Home இந்தியா தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

தெலங்காணாவின் செல்லப் பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள் இன்று!

telugu-actor-baidi
telugu actor baidi

பைடி ஜைராஜ்
(Paidi Jairaj – செப். 28, 1909 -ஆகஸ்ட் 11, 2000)

தாதாசாகெப் பால்கே அவார்டு பெற்ற தெலங்காணாவின் செல்லப்பிள்ளை பைடி ஜைராஜ் 111 வது பிறந்தநாள். இன்று. பைடி ஜைராஜ் நீண்ட திரையுலக வாழ்க்கை கொண்டவர்.

இந்திய திரைத் துறையில் தெலங்காணா மாநிலம் கரீம்நகரை அடுத்த சிர்சிலாவில் பிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், தாதா சாகிப் பால்கே விருது பெற்றவர்.

இவர் 156 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 300க்கும் மேல் ஊமைப் படங்களிலும், பேசும் (டாக்கி) படங்களிலும் நடித்துள்ளார். கவிக்குயில் சரோஜினி நாயுடு ஜைராஜுக்கு சித்தி முறை.

சிர்சிலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜைராஜ் ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் படித்து வந்த போது சினிமா ஆசையால் 1929ல் பாம்பாய் சென்றார். தன் இருபதாவது வயதில் 1930 ல் முதன்முதலாக ஸ்பார்க்ளிங் யூத் என்ற ஊமைப் படத்தில் நடித்தார். 1931 ல் தொடங்கிய பேசும் டாக்கி யுகத்தில் ஷிகாரி என்ற உருது திரைப்படத்தில் நுழைந்தார்.

அதன்பின் சாந்தாராம், பிரித்விராஜ் கபூர், போன்ற பெரிய ஹீரோக்களோடு மற்றும் ஒரு பெரிய ஹீரோவாக பெயர் வாங்கினார்.

நிருபமாராய், சசிகலா, தேவிகா ராணி, மீனா குமாரி போன்ற ஹீரோயின்களோடு நடித்தார். பல வெற்றிப் படங்களைக் கண்டார்.

ஹிந்தி, உருது மொழிகளில் சுமார் 170 படங்களில் நடித்த தெலுங்கரான பைடி ஜைராஜ் அதிகமாக ஷாஜகான், பிரிதிவிராஜ் சவுகான், ராணா பிரதாப் சிங், திப்பு சுல்தான், அலாவுதீன், சந்திரசேகர ஆசாத் போன்ற வரலாற்று பாத்திரங்களை ஏற்று நடித்தார். ஆனால் இவர் ஒரு தெலுங்கு படத்தில் கூட நடிக்கவில்லை.

மெஹர், மாலா, பிரதிமா, ராஜ்கர் என்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார். 1951 ல் நர்கீஸ் கதாநாயகியாக நடித்த சாகர் படத்தை தயாரித்தார்.

இவருக்கு வாழ்நாள் சாதனையாளராக தாதா சாகிப் பால்கே விருதினை 1980 ல் இந்திய அரசு அளித்து கௌரவித்தது. இவர் மனைவி பஞ்சாபியான சாவித்திரி. இவருக்கு இரு புதல்வர்களும் நான்கு புதல்விகளும் உள்ளனர்.

பைடி ஜைராஜ் ஆகஸ்ட் 11, 2000 ல் தன் 90வது வயதில் காலமானார். 2018 ல் தெலங்காணா அரசு ஜைராஜின் நீண்ட திரைப்பட வாழ்க்கையை கௌரவிக்கும் விதமாக ஒரு மணி நேர டாக்குமெண்ட்ரி படம் எடுத்து வெளியிட்டது.

கட்டுரை- ராஜி ரகுநாதன்,
ஹைதராபாத்-62.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version