Home சற்றுமுன் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம்! ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்!

விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்: மோடி பெருமிதம்! ‘குட்டு’ பட்ட ‘எட்டு’ எம்பி.,க்கள்!

மசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

rajyasabha-in-farmers-bill
rajyasabha-in-farmers-bill

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய அரசின் விவசாய மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா நிறைவேற்றத்தின் போது, மசோதா தாள்களை கிழித்து சபையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எட்டு எம்பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய வரலாற்றில் இன்று முக்கியமான தருணம். பார்லிமென்டில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த மசோதாக்கள் நம் விவசாயத்துறையை மாற்றுவதுடன் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்.பல ஆண்டுகளாக நமது விவசாயிகள் பல்வேறு தடைகளாலும், இடைத்தரகர்களிடமும் சிக்கியிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, இந்த மசோதாக்கள் அந்த தடைகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும். இந்த மசோதாக்கள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதுடன், அவர்களின் வாழ்க்கையை செழிப்பாக்கும்.

நமது விவசாயத் துறைக்கு, நவீன தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவி கிடைப்பதுடன், அவர்களின் உற்பத்தியை நல்ல முறையில் அதிகரிக்க உதவும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

நான் முன்னரே சொன்னது போல், மீண்டும் சொல்கிறேன். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். அரசு கொள்முதல் முறை தொடரும். நாங்கள் விவசாயிகளுக்கு சேவை செய்யவே உள்ளோம். விவசாயிகளை ஆதரிக்கவும், வரும் தலைமுறையினரின் சிறந்த எதிர்காலத்திற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்… என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடியின் விவசாய ஆதரவுக் கொள்கைகள் குறித்தும் இந்த மசோதா குறித்தும், தமிழக பாஜக., ஒரு காணொளி வெளியிட்டது. அது…

முன்னதாக இந்த மசோதா, மக்களவையில் சில நாட்களுக்கு முன் நிறைவேறியது. தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

rajyasabha-mps-in-farmers-bill

இதனை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின. திரிணமுல் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையன், காங்கிரஸ் எம்.பி., ரிபுன் போரா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த ஹரிவன்சின் மைக்கைப் பறிக்க முயன்றனர். அவைத் தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், பேப்பரைக் கிழித்து எறிந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடிய போது, குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, நேற்று மாநிலங்களவையில் நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மாநிலங்களவையில் நடந்தது கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது! குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு ஆகியவை ஒரு போதும் நிறுத்தப்படாது என்று ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விவசாயிகள் விலை பொருட்களை விற்க முடியும் என்றார் ராஜ்நாத் சிங்.

இதனிடையே, அவையில் பேப்பர்களை கிழித்து எறிந்தும், துணை தலைவர் ஹரிவன்சின் மைக்கை பறிக்கவும் முயன்ற எம்.பி.,க்கள் மீது அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு நடவடிக்கை எடுப்பார் என்று கூறப் பட்டது.

eight-mps

அதன்படி எட்டு எம்பி.,க்கள் மீது அவை நடவடிக்கை பாய்ந்துள்ளது. எட்டு பேரும் கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்