
சென்னை: ஆம் ஆத்மியினரின் முற்றுகைப் போராட்டத்தால் இதுவரை அமைதியாக இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இப்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தி ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆம்ஆத்மி கட்சியினர் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் போது பாதுகாப்பு வளையத்தையும் மீறி போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். இதனால் உயர் போலீஸ் அதகாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இந்தப் பாதுகாப்பில் மாநில போலீசாரே ஈடுபடுவர். டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கூடுதல் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவருக்கு வழக்கமான பாதுகாப்பே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது வீட்டு முன்பு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதால் தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.