சூர்யாவின் இந்தக் கருத்து, நீதிமன்றத்தை அவமதித்துப் பேசியதுதான் என்று குறிப்பிட்டு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்தக் கருத்து, நீதிமன்றத்தை அவமதித்துப் பேசியதுதான் என்று குறிப்பிட்டு, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா நேற்று கருத்து தெரிவித்தார். நீட் தேர்வு எழுத ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, தேர்வு எழுதுவதற்கு முன்பே தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து நடிகர் சூர்யா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது..’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விமர்சனம், நீதிமன்றத்தின் செயல்பாடு மீதான அவதூறு என்று குறிப்பிட்டு, இவ்வாறு அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது!
“நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்.