உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று ஒரு பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற கரடி இன்று வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. முன்னதாக இந்தக் கரடி தாக்கியதில் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் உள்பட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்தில் ரேலியா அணை பீட் பகுதியில் இருப்புகல், தொத்தமுக்கு கிராமத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் ஹாலன் என்பவரின் மனைவி மாதி (50). இவர், திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென மாதியின் மீது பாய்ந்து தாக்கியது. இதில், மாதியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது கணவர் ஹாலன், உறவினர் குமார் ஆகியோர் கரடியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது கரடி, ஹாலன், குமார் ஆகியோரையும் தாக்கியுள்ளது. இதில், அவர்களின் முகம், கண், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள், தீப்பந்தத்தை கொளுத்தி கரடியை விரட்டினர். கரடி அங்கிருந்து ஓடும்போது மாதியை இழுத்துக் கொண்டே ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கோத்தகிரி வனத் துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹாலன், குமார் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார், வனத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் மிலானியஸ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கரடி இழுத்துச் சென்ற மாதியை தேயிலை தோட்டப் பகுதியில் தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர், உயிரிழந்த நிலையில் மாதியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மாதியின் உடல், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆபத்தான நிலையிலுள்ள ஹாலன், குமார் ஆகியோருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களாகவே இங்கு கரடி தொல்லை இருந்து வருவதாகவும், இதுகுறித்து வனத்துறைக்கு புகார் கொடுத்த போதும் அவர்கள் கரடியை பிடிக்க கூண்டு இல்லை என்றும், கூண்டு வந்ததும் கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெத்தனமாக பதிலளித்ததாகவும், வனத்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து இங்கு வந்துள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை தீவிர வேட்டை நடத்திய வனத்துறையினர், கரடியை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர்.
கோத்தகிரியில் பெண்ணைக் கொன்ற கரடி சுட்டுக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories