Home சற்றுமுன் நிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

cyclone-nivar1
cyclone-nivar1

நிவர் புயல் காரணமாக, சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சூறாவளி மற்றும் கனமழை காரணமாக குடிசை வீடுகள், விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படலாம். மின்சாரம், தொலைதொடர்பு வசதிகள் இதனால் பாதிக்கும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். வாழை மரங்கள், பப்பாளி மரங்கள், தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்படலாம். அரசு மற்றும் பேரிடர் துறை சொல்வதை கேட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்!

நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசுகிறது என்றும், சென்னையில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இன்று இரவு எட்டு மணிக்கு பிறகே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai-floods

இதனிடையே, நிவர் தீவிர புயலால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கடலோரக் காவல்படை மற்றும் முப்படை வீரர்கள் விரைந்தனர். கடலோர காவல் படையின் 100 வீரர்கள் அடங்கிய 5 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரு குழுக்கள் மண்டபம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் 80 வீரர்கள் அடங்கிய 8 குழுக்கள் 2 படகுகளுடன் சென்னைக்கும், 6 பேரிடர் மீட்பு குழுக்கள் திருச்சிக்கும் சென்றுள்ளன. புயல் கரையைக் கடந்த பின் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விமானப்படையின் 8 ஹெலிகாப்டர்கள் பெங்களூரு, சூலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் வெள்ள மீட்புக் குழுவினர், சென்னை, நாகப்பட்டினம் ராமேஸ்வரம் மற்றும் கடற்படை தளம், விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் மையம் கொண்டு அதி தீவிர புயலாக உருப்பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இரானிய மொழியில் நிவர் என்றால் வெளிச்சம் என்று பொருள்.

nivar-cyclone-1

முன்னதாக, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது….

நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி கரையைக் கடக்கக்கூடும். இந்தப் புயல் கரையைக் கடந்த பிறகும், அதனுடைய தாக்கம் 6 மணி நேரத்துக்கு தொடரும். பின்னர் படிப்படியாக வலுவிலக்கும். இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் காற்று வீசக் கூடும்.

திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த காற்று, மணிக்கு 55 கி.மீ., முதல் 60 கி.மீ., வரையிலும் சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும்… என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version