spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமேக் இன் இந்தியா; சுதேசி பொருள்களுக்கு ஆதரவு அளிப்போம்! : பிரதமர் மோடி!

மேக் இன் இந்தியா; சுதேசி பொருள்களுக்கு ஆதரவு அளிப்போம்! : பிரதமர் மோடி!

- Advertisement -
manadhin kural
manadhin kural

மனதின் குரல் (19ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 27.12.2020

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.   இன்று டிசம்பர் மாதம் 27ஆம் நாள்.  நான்கு நாட்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு தொடங்க இருக்கின்றது.  இன்றைய மனதின் குரல், ஒருவகையில் 2020ஆம் ஆண்டின் நிறைவான மனதின் குரலாக ஒலிக்கும்.  அடுத்த மனதின் குரல் 2021ஆம் ஆண்டில் தொடங்கும்.  நண்பர்களே, நீங்கள் எழுதியிருக்கும் ஏகப்பட்ட கடிதங்கள் எனக்கு முன்பாகக் காணப்படுகிறன.  Mygovஇல் நீங்கள் அனுப்பியிருக்கும் ஆலோசனைகளும் கருத்துக்களும் என் முன்னே இருக்கின்றன.  எத்தனையோ பேர்கள் தொலைபேசி வாயிலாகத் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக் கின்றார்கள். 

பரவலான வகையிலே கடந்த ஆண்டின் அனுபவங்களும், 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளும் இருக்கின்றன.   கோலாபூரைச் சேர்ந்த அஞ்ஜலி அவர்கள், எப்போதும் போலவே, வரவிருக்கும் புதிய ஆண்டிலும் நாம் மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்; ஆனால் இந்த முறை நாம் ஒரு புதிய விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  நாம் ஏன் நமது நாட்டுக்கு வாழ்த்து தெரிவிக்க கூடாது!!!  

அஞ்ஜலி அவர்களே, உண்மையிலேயே இது மிகவும் அருமையான ஒரு யோசனை.  நமது தேசம், 2021ஆம் ஆண்டிலே, வெற்றிகளின் புதிய சிகரங்களைத் தொட வேண்டும், உலகத்தில் இந்தியாவிற்கென ஒரு அடையாளம் ஏற்படுத்தப்பட வேண்டும், நாடு சக்தி படைத்ததாய் ஆக வேண்டும் என்ற இந்த விருப்பத்தை விடவும் பெரிய விருப்பம் வேறு என்னவாக இருக்க முடியும்!!

நண்பர்களே, NamoAppஇலே, மும்பையைச் சேர்ந்த அபிஷேக் அவர்கள் ஒரு புதிய செய்தியை பதிவிட்டிருக்கிறார்.  2020ஆம் ஆண்டு நமக்கு எதையெல்லாம் அளித்ததோ, எவற்றையெல்லாம் கற்பித்ததோ, அவற்றை நாம் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை.  மேலும் கொரோனாவோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

இந்தக் கடிதங்களில், இந்தச் செய்திகளில், ஒரு விஷயம் பொதுவானதாக, சிறப்பானதாக இழையோடுவதை நான் காண்கிறேன்.  இதையே நான் உங்களோடு பகிர விழைகிறேன்.  பெரும்பான்மையான கடிதங்களில் தேசத்தின் திறமைகள், நாட்டுமக்களின் சமூக சக்தி ஆகியவற்றை மக்கள் முழுமையாகப் பாராட்டி இருக்கின்றார்கள். 

பொது ஊரடங்கு போன்ற ஒரு புதுமையான செயல்பாடு, உலகம் முழுமைக்கும் உத்வேகக் காரணியாக அமைந்ததோ, கைகளையும் தட்டுக்களையும் தட்டி நாட்டின் கொரோனா போராளிகளுக்கு எப்படி நாம் மரியாதை அளித்தோமோ, நமது ஒற்றுமையை வெளிப்படுத்தினோமோ, இவற்றையெல்லாம் பலர் நினைவு கூர்ந்தார்கள்.  

நண்பர்களே, நாட்டின் மிக எளிய குடிமகன் இந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்.  நான் நாட்டின் விருப்பங்களின் அற்புதமான பெருக்கினைக் கவனித்தேன்.  சவால்கள் நிறைய வந்தன.  சங்கடங்களுக்கும் குறைவேதும் இருக்கவில்லை.  கொரோனா காரணமாக உலகிலே விநியோகச் சங்கிலி தொடர்பான பல இடையூறுகள் ஏற்பட்டன, ஆனால் நாம் அனைத்துச் சங்கடங்களிலிருந்தும் ஒரு புதிய கற்றலைப் பெற்றோம்.  நாட்டிலே ஒரு புதிய திறனும் பிறப்பெடுத்தது.  இதைச் சொற்களில் வடிக்க வேண்டுமென்றால், இந்தத் திறனின் பெயர் தான் தற்சார்பு.

[su_expand more_text=”Show more” less_text=”Show less” height=”100″ hide_less=”no” text_color=”#333333″ link_color=”#0088FF” link_style=”default” link_align=”left” more_icon=”” less_icon=”” class=””]

நண்பர்களே,  தில்லியில் வசிக்கும் அபினவ் பேனர்ஜி தனது அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார், இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.  அபினவ் அவர்கள் தனது உறவுக்காரக் குழந்தைகளுக்கு பரிசளிக்க சில விளையாட்டுப் பொருட்களை வாங்க வேண்டியிருந்தது.  ஆகையால் அவர் தில்லியின் ஜண்டேவாலான் சந்தைக்குச் சென்றார்.  இந்தச் சந்தை சைக்கிள் மற்றும் பொம்மைகளுக்கு தில்லியில் பெயர் போனது என்று பலர் அறிந்திருப்பீர்கள்.

முன்பெல்லாம் விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் என்றாலே அவை இறக்குமதி செய்யப்பட்டவை என்று தான் பொருள் கொள்ளப்படும்;  மேலும் விலைமலிவான விளையாட்டுப் பொருட்களும் அயல்நாடுகளிலிருந்து தாம் வரும்.  ஆனால், அபினவ் அவர்கள் தனது கடிதத்தில் எழுதுகிறார், இப்போது அங்கே பல கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம், ஐயா இந்த பொம்மை தரமானது, ஏனென்றால் இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது, மேட் இன் இண்டியா என்கிறார்களாம்.  வாடிக்கையாளர்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளையே கேட்டு வாங்குகிறார்கள்.  இந்த ஒரு எண்ணத்தில் தான் எத்தனை மாற்றம்!!  இது நாம் கண்கூடாகக் காணும் சான்று.  நாட்டுமக்களின் கருத்திலே எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது பாருங்கள்.  அதுவும் ஒரே ஆண்டுக்குள்ளாக!!  இந்த மாற்றத்தைக் கணக்கிடுவது எளிதல்ல.  பொருளாதார வல்லுநர்களாலும் இந்த மாற்றத்தை எடை போட முடியாது. 

நண்பர்களே, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கட் முரளிப்ரஸாத் அவர்கள் எழுதியிருப்பதிலும் ஒரு வித்தியாசமான கருத்து இருக்கிறது.  வெங்கட் அவர்கள் 2021ஆம் ஆண்டுக்கான தனது ABCயைப் பட்டியலிட்டு இணைத்திருக்கிறார்.  இங்கே ABCக்கு என்ன பொருள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அப்போது தான் நான் வெங்கட் அவர்கள் கடிதத்தோடு இணைத்திருந்த ஒரு அட்டவணையை கவனித்தேன்.  அதன் பிறகு தான் எனக்குத் தெளிவானது – ABC க்கு அவரளிக்கும் விளக்கம், ஆத்மநிர்பர் பாரத் ABC சார்ட், அதாவது தற்சார்பு பாரதம் ABC அட்டவணை. 

modi-manadhin-kural
modi manadhin kural

இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.  வெங்கட் அவர்கள் தாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை எல்லாம் பட்டியலிட்டிருக்கிறார்.  இவற்றிலே மின்னணு சாதனங்கள், எழுதுபொருள்கள், உடல்பராமரிப்புப் பொருள்கள் ஆகியவை தவிர மேலும் பல பொருட்கள் அடங்கும்.  நாம் அறிந்தோ அறியாமலோ, பல அயல்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம், ஆனால் இவற்றுக்கான மாற்றுகள் இந்தியாவிலேயே எளிதாகக் கிடைக்கின்றன என்று வெங்கட் அவர்கள் கூறுகிறார்.  இனி தாம் நாட்டுமக்களின் உழைப்பும், வியர்வையும் கலந்திருக்கும் பொருட்களையே வாங்கப் போவதாகவும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார். 

நண்பர்களே,  ஆனால் இதோடு கூடவே அவர் மேலும் சில விஷயங்களைக் கூறியிருக்கிறார், இவை மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன.  நாம் தற்சார்பு பாரதத்தை ஆதரிக்கிறோம், ஆனால் நமது தயாரிப்பாளர்களும் ஒரு விஷயத்தை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்; அதாவது அவர்கள் தங்கள் தயாரிப்புகளில் சற்றுக்கூட தரக்குறைவு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  சரியான விஷயம் தானே!!

பூஜ்யம் பாதிப்பு, பூஜ்யம் குறைபாடு என்ற எண்ணத்தோடு நாம் பயணிக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது.  நாட்டுமக்கள் உறுதியான முடிவெடுத்திருக்கிறார்கள், பலமான முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது வீடுகள்தோறும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது.  இந்த நிலையில், நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.  எவை உலகளாவிய அளவில் சிறந்து இருக்கின்றனவோ, அவற்றை நாம் இந்தியாவிலே தயாரித்துக் காட்ட வேண்டும்.  இதன் பொருட்டு நமது தொழில்முனைவுடைய நண்பர்கள் முன்வர வேண்டும்.  ஸ்டார் அப்புகளும் முன்வர வேண்டும்.  இதுவே நான் நாட்டின் தயாரிப்பாளர்கள்-தொழில்துறைத் தலைவர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.  மீண்டும் ஒருமுறை நான் வெங்கட் அவர்களின் சிறப்பான முயல்வுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

[su_dropcap]ந[/su_dropcap]ண்பர்களே, நாம் இந்த உணர்வைப் பேண வேண்டும்,  பாதுகாக்க வேண்டும், இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நான் முன்னமேயே கூறியதை இன்று மீண்டும் நாட்டுமக்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.  நீங்களும் ஒரு பட்டியலைத் தயார் செய்யுங்கள்.  அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களை எல்லாம் சற்று ஆய்வு செய்யுங்கள்.  இவற்றில் அயல்நாட்டுத் தயாரிப்புகள் எப்படி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் நுழைந்திருக்கின்றன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.  ஒருவகையில் இவை நம்மைப் பிணைத்திருக்கின்றன.  இவற்றுக்கான இந்திய மாற்றுக்களைத் தெரிந்து கொண்டு, இனிமேல் நாம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களின் உழைப்பிலே உருவாக்கம் பெற்ற பொருள்களையே பயன்படுத்துவோம் என்று முடிவு செய்து கொள்வோம்.  ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு உறுதிப்பாடுகளை நாம் மேற்கொள்கிறோம் இல்லையா?  இந்த முறை நமது தேசத்தின் பொருட்டு நாம் கண்டிப்பாக இப்படி ஒரு உறுதியைச் செய்து கொள்வோம். 

எனதருமை நாட்டுமக்களே, அக்கிரமக்காரர்களிடமிருந்து, ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், பண்பாடு, நமது வழிமுறைகள் ஆகியவற்றைப் பாதுகாக்க தேசம் எத்தனையோ தியாகங்களைப் புரிந்திருக்கிறது, இவற்றையெல்லாம் இன்று நாம் நினைவுபடுத்திப் பார்க்கும் நாள்.  குரு கோவிந்த் சிங் அவர்களுடைய மைந்தர்களான, ஜோராவர் சிங்குக்கும் ஃபதே சிங்குக்கும் இன்றைய நாளன்று தான் உயிரோடு சமாதி எழுப்பப்பட்டது.  இளவல்கள் தங்கள் மத நம்பிக்கையைத் துறப்பார்கள், மகத்தான குரு பரம்பரையைக் கைவிட்டு விடுவார்கள் என்று அக்கிரமக்காரர்கள் மனப்பால் குடித்தார்கள்.  ஆனால்,  நமது இளவல்கள், குறைவான வயதிலும் கூட, ஆச்சரியமான தைரியத்தை வெளிப்படுத்தினார்கள், உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.  கல்லறை எழுப்பப்படும் வேளையிலே, செங்கற்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, சுவர் உயர்ந்து கொண்டே வந்த நேரத்திலே, மரணம் கண் முன்னே தாண்டவமாடிக் கொண்டிருந்தது.  இருப்பினும், அவர்கள் சற்றும் கலங்கவில்லை.  இன்றைய நாளன்று தான் குரு கோவிந்த் சிங் அவர்களுடைய அன்னையாரான தாய் குஜ்ரி அவர்களின் தியாக தினமும் ஆகும்.  கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பாக, ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்களின் தியாக தினமும் ஆகும்.  நான் தில்லியில் இருக்கும் குருத்வாரா ரகாப்கஞ்ஜிற்குச் சென்று, குரு தேக் பஹாதுர் அவர்களுக்கு என் அஞ்சலி மலர்களைக் காணிக்கையாக்கினேன், தலைவணங்கி வழிபட்டேன்.  இதே மாதத்தில் தான் ஸ்ரீ குரு கோவிந்த சிங் அவர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற்று, பலர் தரையில் படுத்து உறங்குகிறார்கள்.  ஸ்ரீ குருகோவிந்த சிங் அவர்களின் குடும்பத்தார் வாயிலாகப் புரியப்பட்ட உயிர்த்தியாகங்களை, மிகவும் உணர்வுபூர்வமாக மக்கள் நினைவில் நிறுத்துகிறார்கள்.  இந்த உயிர்த்தியாகமானது, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும், நாட்டிற்கும் ஒரு புதிய படிப்பினை.  இந்த உயிர்த்தியாகம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் மகத்தான செயலைப் புரிந்திருக்கிறது.  நாமனைவரும் இந்த உயிர்த்தியாகத்திற்குக் கடன்பட்டவர்கள்.  மீண்டுமொரு முறை, ஸ்ரீ குரு தேக் பஹாதுர் அவர்கள், அன்னை குஜ்ரி அவர்கள், குரு கோவிந்த சிங் அவர்கள், அவருடைய நான்கு மைந்தர்கள் ஆகியோரின் உயிர்த்தியாகத்தைப் போற்றுகிறேன்.  இப்படிப்பட்ட பல உயிர்த்தியாகங்கள் தாம் பாரதநாட்டை இன்றைய வடிவத்தில் பாதுகாத்து வைத்திருக்கின்றன, பராமரித்தும் வைத்திருக்கின்றன.

என் இனிய நாட்டுமக்களே, நான் இப்போது கூறவிருக்கும் விஷயம் உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.  இந்தியாவிலே leopards, சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 60 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  2014ஆம் ஆண்டிலே நாட்டில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7,900ஆக இருந்தது.  ஆனால் இதுவே 2019ஆம் ஆண்டிலே 12,852 என்ற எண்ணிக்கை ஆகி இருக்கிறது.  யாரெல்லாம் சிறுத்தைப்புலிகள் இயற்கையிலே சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைப் பார்த்ததில்லையோ, அவர்களால் அவற்றின் அழகைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது.  அவற்றின் வண்ணங்களின் அழகு, அவற்றின் இயக்கத்தில் இருக்கும் கவர்ச்சியை எல்லாம் அளவிட முடியாது என்று சிறுத்தைப்புலிகளைப் பற்றி ஜிம் கார்பெட் கூறியிருக்கிறார்.  நாட்டின் பெருவாரியான மாநிலங்களில், குறிப்பாக மத்திய இந்தியாவில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  சிறுத்தைப்புலிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மாநிலங்கள் என்றால் அவை, மத்திய பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்ட்ரம் ஆகியன.  மேலும் ஒரு பெரிய சாதனை என்னவென்றால், இந்த சிறுத்தைப்புலிகள் உலகம் முழுவதிலும் பல ஆண்டுகளாக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருகின்றன, உலகெங்கிலும் இவற்றின் வசிப்பிடங்களுக்குக் குந்தகம் ஏற்பட்டிருக்கிறது.  இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் சிறுத்தைப்புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகப்பட்டு, இது உலகிற்கே ஒரு புதிய பாதையைக் காட்டியிருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளிலே, இந்தியாவில் சிங்கங்கள், புலிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு பற்றியும், பாரதநாட்டின் வனப்பகுதிகள் அதிகரிப்பைப் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  இதன் காரணம், அரசாங்கம் மட்டுமல்ல, பல குடிமக்கள், பல அமைப்புகள் என பலரும் நமது வனப்பகுதிகள் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பில் இணைந்திருக்கின்றார்கள் என்பது தான்.  இவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். 

நண்பர்களே, தமிழ்நாட்டின் கோயமுத்தூரில் ஒரு நெகிழ வைக்கும் முயல்வு பற்றி நான் படிக்க நேர்ந்தது.  நீங்களும் சமூக ஊடகங்களில் இவை பற்றிய காட்சிகளைப் பார்த்திருக்கலாம்.  நாம் அனைவரும் மனிதர்களைச் சுமக்கும் சக்கர நாற்காலிகளைப் பார்த்திருக்கிறோம்; ஆனால் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் காயத்ரி, தனது தந்தையாருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ஒரு நாயிற்காக சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.  இந்தப் புரிந்துணர்வு உத்வேகம் அளிக்கிறது.  அனைத்து உயிர்களிடத்தும் தயையும் கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும்.  தில்லியின் NCR என்ற தேசிய தலைநகர்ப் பகுதி மற்றும் தேசத்தின் பிற நகரங்களின் நடுங்கவைக்கும் குளிருக்கு இடையே, அநாதரவான பிராணிகளைப் பராமரிக்க பலர், நிறைய பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.  அவர்கள் இந்தப் பிராணிகளுக்கு உணவு, அருந்த நீர், இவற்றுக்கென குளிராடைகள், படுக்கைகள் வரை ஏற்பாடுகள் செய்கிறார்கள்.  வேறு சிலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், இவர்கள் தினசரி பல நூற்றுக்கணக்கான பிராணிகளுக்கு உணவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள்.  இப்படிப்பட்ட முயல்வுகள் பாராட்டுக்குரியவை.  இதே போன்ற ஒரு நேரிய முயல்வு, உத்திரப்பிரதேசத்தின் கௌஷாம்பியிலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.  அங்கே சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள், பசுக்களைக் குளிரிலிருந்து காக்க வேண்டி, பழைய மற்றும் கிழிந்த கம்பளிகளைக் கொண்டு போர்வையை உருவாக்கி வருகிறார்கள்.  இந்தக் கம்பளிகளை, கௌஷாம்பி உட்பட பிற மாவட்ட சிறைகளிலிருந்து ஒன்று திரட்டி, இவற்றைத் தைத்து கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.  கௌஷாம்பி சிறையின் கைதிகள் ஒவ்வொரு வாரமும், பல போர்வைகளைத் தயாரிக்கிறார்கள்.  மற்றவர்களின் நலனுக்காக சேவை உணர்வு நிரம்பிய இந்த வகையிலான முயல்வுகளுக்கு நாம் ஊக்கமளிப்போம் வாருங்கள்.  உண்மையிலேயே இப்படிப்பட்ட நற்செயல்கள் தாம் சமூகத்தின் புரிந்துணர்வுகளை மேலும் சக்தியுடையதாக ஆக்குகிறது. 

என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று என் முன்னே இருக்கும் கடிதங்களில் இரண்டு பெரிய புகைப்படங்கள் உள்ளன.  இவை ஒரு கோயிலின் புகைப்படங்கள், முந்தையது, பிந்தையது என்று இருக்கிறது.  இந்தப் புகைப்படங்களோடு இணைந்திருக்கும் கடிதத்தில், தங்களைத் தாங்களே இளைஞரணி, youth brigade என்று கூறிக்கொள்ளும் இளைஞர்களின் ஒரு குழுவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு அருகே அமைந்திருக்கும் வீரபத்ரஸ்வாமி பெயரால் அமைந்திருக்கும் ஒரு பழமையான சிவாலயத்தில் இந்த இளைஞரணி உழவாரப்பணியை மேற்கொண்டது.  கோயின் நாலாபுறங்களிலும் கோரைப்புற்களும், புதர்களுமாக மண்டிக் கிடந்தன.  இவை எந்த அளவுக்கு வளர்ந்திருந்தன என்றால், அங்கே கோயில் இருப்பதேகூட கண்ணுக்குத் தெரியாமல் போனது.  ஒரு நாள், சில சுற்றுலாப் பயணிகள், மறந்து போன இந்த கோயில் பற்றிய ஒரு காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்கள்.  கோயிலைப் புனரமைப்பது என இளைஞரணி தீர்மானம் செய்தது.  இவர்கள் கோயிலைச் சுற்றி வளர்ந்திருக்கும் முட்புதர்கள், புற்கள், செடிகளை எல்லாம் அகற்றினார்கள்.  எங்கே எல்லாம் மராமத்தோ, கட்டுமானமோ செய்யத் தேவை இருந்ததோ, அங்கெல்லாம் அவர்கள் செய்தார்கள்.  இவர்களின் சிறந்த சேவையைப் பார்த்த உள்ளூர் மக்களும் தங்கள் உதவிக்கரங்களை நீட்டினார்கள்.  ஒருவர் சிமெண்ட் அளித்தார், வேறு ஒருவர் பூச்சு அளித்தார், இன்னும் சிலரோ வேறு பொருட்களைக் கொடுத்து தத்தமது பங்களிப்பை நல்கினார்கள்.  இந்த இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள்.  இந்த நிலையில் இவர்கள் வார  இறுதிகளில் நேரம் ஒதுக்கி, உழவாரப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.  கோயிற்கதவுகளை அமைத்தது மட்டுமல்லாமல், மின்னிணைப்பும் ஏற்படுத்தினார்கள்.  இந்த வகையில் இவர்கள் கோயிலின் பழைய மகோன்னதத்தை மீட்டெடுத்தார்கள்.  முனைப்பும், உறுதிப்பாடும் எந்த ஒரு இலக்கையும் பெற்றுத் தரும் வல்லமை வாய்ந்த இருபெரும் சக்திகள்.  இந்திய இளைஞர்களை நான் காணும் போது, எனக்குள்ளே ஆனந்தமும், ஆசுவாச உணர்வும் மேலிடுகின்றன.  ஏன் ஆனந்தமும் ஆசுவாச உணர்வும் ஏற்படுகின்றன என்றால், நாட்டின் இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற அணுகுமுறையும், செய்தே தீருவேன் என்ற உணர்வும் இருப்பதால் தான்.  இவர்களுக்கு எந்த ஒரு சவாலும் பெரியதே அல்ல.  எந்த ஒரு விஷயமும் இவர்களின் எட்டுதலுக்கு அப்பாற்பட்டது கிடையாது.  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆசிரியை பற்றி நான் படிக்க நேர்ந்தது.  N.K. ஹேமலதா என்ற இவர் விழுப்புரத்தில் ஒரு பள்ளியில், உலகின் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார்.  கோவிட் 19 பெருந்தொற்று நிலவும் வேளையிலும் தனது பயிற்றுவித்தலுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.  இவருக்கு முன்னால் கண்டிப்பாக சவால்கள் இருந்தன; ஆனால், இவர் ஒரு நூதனமான வழிமுறையைக் கைக்கொண்டார்.  இவர் படிப்பின் அனைத்து 53 அத்தியாயங்களையும் பதிவு செய்தார், animated video, இயங்குபடக் காணொளிகளை ஏற்படுத்தி, இவற்றை ஒரு பென் ட்ரைவ் கருவி வாயிலாக தனது மாணவர்களுக்கு விநியோகம் செய்தார்.  இதனால் இவருடைய மாணவர்கள் மிகுந்த பயன் பெற்றார்கள், இந்த அத்தியாயங்களைக் கண்ணால் கண்டு புரிந்து கொள்ள முடிந்தது.  இதோடு கூடவே, இவர் தனது மாணவர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் உரையாற்றி வந்தார்.  இது படிப்பின் மீது மாணவர்களின் ஆர்வத்தையும் தூண்டியது.  நாடெங்கிலும் கொரோனா காலத்தில், ஆசிரியர்கள் மேற்கொண்ட நூதனமான முயல்வுகளும், படைப்புத்திறனோடு கூடிய வகையில் பாடங்களை அளித்தலும், இணையவழிப் படிப்பு என்ற இந்த சூழ்நிலையில் விலைமதிப்பில்லாதவை.  இந்தப் படிப்புகளை எல்லாம் நீங்கள் கல்வி அமைச்சகத்தின் தீக்ஷா தளத்திலே கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என்று நான் அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.  இதனால் நாட்டின் தொலைவான பகுதிகளில் இருக்கும் மாணவ மாணவியருக்கு பெரும் ஆதாயம் உண்டாகும்.   

நண்பர்களே, இப்போது நாம் ஜார்க்கண்டின் கோர்வா பழங்குடியைச் சேர்ந்த ஹீராமன் அவர்களைப் பற்றிப் பேசுவோம் வாருங்கள்.  ஹீராமன் அவர்கள், கட்வா மாவட்டத்தின் சிஞ்ஜோ கிராமத்தில் வசித்து வருகிறார்.  கோர்வா பழங்குடிகளின் எண்ணிக்கை வெறும் 6000 மட்டுமே என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்; இவர்கள் நகரங்களை விட்டுத் தொலைவான மலைகளிலும் காடுகளிலும் வசித்து வருகிறார்கள்.  தங்களுடைய சமுதாயத்தின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களைப் பாதுகாக்க ஹீராமன் அவர்கள் ஒரு சவாலை மேற்கொண்டார்.  இவர் 12 ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு, வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்த கோர்வா மொழிக்கான அகராதியை ஏற்படுத்தினார்.  இந்த அகராதியில் இவர், வீட்டுப்பயன்பாட்டின் சொற்களை, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கோர்வா மொழியிலே ஏராளமான அர்த்தங்களோடு பதிவு செய்திருக்கிறார்.  கோர்வா சமூகத்திற்கு ஹீராமன் அவர்கள் புரிந்திருக்கும் இந்தச் செயல், நாடு முழுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

எனதருமை நாட்டுமக்களே, அக்பருடைய தர்பாரில் இடம்பெற்ற ஒரு பிரமுகராக அபுல் ஃபஸல் விளங்கினார் என்பார்கள்.  அவர் ஒருமுறை கஷ்மீரத்துக்குப் பயணப்பட்ட பின்னர், கஷ்மீரத்தில் காணப்படும் ஒரு காட்சியைக் கண்டால், கோபம் கொப்பளிக்கும் நபர்களும் கூட, தங்கள் கோபதாபங்களை எல்லாம் மறந்து ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்று பின்னர் கூறினார்.   உள்ளபடியே அவர் குங்குமப்பூ வயல்களைப் பற்றித் தான் கூறினார்.  குங்குமப்பூ, பல நூற்றாண்டுகளாக கஷ்மீரத்தோடு இணைபிரியாமல் இருப்பது.  இந்தக் கஷ்மீரத்தின் குங்குமப்பூ, புல்வாமா, பட்காவ், கிஷ்த்வாட் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு மே மாதத்தில், கஷ்மீரத்தின் குங்குமப்பூவுக்கு geographical tag, GI Tag, அதாவது புவியியல் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.  இதன் வாயிலாக, நாம் கஷ்மீரத்தின் குங்குமப்பூவை ஒரு உலக அளவில் பிரபலமான தர அடையாளமாக மாற்ற விரும்புகிறோம்.  கஷ்மீரத்தின் குங்குமப்பூ உலக அளவிலே, ஒரு மசாலாப் பொருளாக பிரபலமானது, இதிலே பலவகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.  இது நறுமணத்தை அளிக்கவல்லது.  இது அடர்நிறம் உடையது, இதன் இழைகள் நீண்டும், பருத்தும் காணப்படுகின்றன.   இதன் மருத்துவ குணத்தை இது மேலும் அதிகரிக்கிறது.  இது ஜம்மு மற்றும் கஷ்மீரத்தின் நிறைவான கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்குகிறது.  தரம் பற்றிப் பேசினோம் என்றால், கஷ்மீரத்தின் குங்குமப்பூ மிகவும் தனித்தன்மை வாய்ந்தது, பிற நாடுகளின் குங்குமப்பூவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.  கஷ்மீரத்தின் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீட்டு அங்கீகாரம் கிடைத்திருப்பதன் வாயிலாக, இதற்கென ஒரு தனி அடையாளம் ஏற்பட்டிருக்கிறது.  கஷ்மீரத்தின் குங்குமப்பூவிற்கு புவியியல் குறியீட்டு அடையாளம் கிடைத்த பிறகு, துபாயைச் சேர்ந்த ஒரு பெருவணிக வளாகம் இதை பெரிய அளவில் அறிமுகப்படுத்தியது.  இப்போது இதன் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.  தற்சார்பு பாரதம் உருவாக்கலின் நமது முயற்சிகளை இது மேலும் பலப்படுத்தும்.  குங்குமப்பூ விவசாயிகளுக்கு இதனால் சிறப்பான ஆதாயம் கிட்டும்.  புல்வாமாவின் த்ராலைச் சேர்ந்த ஷார் பகுதியில் வசிக்கும் அப்துல் மஜீத் வானியைப் பாருங்களேன்!!  இவர் தனது புவியியல் குறியீட்டு அங்கீகாரம் உடைய குங்குமப்பூவை, தேசிய குங்குமப்பூ அமைப்பின் உதவியோடு, பம்போர் வணிக மையத்தில், இணையவழி வர்த்தகம் வாயிலாக விற்று வருகிறார்.  இவரைப் போன்ற பலர், கஷ்மீரத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அடுத்த முறை நீங்கள் குங்குமப்பூ வாங்க நினைத்தால், கஷ்மீரத்துக் குங்குமப்பூவை வாங்க முடிவு செய்யுங்கள்.  கஷ்மீரத்து மக்களின் விருந்தோம்பலும், அங்கே விளையும் குங்குமப்பூவின் சுவையைப் போன்றே அலாதியானதாக இருக்கும். 

என் அன்புநிறை நாட்டுமக்களே, இரண்டு நாட்கள் முன்பாகத் தான் கீதா ஜெயந்தி கொண்டாடப்பட்டது.  நமது வாழ்க்கையிலே அனைத்துச் சூழ்நிலைகளிலும் கீதை நமக்குக் கருத்தூக்கம் அளிக்கிறது.  ஆனால், கீதை இத்தனை அற்புதமான நூலாக ஏன் விளங்குகிறது என்று நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?  இது ஏனென்றால், இது முழுக்கமுழுக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய சொற்கள் அடங்கியது.  கீதையின் மேலும் ஒரு மேன்மை என்னவென்றால், இது அறிந்து கொள்ள வேண்டும் என்ற தாகத்தில் துவங்குகிறது.  ஒரு வினாவோடு தொடங்குகிறது.  அர்ஜுனன், பகவானிடத்திலே ஆர்வம் மேலிட வினா எழுப்புகிறான், இதனால் அன்றோ உலகிற்கு கீதையின் ஞானம் கிடைக்கப் பெற்றது!!   கீதையைப் போலவே நமது கலாச்சாரத்தில் அடங்கியிருக்கும் அத்தனை ஞானமும், அறிந்து கொள்ளும் பேரார்வத்தின் உந்துதலாலேயே தொடங்கியிருக்கின்றன.  வேதாந்தத்தின் முதல் மந்திரமே, அதாதோ ப்ரும்ம ஜிஞ்யாஸா. 

அதாவது வாருங்கள், பிரும்மத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.  ஆகையால் தான் நாம் பிரும்மத்தை அறிந்து கொள்வது பற்றிப் பேசி வந்திருக்கிறோம்.  அறிந்து கொள்ளும் பேரார்வத்தின் சக்தியே இப்படிப்பட்டது தான்.  அறிந்து கொள்ளும் பேரார்வம் உங்களுக்குத் தொடர்ந்து புதியனவற்றுக்கான உத்வேகத்தை அளிக்கிறது.  சிறுவயதில் நாம் ஏன் கற்கிறோம் என்றால், நமக்குள்ளே கற்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது.  அதாவது, எப்போது வரை உந்துதல் இருக்குமோ, அதுவரை வாழ்க்கையும் இருக்கும்.  என்றுவரை கற்கும் பேரார்வம் இருக்குமோ, அன்று வரை புதியனவற்றைக் கற்பதும் தொடரும்.  இதிலே வயதோ, சூழ்நிலையோ, எதுவும் ஒரு பொருட்டு அல்ல.  கற்கும் பேரார்வம் ஏற்படுத்தும் ஆற்றல் பற்றிய ஒரு எடுத்துக்காட்டு எனக்குத் தெரிய வந்தது. 

இது தமிழ்நாட்டைச் சேர்ந்த முதியவர் ஸ்ரீ டீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி பற்றியது.  ஸ்ரீ டீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமியின் வயது 92.  இவர் இந்த வயதிலும் கூட, கணிப்பொறியில் தனது புத்தகத்தை எழுதி வருகிறார், தானே தட்டச்சு செய்கிறார்.  புத்தகம் எழுதுவது எல்லாம் சரி, ஆனால் ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்களின் காலத்தில் கணிப்பொறியெல்லாம் இருந்திருக்காதே என்று நீங்கள் எண்ணமிடலாம்.  பிறகு எப்போது இவர் கணிப்பொறியை இயக்கக் கற்றுக் கொண்டார்?  அவரது கல்லூரி நாட்களில் கணிப்பொறி இருந்ததில்லை என்பது சரி தான். 

sanskrit-scholor

ஆனால் அவரது மனதிலே கற்க வேண்டும் என்ற பேரார்வமும், தன்னம்பிக்கையும், அவரது இளமைக்காலத்தில் இருந்தது போலவே இன்னும் இருக்கிறது.  உள்ளபடியே ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி அவர்கள் சம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் பாண்டித்யம் பெற்றவர்.  இவர் இதுவரை சுமார் 16 ஆன்மீக நூல்களை எழுதியிருக்கிறார்.  ஆனால் கணிப்பொறி வந்த பிறகு, இனி புத்தகம் எழுதுதலும், அச்சிடுதலும் மாறி விட்டன என்று இவருக்குப் பட்டவுடன், இவர் தனது 86ஆவது வயதில், கணிப்பொறி இயக்குவதைக் கற்றார், தனது பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருளைக் கற்றார், இப்போது இவர் தனது புத்தகத்தை நிறைவு செய்து வருகிறார். 

srinivasacharya
srinivasacharya Today our honPM Modiji has mentioned the name of 96 year old active Sanskrit scholar publisher Writer Priest AzhichurSrinivasacharya from Mylapore in his monthly Manki baat

நண்பர்களே, எதுவரை வாழ்க்கை ஆற்றல் நிரம்பியதாக இருக்கிறதோ, அதுவரை வாழ்க்கையில் கற்கும் பேரார்வம் இறப்பதில்லை, கற்றுக் கொள்ளும் விருப்பம் மரிப்பதில்லை என்பதற்கு ஸ்ரீ டீ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமி அவர்களின் வாழ்க்கையே ஒரு மெய்சாட்சி.  ஆகையால் நாம் பின்தங்கி விட்டோம் என்றோ, தவற விட்டுவிட்டோம் என்றோ என்றும் நினைக்கக்கூடாது.  நம்மாலும் இதைக் கற்றுக் கொள்ள முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்!!   நம்மால் கற்க முடியாது, முன்னேறிச் செல்ல முடியாது என்றும் நாம் எண்ணமிடக்கூடாது. 

எனதருமை நாட்டுமக்களே, நாம் கற்கும் பேரார்வத்திலிருந்து, புதியனவற்றைக் கற்று, செயல்படுவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  புத்தாண்டில் புதிய உறுதிப்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  ஆனால் சிலரோ, தொடர்ந்து புதிதுபுதிதாக எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள், புதியபுதிய உறுதிப்பாடுகளை மெய்ப்பித்துக் கொண்டு வருகிறார்கள்.  நமது சமுதாயத்திற்காக நாம் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, மேலும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற ஆற்றலை சமுதாயமே நமக்குள்ளே ஏற்படுத்துவதை நீங்களும் உணர்ந்திருக்கலாம்.  மிக எளிமையாகத் தோன்றும் உத்வேகங்களிலிருந்து மிகப்பெரிய செயல்கள் நிறைவேறுகின்றன.  இப்படிப்பட்ட ஒரு இளைஞர் தாம் பிரதீப் சாங்க்வான் அவர்கள்.  குருகிராமத்தைச் சேர்ந்த பிரதீப் சாங்க்வான் 2016ஆம் ஆண்டு தொட்டு Healing Himalayas என்ற பெயரிலான இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவர் தனது குழு மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து இமயத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார், அங்கே சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்துகிறார்.  பிரதீப் அவர்கள் இதுவரை இமயத்தின் பல்வேறு சுற்றுலாப் பகுதிகளிலிருந்து பல டன்கள் எடையுள்ள நெகிழிப் பொருள்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்.  இவரைப் போலவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு இளைய இணை, அனுதீப், மினூஷா ஆகியோர்.  அனுதீப்புக்கும், மினூஷாவுக்கும் கடந்த நவம்பர் மாதம் தான் திருமணம் நடந்தது.  திருமணம் நடந்த பின்னர் பலர் சுற்றிப் பார்க்கச் செல்வது வழக்கம்; ஆனால் இவர்கள் இருவரும் வித்தியாசமான ஒன்றைச் செய்தார்கள்.  மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி சுற்றிப் பார்க்கச் செல்வதையும், செல்லுமிடங்களில் ஏராளமான குப்பைக் கூளங்களை எப்போதுமே விட்டுச் செல்வதையும் இவர்கள் இருவரும் கவனித்து வந்திருக்கிறார்கள்.  கர்நாடகத்தின் சோமேஷ்வர் கடற்கரையிலும் இதே நிலைமை தான் நிலவி வந்தது.  அனுதீப்பும் மினூஷாவும், சோமேஷ்வர் கடற்கரையில் மக்கள் விட்டுச் செல்லும் குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்துவோம் என்று தங்களுக்குள்ளே முடிவு செய்து கொண்டார்கள்.  கணவன் – மனைவி இருவரும் திருமணம் முடிந்த பிறகு மேற்கொண்ட முதல் உறுதிப்பாடு இதுதான்.   இருவருமாக இணைந்து, கடற்கரையில் குவிந்து கிடந்த ஏகப்பட்ட குப்பைக் கூளங்களை அப்புறப்படுத்தினார்கள்.  அனுதீப் தனது உறுதிப்பாடு பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தும் கொண்டார்.  பிறகு என்ன?  இவருடைய இத்தனை உன்னதமான எண்ணப்பாட்டால் கருத்தூக்கம் பெற்ற பல இளைஞர்கள், இவரோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.  இவர்கள் அனைவருமாக இணைந்து, சோமேஷ்வர் கடற்கரையிலிருந்து 800 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.  ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

நண்பர்களே, இந்த முயல்வுகளுக்கு இடையே, நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.  இந்தக் குப்பைக்கூளங்கள் கடற்கரைகளிலும், மலைகளிலும் எப்படி வந்தடைகின்றன?  நம்மில் யாரோ தாம் குப்பைகளை அங்கே விட்டுச் சென்றிருப்பார்கள்.  நாமும் பிரதீப், அனுதீப்-மினூஷாவைப் போலவே, தூய்மை இயக்கத்தை முடுக்கி விட வேண்டும்.  ஆனால், இதற்கும் முன்பாக நாம் குப்பையை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.  தூய்மை பாரத இயக்கத்தின் முதல் உறுதிப்பாடே இது தானே!!  நான் மேலும் ஒரு விஷயம் குறித்து உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.  கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுபற்றிய விவாதங்கள் அந்த அளவுக்கு நடைபெற முடியாமல் இருந்தது.  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களிலிருந்து நாம் நாட்டை விடுவிக்க வேண்டும்.  இதுவும் 2021ஆம் ஆண்டுக்கான உறுதிப்பாடுகளில் ஒன்று.  நிறைவாக, புத்தாண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துக்களை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள், உங்கள் குடும்பத்தாரையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.  அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய விஷயங்கள் மீது மனதின் குரல் ஒலிக்கும்.  பலப்பல நன்றிகள். 

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்,
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

[/su_expand]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe