Home சற்றுமுன் இழப்பீடும் அரசு வேலையும்.. தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்: நீதிமன்றம்!

இழப்பீடும் அரசு வேலையும்.. தற்கொலைகளை ஊக்குவிக்கும் செயல்: நீதிமன்றம்!

04 Aug29 Madras High Court

நீட் தேர்வு மாணவர்களின் பயத்தைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும், தேர்வு பயத்தைப் போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களில் நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மீண்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று நீதிபதி கிருபாகரன் அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் முறையிட்டார்.

அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாதலேயே மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாகவும், மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்தத் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அனுமதியும் வழங்கி உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version