Home உரத்த சிந்தனை பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை!

maalan narayanan
maalan narayanan

பண்டைய சமுதாயம் எல்லாவற்றிலும் பெண்கள் இரண்டாம் நிலையிலே, ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாக, தீட்டுப்பட்டவளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.அந்தச் சமூகங்களில் உருவான மத நூல்களில் இத்தகைய வாக்கியங்களைப் பார்க்கலாம்.

யூத சமுதாய வாழ்க்கைச் சித்தரிக்கும் பழைய ஏற்பாட்டின் வசனங்கள் ஓர் உதாரணம். புத்தர் ஒரு கால கட்டம் வரை பெண்களை அவரது சங்கத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்தார். அவரது சித்தி போன்றவர்களைக் கூட.

பண்டைய இந்து நூல்களிலும் அது போன்ற வரிகள் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவம், இஸ்லாம்,சீக்கியம் போன்ற மதங்களைப் போல ஒரு பிரதி சார்ந்த (text based) மதமல்ல இந்து மதம். அதில்  பல வகையான நூல்கள் உண்டு. ஆனால் எந்த ஒரு  நூலின் அடிப்படையிலும் அந்த மதம் கட்டப்படவில்லை. அது காலப்போக்கில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அங்கீகரித்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு வளர்ந்தது. It evolved. 

இந்து மதத்தில் பெண்களை மிக உயர்வாக மதித்தவர்கள், கொண்டாடியவர்கள் , வணங்கியவர்கள் உண்டு. பாரதி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் ஆகியோர் சில உதாரணங்கள். இந்துக் கோயில்கள் பலவற்றிலும் பெண் தெய்வத்தின் பெயரையும் சேர்த்து  இன்னார் சமேத என்று குறிப்பிடுவதுதான் வழக்கம். (காந்திமதி சமேத நெல்லையப்பர்) சில கோவில்கள் பெண் தெய்வங்கள் முதன்மை தெய்வமாக (principal deity)  குறிப்பிடுவது உண்டு (மதுரை மீனாட்சி ஓர் எடுத்துக் காட்டு)

பெண் தெய்வங்களை முதன்மைப்படுத்திய பண்டிகைகள் உண்டு (நவராத்ரி) பெண் தெய்வங்கள் மீதான பிரத்யேகமான தோத்திரங்கள் உண்டு. (லலிதா சகஸரநாமம், அபிராமி அந்தாதி) சக்தி சிவன் உடலில் இடப்பக்கமும், லஷ்மி விஷ்ணுவின் மார்பிலும் இருப்பதாக சித்தரிப்புகள் உண்டு. பெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால் இவையெல்லாம் இருந்திருக்க சாத்தியமில்லை.

அப்படியிருக்க ஆண் மையப்படுத்தப்பட்ட மற்ற மதங்களை விமர்சிக்காமல், இந்துமதத்தை மட்டும் தனிமைப்படுத்தி விமர்சிப்பது அல்லது இகழ்வது காழ்ப்பின் அடிப்படையிலானது. அரசியல் நோக்கம் கொண்டது.

அதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.

  • மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்கள்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version