சென்னை: லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே பதவியிலிருக்கும் போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் அனைவருக்கும் மிகப்பெரிய தலைக்குனிவு உண்டு. ஆனால் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களின் ஒரே நோக்கம் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான். என்ன வறட்சியோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் லஞ்ச வேட்டையை நோக்கமாக கொண்டு அமைச்சர்கள் செயல்படுகிற காரணத்தால் பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டம் தான் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் அறிவொளி ஆகியோரின் மரணங்கள். இந்தியாவிலேயே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வந்ததற்கு மிகப்பெரிய பின்னடைவு தற்போதைய ஆட்சியில் ஏற்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பணிநியமனம் செய்துவிட்டு, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிட வேண்டும். இது காலந்தொட்டு நடக்கும் நடைமுறையாகும். தற்போது 62 ஆசிரியர் பணி நியமன ஒப்புதலுக்காக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக 2013-14 ஆம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு, சம்பளமும் தரப்படாமல் உள்ளது. இந்த ஒப்புதலுக்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு முழு தொகையையும், ஒரே தவணையில் கப்பம் கட்டினால் தான் ஒப்புதல் கிடைக்கும் என்கிற அவலநிலை குறித்து வெட்கப்பட வேண்டிய நிலை இன்றைக்கு மாவட்டத்தில் கல்வித்துறை செம்மையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கல்வி அலுவலர் நாகராஜன், கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துப்பிள்ளை ஆகியோர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பாக புரோக்கர்களாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த லஞ்ச வேட்டையில் இந்த அதிகாரிகள் பலரோடு பேசிய ஒலி நாடாவை கேட்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த ஒலி நாடாவை ஆதாரமாக வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளையும், இந்த லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. அப்படி தொடர்வது தமிழகத்தில் கல்வித்துறையையே சீரழிக்கிற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இக்கொடுமை குறித்து தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பலமுறை கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதற்கு தீர்வு காணாமல், அதற்கு மாறாக மிரட்டி அச்சுறுத்துகிற வேலையை கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். எனவே, ஆசிரியர் நியமனங்களில் எவ்வித ஊழலும் நடைபெறாமல் பணி நியமன ஆணை வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
லஞ்ச வேட்டை கல்வி அமைச்சர் வீரமணியை கைது செய்க; ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari