Home இந்தியா 72வது குடியரசு தினத்தில்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை!

72வது குடியரசு தினத்தில்… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை!

president-ramanth-khovind
president-ramanth-khovind

72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரை

என் இனிய நாட்டுமக்களே, வணக்கம்.

  • உலகின் மிகப்பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, என் இதயம்கனிந்த நல்வாழ்த்துக்கள்.  பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன, ஆனால் நமது தேசியக் கொண்டாட்டங்களை நாட்டுமக்கள் அனைவரும் தேசபக்தி நிரம்பிய மனத்தினராய் கொண்டாடுகிறார்கள். குடியரசுத் திருநாள் என்ற தேசியப் பெருநாளையும் நாம் நிறை குதூகலத்தோடு கொண்டாடும் வேளையில், நமது தேசியக் கொடி மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் மரியாதையையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்.
  • இன்றைய நாள், உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்று.  இதே நாளன்று தான் 71 ஆண்டுகள் முன்பாக, நம் நாட்டவர்கள் தங்களுடைய ஈடு இணையில்லாத அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரித்து, சட்டமாக்கி, அர்ப்பணித்தார்கள்.  அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான வாழ்க்கை விழுமியங்கள் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்தை இன்றைய நாள் நம்மனைவருக்கும் அளிக்கிறது.  அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோளில் பொறிக்கப்பட்டிருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற வாழ்க்கைத் தத்துவங்கள், நம்மனைவருக்கும் புனிதமான ஆதர்ஸங்கள்.  ஆகையால் ஆட்சியாளர்களின் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களாகிய குடிமக்கள் நாமனைவரும் இந்த ஆதர்ஸங்களை உறுதியோடும், அர்ப்பணிப்போடும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் இந்த நான்கு கருத்துக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே முக்கியத்துவம் அளிக்கும் தீர்மானத்தை, அரசியலமைப்புச்சட்டத்தை இயற்றிய நமது நன்குணர்ந்த மேதைகள், நன்கு சிந்தித்துணர்ந்தே வடித்திருக்கிறார்கள்.  இந்த ஆதர்ஸங்கள் தாம் நமது சுதந்திரப் போராட்டத்துக்கு திசையளித்தன.  பால கங்காதர திலகர், லாலா லஜ்பத் ராய், காந்தியடிகள், சுபாஷ் சந்திர போஸ் போன்ற அநேக மகத்தான மக்கள் நாயகர்களும், சிந்தனையாளர்களும் நமது சுதந்திரப் போராட்டத்துக்கு உத்வேகம் அளித்தார்கள்.  தாய்நாட்டின் பொன்னான எதிர்காலம் பற்றிய அவர்களுடைய கற்பனைகள் வேறுபட்டவையாக விளங்கினாலும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற விழுமியங்கள் அவர்களின் கனவுகளை ஒரே இழையில் இணைக்கும் பணியைப் புரிந்தன.
  • இந்த நற்பண்புகள் நமது தேசத்தைக் கட்டமைத்தவர்களின் ஆதர்ஸங்களாக ஏன் ஆயின என்று நாம் அனைவரும் சற்றே கடந்த காலத்தில் பின்னோக்கிப் பயணித்து, இதுபற்றி நாம் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஏன் ஈடுபடக் கூடாது என்று நான் எண்ணமிடுகிறேன்.  அனாதி காலம் தொட்டே இந்த பூமியிலும், இங்கே இருக்கும் பண்பாட்டிலும், இந்த வாழ்க்கை விழுமியங்கள் அழகும் பொருளும் சேர்த்து வந்திருக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல துலக்கிக் காட்டுகிறது.  நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நமது வாழ்க்கைத் தத்துவத்தின் நிரந்தரமான சித்தாந்தங்கள்.  இவற்றின் தடையறாத பெருக்கு, நமது பண்பாட்டின் தொடக்கத்திலிருந்தே, நம்மனைவரின் வாழ்க்கையையும் நிறைவானதாக்கி வந்திருக்கின்றது.  காலத்திற்கேற்ற வகையில், இந்த விழுமியங்களின் பொருட்செரிவை தொடர்ந்து நிறுவி வருவதே, ஒவ்வொரு புதிய தலைமுறையினரின் பொறுப்பாகும்.  நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்தப் பொறுப்பினை தங்கள் காலத்திலே, மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள்.  அதைப் போலவே, இன்றைய சந்தர்ப்பத்தில், நாமும் இந்த விழுமியங்களை பொருளார்ந்தவையாகவும், பயனளிப்பவையாகவும் புரிய வேண்டும்.  இந்தக் கோட்பாடுகள் சுட்டும் பாதையில், நமது வளர்ச்சிப் பயணம் நிரந்தரமாக முன்னேற்றம் காண வேண்டும்.

என் நேசமான நாட்டுமக்களே,

  • இத்தனை பெரும் மக்கட்தொகை கொண்ட நமது தேசத்தை உணவுதானியங்கள் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் நமது விவசாய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.  தீவிரமான இயற்கைச் சூழல்களையும், அநேக சவால்களையும், கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றையும் தாண்டி நமது விவசாய சகோதர சகோதரிகள், வேளாண் உற்பத்தியில் எந்தக் குறைவையும் ஏற்பட விடவில்லை.  நன்றியுடைய நமது தேசம் நமது அன்னமளிக்கும் விவசாயிகளின் நலனுக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கின்றது. 
  • எவ்வாறு நமது உழைக்கும் விவசாயி, தேசத்தின் உணவுப்பொருள் பாதுகாப்பை உறுதி செய்வதில் வெற்றிகரமாகத் திகழ்கிறாரோ, இதைப் போலவே, நமது இராணுவத்தில் இருக்கும் சாகஸ வீரர்களும், கடுமையான சூழ்நிலைகளிலும், தேசத்தின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார்கள்.  லத்தாக்கில், சியாச்சினிலும், கல்வான் பள்ளத்தாக்கிலும், பூஜ்யத்திற்கு 50-60 டிகிரிகள் குறைவான, அனைத்தையும் உறைய வைக்கும் பருவநிலையாகட்டும், ஜெய்சால்மரில், 50 டிகிரி வெப்பநிலைக்கும் மேற்பட்ட, உடலை உருக்கும் தகிக்கும் பருவநிலையாகட்டும் – நிலம், ஆகாயம், பரந்துபட்ட கரையோரப் பகுதிகளிலே, நமது வீரம்நிறை இராணுவத்தினர், பாரத நாட்டின் பாதுகாப்பின் பொறுப்பினை கணந்தோறும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.  நமது இராணுவத்தினரின் வீரம், தேசபக்தி, தியாகம் ஆகியவை, நாட்டுமக்கள் நம்மனைவருக்கும் பெருமிதத்தை அளிக்கின்றது.
  • உணவுப் பாதுகாப்பு, இராணுவப் பாதுகாப்பு, பேரிடர்கள்-நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று பல்வேறு துறைகளில், நமது விஞ்ஞானிகள் தங்கள் பங்களிப்பு வாயிலாக தேசிய முயற்சிகளுக்கு சக்தியளித்திருக்கின்றார்கள்.  விண்வெளி முதல், வயல்வெளிகள் வரை, கல்வி நிறுவனங்கள் முதல் மருத்துவமனைகள் வரை, விஞ்ஞானிகள் சமூகம் நமது வாழ்க்கை மற்றும் பணிகளை ஆகச்சிறப்பாக ஆக்கியிருக்கின்றார்கள்.  இரவுபகலாக பாடுபட்டு, கொரோனா வைரஸின் உயிரியல் குறியீட்டு முடிச்சுக்களை அவிழ்த்து, மிகக் குறைந்த சமயத்திலேயே தடுப்பூசியை மேம்படுத்தியதன் வாயிலாக, நமது விஞ்ஞானிகள் மனித சமுகமனைத்தின் நலனுக்காக புதியதொரு வரலாற்றினைப் படைத்திருக்கின்றார்கள்.  நாட்டிலே இந்த பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும், வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இறப்புவீதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – நிர்வாகம் – இன்னும் பிறரோடு இணைந்து ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்திருக்கின்றார்கள்.  இந்த வகையில், நமது அனைத்து விவசாயிகள், இராணுவத்தினர், விஞ்ஞானிகள் ஆகியோர், சிறப்பான பாராட்டுதல்களுக்கு உரித்தானவர்கள்;  நன்றியுணர்வுமிக்க தேசம், குடியரசுத் திருநாளாம் இந்த சுபமான வேளையில், இவர்கள் அனைவருக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

என் அன்புநிறை நாட்டுமக்களே,

  • கடந்த ஆண்டு, பூதாகாரமான பேரிடரை எதிர்கொள்ளும் போது, மனித சமுதாயம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நின்ற வேளையில், நான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமான தத்துவங்கள் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தேன்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இழையோடும் நற்பண்பான சகோதரத்துவம் என்பது இல்லாது போயிருந்தால், நம்மால் இந்தப் பெருந்தொற்றிற்கு எதிரான இத்தனை பலமான பதிலடி கொடுத்திருக்க முடியாது போயிருக்கும்.  இந்தியர்கள் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒரு குடும்பத்தைப் போலச் செயல்பட்டு, இந்த கொரோனா பெருந்தொற்று வடிவில் வந்திருக்கும் எதிரிக்கு எதிராக வியக்கத்தக்க தியாகங்கள், சேவை, உயிர்த்தியாகம் ஆகியவற்றைப் புரிந்து, ஒருவரை ஒருவர் காப்பாற்றினார்கள்.  பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க, தங்களின் உயிர்களையும்கூட பொருட்படுத்தாமல், பல இடர்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புறவுப் பணியாளர்கள் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன்.  இவர்களில் சிலர் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள்.  இவர்களோடு கூடவே, இந்தப் பெருந்தொற்றுக்கு ஒண்ணரை இலட்சம் பேர்கள் இரையாகியிருக்கின்றார்கள்.  அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு நான் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடிய கொரோனா வீரர்கள், அசாதாரணமான செயல்பாடுகளைப் புரிந்த நமது எளிய குடிமக்களே.  இன்னும் முடிவுக்கு வராத இந்த சோகமான அத்தியாயத்தின் வரலாற்றைப் பற்றி எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் போது, எதிர்பாராமல் உருவெடுத்த இந்தச் சங்கடத்தை எத்தனை துணிச்சலோடு நீங்கள் அனைவரும் எதிர்கொண்டீர்கள் என்பதை அறிந்து அவர்கள் சிரத்தையோடு தலைவணங்குவார்கள்.
  • நாட்டின் மக்கட்தொகை அடர்த்தி, கலாச்சார மரபுகளின் பன்முகத்தன்மை, இயற்கை மற்றும் புவியியல் சவால்கள் ஆகியவற்றைக் கருத்திக் கொள்ளும் வேளையில், கோவிட் 19க்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள் நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.  இதனைத் தாண்டி, நம்மால் பெருமளவு வைரஸின் பரவலைத் தடுக்க முடிந்திருக்கிறது.
  • இந்தத் தீவிரமான பேரிடரைத் தாண்டி நாம் பல துறைகளில் நமது வழிமுறைகளை வெற்றிகரமாக மாற்றியமைத்துக் கொண்டு முன்னேறி இருக்கிறோம்.  இந்தப் பெருந்தொற்று காரணமாக, நமது குழந்தைகள் – இளைய தலைமுறையினரின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் பாதிப்படையக்கூரிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.  ஆனால் நமது கல்வி அமைப்புக்களும், நிறுவனங்களும், ஆசிரியர்களும், புதிய தொழில்நுட்பத்தை விரைவாகக் கைக்கொண்டு, மாணவர்களின் கல்வி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்து கொண்டார்கள்.  பிஹார் போன்ற நெருக்கமான மக்கட்தொகை கொண்ட மாநிலமாகட்டும், ஜம்மு-கஷ்மீர்-லத்தாக் போன்ற கடினங்களும், சவல்களும் நிறைந்த பகுதிகளாகட்டும், சுதந்திரமான, பாரபட்சமற்ற, பாதுகாப்பான தேர்தல்களை நடத்தி இருப்பது, நமது ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சாதனையாகும்.  தொழில்நுட்பத்தின் துணையோடு நீதிமன்றங்கள் நீதிவழங்கல் செயல்பாடுகளை நிறைவேற்றி வந்தன.  இத்தகைய சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.
  • பொருளாதார வழிமுறைகளைத் துவக்க, unlocking என்ற தாழ்திறத்தல் செயல்பாடு எச்சரிக்கையோடும், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.  இந்த வழிமுறை திறமையானதாக நிரூபிக்கப்பட்டிருப்பதோடு, மீட்சி, எதிர்பார்த்ததை விட விரைவாக இருப்பதற்கான குறியீடுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.  தற்போதைய ஜி.எஸ்.டி வருவாயில் சாதனை படைக்கும் அதிகரிப்பும் அந்நிய முதலீடுகளைக் கவரக்கூடிய பொருளாதார அமைப்பு என்ற வகையில் பாரதம் உருவாகுதல் ஆகியன, நமது பொருளாதார மீட்சிக்கான அடையாளக் குறியீடுகள்.  மத்திய மற்றும் சிறுதொழில்களுக்கு அரசாங்கம் ஊக்கமளிக்கின்றது; தங்களுடைய தொழில்முனைவுத் திறன்களைக் கட்டவிழ்த்து விட ஏதுவாக எளிய வகையில் கடனுதவிகள், வியாபாரத்தில் நூதனமான எண்ணங்களை ஊக்குவித்தல் என்ற வகையில் பல முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

என் பிரிய சககுடிமக்களே,

  • கடந்த ஆண்டின் பெருங்கஷ்டங்கள், நமது இதயங்களின் ஆழத்திலே நாம் என்றுமே அறிந்திருந்த ஒன்றை, நமக்கெல்லாம் நினைவூட்டியது.  அது தான் பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மையெல்லாம் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் மனிதசமுதாயத்தின்பால் கரிசனமும் அக்கறையும் மற்றும் சகோதரத்துவ உணர்வும்.  காலத்தின் தேவைக்கேற்ப, நமது நாட்டுமக்கள், ஒவ்வொரு துறையிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதோடு, தங்கள் நலனை விட, மற்றவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.  மனித சமூகம் முழுமையின்பால் இரக்கம், சேவை, சகோதரத்துவம் என்ற இந்த ஆழமான உணர்வுகள் தாம், பல்லாயிஅம் ஆண்டுகளாக நம்மை ஒருங்கிணைத்து வந்திருக்கின்றன.  பாரத நாட்டவர்களான நாம், மனித சமுதாயத்திற்காகவே வாழவும் செய்கிறோம், மரிக்கவும் செய்கிறோம்.  இத்ந பாரதநாட்டு ஆதர்ஸத்தைக் குறித்து மகத்தான கவி மைதிலீஷரண் குப்த் அவர்களின் வரிகளைக் கேட்போம்.

காலத்திற்கும் கருணையுடையவர்களின் புகழ் கீதங்களில் நிலைத்திருக்கும்,

கவினுலகும் இல்லையெனாது இனிதுவப்போரையே போற்றித் துதிக்கும்.

உயிர்ப்புடைய அவர்களின் ஆன்ம உணர்வு உலகம் முழுவதும் நிறையும்,

உயிர்களனைத்தும் வாழத் தங்கள் இன்னுயிர் ஈனும் இவர்களிடம் இருக்கும் மனிதத்துவம்.

மனித சமூகத்தின்பால் இருக்கும் இந்த அன்பும், தியாக உணர்வுமே நம்மை பெரும் உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

  • 2020ஆம் ஆண்டினை நாம் கற்றல் ஆண்டாகவே கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.  கடந்த ஆண்டிலேயே கூட, மிகக் குறைவான காலத்திற்குள்ளாக இயற்கையன்னை தனது தூய்மையான, புத்துணர்ச்சி அளிக்கும் வடிவத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறாள்.  இத்தகைய தூய்மையான இயற்கை வனப்பு, மிகுந்த காலத்திற்குப் பிறகு காணக் கிடைத்தது.  சின்னச்சின்ன முயற்சிகள் புறந்தள்ளப்பட வேண்டியவை அல்ல, பெரிய முயல்வுகளை நிறைவு செய்பவை என்ற செய்தியைத் தெள்ளத்தெள்வாக இயற்கை அன்னை நமக்களித்திருக்கிறாள்.  வருங்காலத்தில், இது போன்ற பெருந்தொற்றுக்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் விதமாக, சூழல்மாற்ற விஷயத்திற்கு, உலகளாவிய அளவில் முதன்மை அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

பிரியமான நாட்டுமக்களே,

  • சங்கடத்தை சந்தர்ப்பமாக மாற்றி, பிரதமர் தற்சார்பு பாரத இயக்கத்தை அறிவித்தார்.  உயிர்ப்புடைய நமது ஜனநாயகம், கடமையுணர்வும் திறமையும் படைத்த நம்முடைய நாட்டுமக்கள், குறிப்பாக நமது இளைய தலைமுறையினர், தற்சார்பு பாரதத்தை நிர்மாணம் செய்யும் நமது முயற்சிகளுக்கு ஆற்றல் அளித்து வருகின்றார்கள்.  பொருட்கள்-சேவைகள் தொடர்பாக நமது நாட்டுமக்களுக்கு இருக்கும் தேவைகளை நிறைவு செய்யும் உள்நாட்டு முயற்சிகள் வாயிலாகவும், இந்த முயற்சிகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் இந்த இயக்கத்துக்கு ஆற்றல் கிடைத்து வருகிறது.  இந்த இயக்கம் காரணமாக, நுண்-சிறு-நடுத்தர தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு, ஸ்டார்ட் அப் சூழலமைப்பை மேலும் பலமானதாக ஆக்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் கூடவே வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தற்சார்பு பாரத இயக்கம் ஒரு மக்கள் இயக்கத்தின் வடிவத்தை எடுத்து வருகின்றது.
  • புதிய பாரதம் என்ற நோக்கிற்கு வடிவம் கொடுக்கும் வகையில், தேசம் தான் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டுக்குள்ளாக, அதாவது 2022ஆம் ஆண்டுக்குள்ளாக, தனது தேசிய உறுதிப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும் என்ற இலட்சியத்தை மெய்ப்பிப்பதற்கும் இந்த இயக்கம் துணைபுரியும்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கான்க்ரீட் வீட்டைப் பெற்றுத் தருதல் முதல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகுதல் வரையிலான மகத்துவம் வாய்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறி, நாம் சுதந்திரம் அடைந்த 75ஆம் ஆண்டு என்ற வரலாற்று சிறப்புமிக்க நிலையை நாம் எட்டுவோம்.  அனைவரையும் உள்ளடக்கியதொரு சமுதாயத்தைப் படைக்க, கல்வி, உடல்நலம், ஊட்டச்சத்து நிரம்பிய உணவு, மறுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாடு மற்றும் பெண்டிர்நலம் மீது சிறப்பான வலு கூட்டப்பட்டு வருகிறது.
  • பாதகமான சூழ்நிலைகளிலிருந்து ஏதோ ஒரு கற்றல் பிறக்கிறது என்பது என் கருத்து.  இவற்றை எதிர்கொள்வதால் நமது சக்தியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கின்றன.  இந்த தன்னம்பிக்கையோடு பாரதம் பல துறைகளில் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.  முழுவேகத்தோடு முன்னேறிவரும் நமது பொருளாதார சீர்திருத்தங்களின் நிறைவாக, புதிய சட்டங்களின் உருவாக்கம் வாயிலாக, நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த, விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் மேம்பாடு காணப்பட்டு வருகிறது.  தொடக்கத்தில் இந்தச் சீர்திருத்தங்கள் பற்றிய ஐயப்பாடுகள் ஏற்படலாம்.  ஆனால், விவசாயிகளின் நலனில் அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்பதி எந்தவொரு ஐயப்பாடும் கிடையாது.
  • சீர்திருத்தங்கள் தொடர்பாக, கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய பரவலான சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்கவை.  இந்த சீர்திருத்தங்களும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டவை.  இவையும், விவசாயம் மற்றும் தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும், இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை;  அதே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை.  2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கையில், தொழில்நுட்பத்தோடு கூடவே பாரம்பரியத்தின் மீதும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  சர்வதேச அரங்கிலே அறிவின் கருவூலமாக உருமாற்றம் பெறும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் புதிய பாரதத்தின் அடித்தளக்கல் இதன் வாயிலாக நடப்பட்டிருக்கிறது.  புதிய கல்விமுறை, மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை மலரச் செய்யும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள அவர்களை திறம் படைத்தவர்களாக ஆக்கும்.
  • அனைத்துத் துறைகளிலும் உறுதிப்பாட்டோடும், திடத்தோடும் முன்னேறுவதன் நல்ல பலன்கள் காணக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன.  கொரோனாவின் சுமார் ஓராண்டுக்கால எதிர்பாராத அக்னிபரீட்சையைத் தாண்டி, பாரதம் ஓய்ந்து விடவில்லை;  முழுமையான தன்னம்பிக்கையோடு முன்னேறி வருகிறது.  நமது நாட்டில் பொருளாதார மந்தநிலை, சிலகாலம் மட்டுமே நிலவியது.  இப்போது நமது பொருளாதார நிலை மீண்டும் விரைவு பெறத் தொடங்கி இருக்கிறது.  தற்சார்பு பாரதம், கொரோனா நுண்கிருமியிடமிருந்து தற்காத்துக் கொள்ள, தனக்குரிய தடுப்பூசியைத் தயார் செய்து விட்டது.  இப்போது பரந்துபட்ட வகையில், தடுப்பூசி போடப்படும் இயக்கம், வரலாற்றில் தனிப்பெரும் ஒன்றாக விளங்கும்.  இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய நிர்வாகத்தோடும், சுகாதாரத் துறையோடும் சம்பந்தப்பட்டவர்கள், முழு அர்ப்பணிப்போடு கடமையாற்றி வருகிறார்கள்.  நீங்கள் அனைவரும் விதிமுறைகளின்படி, தங்களுடைய ஆரோக்கியத்தின் பொருட்டு, உயிர்காக்கும் இந்தத் தடுப்பூசியால் நற்பலன்களைக் கண்டிப்பாக அடைய வேண்டும் என்று நாட்டுமக்களிடத்தில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  கண்டிப்பாக நீங்கள் இதைப் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் உடல்நலனே, உங்களின் முன்னேற்றப் பாதையின் கதவுகளைத் திறந்து வைக்கும்.
  • இன்று, பாரதம் உலகின் மருந்தகம் என்று உகந்தவகையில் அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் நாம் பலநாட்டு மக்களின் துன்பத்தைக் குறைக்கவும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், மருந்துகளையும், உடல்நலச் சேவைகளின் பிற பொருட்களையும், உலகின் பல மூலைகளுக்கும் கொண்டு சேர்த்து வருகின்றது.  நாம் இப்போது தடுப்பூசியை பிற நாடுகளுக்கும் கிடைக்கச் செய்து வருகிறோம்.

அன்புநிறை என் நாட்டுமக்களே,

  • கடந்த ஆண்டு, பலமுனைகளில், பல சவால்கள் நம்முன்னே ஏற்பட்டன.  நமது எல்லைப்புறங்களில் நாம் விரிவாக்கவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  ஆனால் நமது வீரம்நிறைந்த இராணுவத்தினர், இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டார்கள்.  இந்தச் செயல்பாட்டின் போது, நமது 20 வீரமான இராணுவத்தினர் வீரகதி எய்தினார்கள்.  நாட்டுமக்கள் அனைவரும் இந்த இராணுவத்தினருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.  நாம் அமைதியின் பொருட்டு கடப்பாடு உடையவர்களாக இருந்தாலும், நமது தரை-வான்-கப்பல் படைகள், நமது பாதுகாப்பிற்கு எதிராக புரியப்படும் பொறுப்பற்ற செயல்பாட்டை முறியடிக்க முழுமையான தயார்நிலையில் இருக்கிறது.  அனைத்துச் சூழ்நிலைகளிலும், நமது தேசியநலன்களின் பாதுகாப்பில், நாம் முழுமையாக பொருத்தமானவர்களாக இருக்கிறோம்.  பாரதத்தின் உறுதியான மற்றும் கொள்கைரீதியான நிலைப்பாடு பற்றி சர்வதேச சமுதாயம் நன்கு அறிந்திருக்கிறது.
  • பாரதம், முன்னேற்றப் பாதையில் முன்னேறி, உலக சமுதாயத்தில் தனக்கே உரிய இடத்தை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த சில ஆண்டுகளில், பாரதத்தின் ஆளுமையின் வீச்சு மேலும் விரிவடைந்திருக்கிறது.  இதில் உலகின் பல துறைகளும் அடங்கும்.  ஐநாவின் பாதுகாப்புக் குழுவின் தற்காலிக உறுப்பினராக அசாதாரணமான ஆதரவோடு பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே, அதன் வலுத்திருக்கும் வீச்சின் அடையாளம்.  உலகம் நெடுக இருக்கும் தலைவர்களுடனான நமது பரிமாற்றம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.  உயிர்ப்புடைய தனது ஜனநாயகம் காரணமாக, பொறுப்புணர்வும், நம்பகத்தன்மையும் உடைய ஒரு நாடு என்ற மரியாதையை இந்தியா பெற்றிருக்கிறது.
  • நமது அரசியலமைப்புச்சட்ட மந்திரங்களை நாம் நினைவுகூர்ந்து கொண்டிருப்பது மிகவும் அவசியம்.  நமது தேசப்பிதாவின் வாழ்க்கை பற்றியும் அவரது சிந்தனைகள் பற்றியும் நாம் ஆழமாக நினைத்துப் பார்ப்பதை, நமது அன்றாட வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நான் முன்னமேயே கூறியிருந்தாலும், மீண்டும் இதை வலியுறுத்த விரும்புகிறேன்.  ஒவ்வொரு கண்ணிலிருந்தும் கண்ணீர்த் துளியைத் துடைக்கும் அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.  நமது குடியரசு என்ற திட்டத்தின் கோட்பாட்டுச் சொல்லே சமத்துவம்.  கிராமவாசிகள், பெண்கள், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரான பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு சமூக சமத்துவம் கண்ணியத்தை அளிக்கிறது.  பொருளாதார சமநிலை அனைவருக்கும் சமவாய்ப்பை அளிப்பதோடு, நலிவடைந்தவர்களைக் கைப்பிடித்து மேலுயர்த்த உதவுகிறது.  உதவிபுரியும் செயல்கள் மற்றவர்களின் உணர்வறிந்து நடந்து கொள்ளும் நமது திறனை விரிவாக்குகிறது.  நம் முன்னே இருக்கும் ஒன்றுபட்ட பாதையில், சகோதரத்துவமே நமது தார்மீகமான வழிகாட்டி.  அரசியலமைப்புச்சட்ட வரைவை 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டப் பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய பாபாசாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேட்கர் அவர்கள் சுட்டிக்காட்டிய அரசியலமைப்புச்சட்ட அறநெறிப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்போம்.  அரசியலமைப்புச்சட்ட அறநெறி என்பது அரசியலமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் விழுமியங்களின் உயர்நிலையையே குறிக்கிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நேசமான சககுடிமக்களே,

  • நமது குடியரசு நிறுவப்பட்டதன் ஆண்டுவிழாவை நாம் கொண்டாடவிருக்கும் வேளையில், நான் அயல்நாடுகளில் வாழும் நமது சகோதர சகோதரிகளைப் பற்றியும் எண்ணமிடுகிறேன்.  அயல்நாடுவாழ் இந்தியர்கள் நமது பெருமிதங்கள்.  பல்வேறு துறைகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள், சிலர் அரசியல் தலைமை, சிலர் அறிவியல், கலைகள், கல்வித்துறை, சமூகம், வியாபாரம் போன்றவற்றில் உயர்நிலைகளை எட்டியிருப்பதோடு, தங்களின் புதிய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.  உங்கள் மூதாதையர்களின் பூமியிலிருந்து உங்களுக்கு குடியரசுத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.  பொதுவாகவே திருவிழாக்களைத் தங்களின் குடும்பங்களிலிருந்து தள்ளியிருந்து கொண்டாடும் இராணுவத்தினர், துணை இராணுவப் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.  அந்தப் படைகளின் அனைத்து வீரர்களுக்கும் என் சிறப்பான நல்வாழ்த்துக்கள்.
  • நான் மீண்டும் ஒருமுறை குடியரசுத் திருநாளை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, ஜெய் ஹிந்த்!

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி நிலையம், சென்னை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version