மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்த சோனு சூட்.
ரியல் ஹீரோ சோனூசூட் தன் சேவை நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார்.
எங்காவது யாருக்காவது பிரச்சனை என்ற விஷயம் தெரிந்த உடனே… தன் கண் பார்வைக்கு வந்தால் போதும்… உடனே அதற்குத் தீர்வு கண்டு தன் பெரிய மனதை வெளிப்படுத்தி வருகிறார்.
லாக்டௌன் தொடங்கிய நாள் முதல் பல உதவிச் செயல்களை புரிந்துள்ள சோனு சூட் அண்மையில் சிக்னல் கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிட்ட மாணவர்களுக்கு உதவி அளித்து உள்ளார்.
நண்பர்களோடு சேர்ந்து மொபைல் டவர் ஏற்பாடு செய்து அவர்களுடைய கல்வி தடைபடாமல் உதவியாக நின்றுள்ளார்.
இதனால் சோனூசூட் மீது மீண்டும் ஒருமுறை பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
லாக்டௌன் பின்னணியில் கல்விக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. செல்வந்தர்களின் வீட்டு மாணவர்களுக்கு படிப்பு நன்றாகவே நடந்து வந்தாலும் மிகவும் ஏழை குடும்பத்து மாணவர்கள் மட்டும் ஸ்மார்ட்போன் கிடைக்காமல் பல தடங்கல்களை எதிர் கொண்டுள்ளார்கள். எப்படியோ சிரமப்பட்டு போன் வாங்கினாலும் சிக்னல் கிடைக்காமல் இதுபோன்ற சூழ்நிலையில் சிரமத்துக்கு உள்ளாகிய சில மாணவர்களின் வீடியோக்கள் சோஷல் மீடியாவில் வைரல் ஆயின.
ஹரியானாவில் உள்ள மோர்னில் என்ற இடத்தில் தீபனா கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் சிக்னலுக்காக மரக் கிளைகளில் அமர்ந்து கல்வி கற்கும் காட்சிகளை ஷேர் செய்தார் ஒரு நெட்டிசன். மேலும் அந்த படங்களை சோனூசூட் மற்றும் அவருடைய நண்பர் கரன் கில்ஹோத்ராவுக்கு டேக் செய்தார். உடனடியாக அந்த இரு நண்பர்களும் மொபைல் டவர் கட்ட ஏற்பாடு செய்து விட்டார்கள்.
இந்த விஷயம் குறித்து பேசுகையில், "மாணவர்களே நம் எதிர்காலத் தலைவர்கள். அவர்களுக்கும் சமமான உரிமைகளும் உயர்ந்த எதிர்காலமும் பெறுவதற்கு அனைத்து வித தகுதிகளும் உள்ளன. அவற்றைப் பெறுவதில் மாணவர்களுக்கு எப்படிப்பட்ட தடங்கல்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் கடமை. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை ஏற்படாவண்ணம் மொபைல் டவர் ஏற்பாடு செய்ததை எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன். இனி அங்கு சிக்னலுக்காக யாரும் மரத்தின் மீது ஏறி கிளைகளில் அமர வேண்டிய தேவை இருக்காது" என்று எப்போதும் போலவே தன் நல்ல மனதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் சோனூசூட்.
அண்மையில் சண்டிகரில் சில மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அவர் வாங்கிக் கொடுத்த விஷயம் தெரிந்ததே. ஆபத்தில் உள்ளவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று உதவி செய்து அவர்களை துயரக் கடலில் இருந்து கரை சேர்க்கும் மனிதாபிமானத்திற்கு அடையாளமாக நின்றுள்ளதால் ஐநா சபை அவருக்கு ஸ்பெஷல் ஹ்யூமானிடேரியன் அவார்டு அளித்து கௌரவித்த விஷயம் தெரிந்ததே.