உண்டானவரே ரிபு முனிவர். இயற்கையிலேயே அவர் இரண்டற்ற பரப்பிரம்மத்தில் நன்கு நிலைபெற்றிருந்தார். சாஸ்திரங்களின் களஞ்சியமாகவும் அவர் விளங்கினார். அவருக்கு நிடாகா என்று ஒரு சீடன் இருந்தான்.
ரிபு முனிவரிடம் பயின்றதால் நிடாகா எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். இருப்பினும் அவன் மனம் இரண்டற்ற பிரம்ம தத்துவத்தில் நிலைத்து நிற்கவில்லை.
தனது பாடங்கள் எல்லாம் முடிவடைந்ததும் அவன் குருவிடம் விடைபெற்றுக்கொண்டு தேவிகா எனும் நதிக்கரையில் அமைந்திருந்த வீர நகரத்தில் ஒரு கிரகஸ்தன் ஆக குடியேறினான். அவன் கிரகஸ்த தர்மங்களை உறுதியுடன் கடைப்பிடித்து கொண்டும் தான தர்மங்கள் செய்து கொண்டும் பக்தியுடன் இறைவனை வழிபட்டுக் கொண்டும் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்தான். வருடங்கள் பல கடந்தன.
ரிபு முனிவர் நிடாகாவை சந்தித்து பல வருடங்களாகி இருந்த போதிலும் அவன் இன்னும் ஞானம் அடையவில்லை என்பதை அறிந்திருந்தார். நல்ல பாண்டித்தியம் மரியாதையும் பக்தியும் நிடாகாவிடம் இருந்ததால் அவனை கை தூக்கி விட வேண்டுமென்று ரிபுவிற்கு கருணை பிறந்தது. எனவே அவர் வீர நகரத்தை நோக்கிப் புறப்பட்டார். நிடாகா தனது அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துவிட்டு எவராவது தன் வீட்டைத் தேடி வருகிறாரா என எதிர்பார்த்து தன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கே ரிபு மகரிஷி தன் உருவத்தை மறைத்துக் கொண்டு மாறு வேடத்தில் அங்கு வந்து இருந்ததால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் அவன் அவரை மிகுந்த மரியாதையுடன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாத பூஜை செய்தான்.
விருந்தாளியை கௌரவித்து உபசாரங்களை எல்லாம் செய்து முடித்த பின்பு நேராக அவரை சாப்பிட வேண்டும் என்று பிரார்த்தித்தான். சாப்பிட சம்மதித்த போதிலும் எனக்கு பரிமாறுவதற்கு நீ என்னென்ன பண்டங்களை தயார் இது வைத்துள்ளாய் என்று கேட்டார். ருசியான பல தின்பண்டங்களின் பட்டியலை கூறினான். இருந்தாலும் பண்டங்கள் எல்லாம் தாம் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்று கூறிவிட்டார். பிறகு தாம் விரும்பும் உணவு பண்டங்களை குறிப்பிட்டார். அவருடைய பட்டியலில் இருந்த இனிப்பு பண்டங்கள் என பாயாசமும் அல்வாயும் பிரதானமாக இடம் பெற்றிருந்தன. அவர் கேட்ட தின்பண்டங்களை நல்ல உயர்தரமான சாமான்களைக் கொண்டு தயார் செய்யுமாறு அவன் தன் மனைவிக்கு கட்டளையிட்டான். வெகு விரைவில் முனிவர் கேட்ட எல்லா உணவுப் பண்டங்களும் அவருக்கு பரிமாறப்பட்டன.
முனிவர் சாப்பிட்டு முடிந்ததும் நிடாகா பணிவுடன் அவரை வணங்கி மகாத்மாவே சாப்பாடு உங்களுக்குத் திருப்திகரமாக இருந்ததா தாங்கள் இங்கு சௌக்கியமாக இருக்கிறீர்களா என்று வினவினான். மேலும் அவர் எங்கு வசிக்கிறார். எங்கிருந்து வந்திருக்கிறார். எங்கே சென்று கொண்டிருக்கிறார். என்பதை தெரிந்துகொள்ள தான் ஆசைப்படுவதாக அவரிடம் மரியாதையுடன் கேட்டுக்கொண்டான்.
நிடாகாவின் கேள்விகளுக்கு பதில் கூறத் தொடங்கினார் ரிபு மகரிஷி. யாருக்கு பசி எடுத்தது அவர்தான் சாப்பிட்ட முடியும். அவர்தான் சாப்பிட்ட உடன் திருப்தி அடைகிறார். நான் எப்போதுமே பசித்திருந்ததில்லை. ஆகையால் எனக்கு எப்படி திருப்தி உண்டாகும். உணவு குழலில் இட்ட ஆகாரம் வயிற்றுக்குள் இருக்கும் ஜடராக்கினியால் செறிக்கப்பட்டதும் பசி ஏற்படுகிறது. அவ்வாறு உடலில் இருக்கும் நீரின் அளவு குறைந்ததும் தாகம் எடுக்கிறது. எனவே பசியும் தாகமும் உடலைச் சார்ந்த குணாதிசயங்கள். எனக்கு அவற்றுடன் சம்பந்தமே இல்லை. அமைதியும் திருப்தியும் மனதிற்கு ஏற்படுமே தவிர மனமில்லாத எனக்கு இல்லை. ஆகையால் சாப்பாட்டில் ஏற்படும் திருப்தியை பற்றியும் சௌக்கியத்தைப் பற்றி கேட்ட கேள்விகள் எனக்கு பொருந்தாது.
ஆகாயத்தை போல எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் ஆத்மா நான்.ஆகையால் குறிப்பிட இடத்திலிருந்து வருவதும் மற்றொரு இடத்திற்கு செல்வது சாத்தியமில்லை. தேகங்களில் காணப்படும் வித்தியாசங்களால் நீ நான் என்று எல்லோரும் வேறுபட்டே இருப்பதாக தோன்றினாலும் உண்மையில் அப்படியில்லை நான் பார்த்துக் கொண்டிருப்பது போல் நீயும் நானும் வரையறுக்கப்பட்ட தனித் தனி நபர்கள் இல்லை இரண்டற்ற ஆத்மா.
இனிய சுவையும் மணமும் கொண்ட ஒரு பண்டம் காலம் செல்ல செல்ல கெட்டுப்போய் அது சாப்பிடதகாததாகி அருவருப்பை உண்டு பண்ணுகிறது. சுவையற்றதாக இருக்கும் ஒரு பண்டமும் சுவையானதாக மாறுகிறது. இவ்வாறாக எந்த பொருளையும் இயற்கையிலேயே சுவையானது என்றோ அல்லது சுவையற்றது என்று கூறமுடியாது. முக்காலங்களையும் சுவையுடன் இருக்கக்கூடிய தின்பண்டம் எதுவுமில்லை. கோதுமை வெல்லம் பால் மற்றும் பழங்கள் ஆகிய உணவுப் பொருட்கள் எல்லாம் பிருதிவியின் மாறுபாடுகள் தான்.
நான் கூறியவாறு எண்ணிப் பார்த்து நீ உன் மனதில் சம நோக்குடைய தாக்கவேண்டும். இரண்டற்ற ஆத்மாவின் ஞானத்தைப் பெற்று இந்த சம்சார சாகரத்திலிருந்து ஒருவன் விடுபட வேண்டுமென்றால் அவன் எப்பொழுதும் சமத்துவத்தோடு இருக்கவேண்டும். மகரிஷியின் கருத்தாழமிக்க வார்த்தைகளை கேட்ட நிடாகா மகா பிரபு உங்களுடைய ஆசீர்வாதங்களை எனக்கு அளிக்க வேண்டும் எனக்கு நன்மை செய்யவே தாங்கள் இங்கு வருகை தந்து இருக்கிறீர்கள். தாங்கள் யார் என்பதை தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்தவும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான்.
நான்தான் ரிபு. உன்னுடைய குரு .ஆத்ம தத்துவத்தை உனக்கு உபதேசிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன். உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் பரமாத்மாதான். வாஸ்வத்தில் சிறிதளவு. கூட வேற்றுமை எங்கும் இல்லை. இரண்டற்ற ஆத்மா மட்டுமே இருக்கிறது. என்று உபதேசித்தார். நிடாகா தன் குருவின் பாதங்களில் விழுந்து வணங்கினான். அவரைப் பலவாறு துதித்து வழிபட்டான். மகரிஷி அவனை ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பலவருடம் கழித்து தமது எல்லையற்ற கருணையால் உந்தப்பட்ட ரிபு மகரிஷி பரமாத்மாவில் தனது சிஷ்யனின் மனம் நிரந்தரமாக இன்னும் நிலை பெற்றிருக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டு சிஷ்யனை அனுக்ரஹிப்பதற்காகவே மீண்டும் வீர நகரத்திற்கு விஜயம் செய்தார்.
மிகுந்த ஆடம்பரத்துடன் நாட்டு அரசன் தனது பரிவாரங்களுடன் அவ்வூருக்குள் நுழைவதை ரிபு கவனித்தார். அப்பொழுது நிகாடா காட்டில் இருந்து சேகரித்த சமித்துக் குச்சிகளுடனும் தர்ப்பைப்புல்லுடனும் ஓர் ஓரமாக தனியாக நின்று கொண்டிருந்தான்.
படிப்பறிவில்லாத ஒரு மூடனைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு மகரிஷி அவன் காலில் விழுந்து வணங்கினார். மகாபுருஷர் பரிசுத்தமானவரே ஏன் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.
ஊருக்குள் ராஜா வந்து கொண்டிருக்கிறார். தெருக்கள் எல்லாம் ஒரே கூட்டமாக இருப்பதால் நான் இங்கு காத்துக் கொண்டு இருக்கிறேன் என்று நிடாகா கூறினான்.
ரிபு உடனே கேட்டார் இங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதாக தோன்றுகிறது. இங்கு இருக்கும் மக்கள் கூட்டத்தில் யார் ராஜா யார் மற்றவர்கள் என்று கூறுங்கள் என்று கூறினார்.
இதோ பெரிய யானை மீது அமர்ந்து கொண்டு வருபவர் தான் ராஜா. மற்றவர்கள் எல்லோரும் அவருடைய பணியாட்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
ரிபு: ஒரே சமயத்தில் நீங்கள் ராஜா மற்றும் யானையை சுட்டிக் காட்டி விட்டீர்கள். அவர்கள் யார் ராஜா எது யானை என்பது சற்று தெளிவாக கூறுங்கள்.
நிடாகா: கீழே இருப்பது யானை அதன் மேலே அமர்ந்திருப்பவர் ராஜா வாகனத்திற்கும் அதன்மேல் சவாரி செய்வதற்கும் இடையே சம்பந்தம் யாருக்கு தெரியாமல் இருக்கும்?
ரிபு: கீழ் மேல் என்று நீங்கள் சொன்னீர்கள் கருணை கூர்ந்து அந்த சொற்கள் தெளிவாக விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதைக் கேட்டு மிகவும் எரிச்சல் அடைந்தான் நிடாகா உடனே அவன் தோள்களில் ஏறி அமர்ந்தான் அவன் தன் இரு கால்களையும் விரித்து தோள்களின் இரு பக்கங்களும் தொங்க விட்டுக் கொண்டான். அதன் பின் ரிபுவை நோக்கி இப்பொழுது ராஜாவைப் போல் நான் மேலே இருக்கிறேன். யானையைப் போல நீ கீழே இருக்கிறாய் என கூறினான். இதை கேட்டவுடன் கோபமோ தயக்கமோ அடையாமல் உத்தம பிராமணரே நீங்கள் ராஜாவைப் போல் இருப்பதாகவும் என்னை யானையை போல் இருப்பதாகவும் விவரித்தீர்கள். அப்படி என்றால் உண்மையில் நீங்கள் யார் நான் யார் என்று கேட்டார்.
உண்மையில் இருப்பதெல்லாம் பரமாத்மாவே. சிறிதளவு கூட வேற்றுமை என்பது இல்லை இரண்டற்ற ஆத்மா மட்டுமே இருக்கிறது. என்று பல வருடங்களுக்கு முன் தாம் கூறிய அறிவுரையை நிடாகாவின் மனம் நினைத்து பார்க்குமாறு செய்தார். உடனே கீழே குதித்து ரிபுவின் சரணங்களில் விழுந்து வணங்கி அவற்றை தன் கைகளால் பற்றிக்கொண்டான் நிகாடா. பிரபு சந்தேகம் அன்றி தாங்கள் என் பெரு மதிப்பிற்குரிய குருநாதர் ரிபுமகரிஷி என்று சொல்லி அவரை போற்றினான்.
கருணையுடன் அவனைப் பார்த்து நீ மாணவனாக இருக்கையில் சிரத்தையோடு எனக்கு சேவை செய்தாய். உன் மேல் இருக்கும் அன்பினால் உனக்கு தத்துவத்தை உபதேசிப்பதாக நான் இங்கு வந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் இரண்டற்ற ஆத்மாவைப் பார் உனக்கு எனது பரிபூரண ஆசீர்வாதங்களைப் அளிக்கிறேன். என்று சொல்லி அவனை அனுக்ரஹித்தார். உடனே நிகாடா ஆத்ம ஞானத்தை அடைந்தான். தான் வந்த காரியம் நிறைவேறி விட்டதால் ரிபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.