To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மார்கழிச் சிறப்பு: தெருக்களில் பஜனை வீதி உலா தொடக்கம்!

மார்கழிச் சிறப்பு: தெருக்களில் பஜனை வீதி உலா தொடக்கம்!

bajan-in-nellai
திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெரு மார்கழி மாத பஜனை வீதி உலா இன்று காலை தொடங்கியது

மார்கழி மாதம் இன்று பிறப்பதை முன்னிட்டு, சகல விஷ்ணு ஆலயங்களிலும் அதிகாலை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தொடங்கின. இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை திருப்பாவை பாடல்களை பக்திப் பரவசத்துடன் பாடும் நிகழ்ச்சியும் தொடங்கியது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருமால் திருக்கோயில்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் இந்த மாதம் முழுதும் நடக்கின்றன. தற்போது கொரோனா நோய்த் தொற்று காலம் என்பதால், திறந்தவெளியில் ஊர்வலம் இல்லாமல் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து, பஜனைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மார்கழி மாத வழிபாடு என்பது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் மிகப் பழைமையான வழிபாடு! மார்கழி மாதத்தில் பெண்கள் இருக்கும் பாவை நோன்பு என்பது தொன்று தொட்டு கடைப்பிடிக்கப் பட்டு வருவது. தமிழ்ப் பண்டைய இலக்கியங்களில் குறிக்கப் படும் நோன்பு இது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, ஆழ்வார்கள் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்து விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.

அதே போல் சிவாலயங்களிலும் திருவெம்பாவை நோன்பு கடைப்பிடிக்கப் படுகிறது. ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திற்கு 9 நாட்கள் முன்பு தொடங்கி கடைப்பிடிக்கப்படுகிறது. இது, கார்த்தியாயினி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் ஓர் அம்சமாக, அதிகாலை எழுந்து நீராடி, சக பக்தர்களுடன் இணைந்து, இறைவனின் திருப்பெயரைப் பாடி, வீதிகளில் உலா வந்து, அனைவருக்கும் தெய்வீக மணம் கமழச் செய்வர். இதை முன்னிட்டு, பல்வேறு தலங்களிலும், கிராமங்களிலும் அன்பர்கள் வீதிகளில் பஜனைப் பாடல்களைப் பாடி, வலம் வந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

fifteen + 13 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version