Home சற்றுமுன் ஒரே நாடு; ஒரே கார்டு: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

ஒரே நாடு; ஒரே கார்டு: தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்!

one-nation-one-ration
one-nation-one-ration

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார். 

தமிழகம் முழுவதும் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப் பட்டுள்ளது.  தேசிய அளவில் குடும்ப அட்டைதாரர்கள் சொந்த மாநிலத்தை விட்டு இடம்பெயரும்போது தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெறத்தக்க வகையில் ஒரேநாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் இன்று முதல் 32 மாவட்டங்களிலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதியில் இருந்தும் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புலம்பெயரும் முன்னுரிமை  குடும்ப அட்டைதாரர்கள் பயோமெட்ரிக் தகவல் உறுதிப்படுத்தல் முறையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் கீழ், பிற மாநில தொழிலாளர்களுக்கு  ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  நியாய விலைக் கடைகளில்  பொருட்கள் போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் தங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் மூலம் பொருட்களை பெற ஏதுவாக உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்குள் வசிக்கும் கிராமம்  தவிர பிற இடங்களில் உள்ள  நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது! ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என புகார்கள் வந்ததை அடுத்து பாமாயில் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version