May 11, 2021, 1:28 am Tuesday
More

  எம்ஜிஆரின் மெய்க்காவலர் கே பி ராமகிருஷ்ணன் மறைவு! முதல்வர் இரங்கல்!

  kpr1-1
  kpr1-1

  எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக பணியாற்றிய, கே.பி.ராமகிருஷ்ணன், 92, நேற்று காலமானார்.தமிழக – கேரள மாநில எல்லை அருகே, ஏலக்கரையை சேர்ந்தவர், கே.பி.ராமகிருஷ்ணன், 92. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரான இவர், சண்டைப்பயிற்சி கலைஞராகவும் பணியாற்றியவர்.

  எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும், ‘டூப்’ போட்டு ராமகிருஷ்ணா நடித்துள்ளார். சென்னை, கோபாலபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த டிசம்பர், 27ம் தேதி, வீட்டின் மாடிப்படியில் தவறி விழுந்தார். இதில், பின் தலையில் அடிபட்டு, ஆறு இடங்களில் ரத்தம் உறைந்து, சுயநினைவை இழந்தார். இதையடுத்து, மயிலாப்பூர் அருகே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், ஜன.,1ல், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த ராமகிருஷ்ணன், சுயநினைவு திரும்பாமலேயே, நேற்று மாலை, 3:15மணிக்கு காலமானார்.

  kpr
  kpr

  அவரது இறுதிச்சடங்கு, இன்று நடக்கிறது. மறைந்த ராமகிருஷ்ணனுக்கு, இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கார்த்திகாயினி, மூன்றாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார்.

  தந்தை குறித்து, அவரது மூத்த மகன் கோவிந்தராஜன் கூறியதாவது: உண்மையான விசுவாசி எம்.ஜி.ஆருடன், 40 ஆண்டு காலம் தொடர்புடையவர் அப்பா. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா மற்றும் அரசியல் மூன்றிலும், உண்மையான விசுவாசியாக இருந்தார். எம்.ஜி.ஆரின் கடைசி காலம் வரை, அவரது மெய்க்காப்பாளர், என் அப்பா தான்.

  k-p-ramakrishnan
  k-p-ramakrishnan

  சினிமாவுக்காக, சென்னைக்கு, 9 வயதிலேயே வந்த அப்பா, 1949ல் மங்கையர்கரசி படத்தில் முதன்முதலாக பி.யூ.சின்னப்பா உடன் நடித்தார்.கடந்த, 1947ல், எம்.ஜி.ஆரின் அறிமுகம் கிடைத்தது. எம்.ஜி.ஆர்., 1953ல் நாடக மன்றம் துவங்கிய போது, அந்த நாடகங்களில்அப்பாவும் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின், நாடோடி மன்னன் படம் துவங்கிய போது, ஸ்டண்ட் கலைஞராகவும், எம்.ஜி.ஆரின் இரட்டை வேடத்தில், ஒருவராக, ‘டூப்’ போட்டும் அப்பா நடித்தார். அதிலிருந்து, எம்.ஜி.ஆர்., கடைசியாக நடித்த, ஊருக்கு உழைப்பவன் படம் வரை, எம்.ஜி.ஆருக்கு, அப்பா தான் டூப் போட்டார். பாலமாக இருந்தார் எம்.ஜி.ஆர்., குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு வேண்டிய பாதுகாப்புக்களை அப்பா தான் முன்னின்று செய்ய வேண்டுமென, அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

  எம்.ஜி.ஆருக்கும், அண்ணா துரைக்கும் அப்பா தான் பாலமாக இருந்தார். ஒரு முறை குடிசை மாற்று வாரிய தலைவர் பதவியை, அப்பாவுக்கு தர, எம்.ஜி.ஆரே முன் வந்து கேட்டார். ஆனால், பதவி வந்தால், எம்.ஜி.ஆரை விட்டு விலக நேர்ந்து விடுமோ என நினைத்து, மறுத்து விட்டார். ஜெயலலிதா, 1982ல் அரசியலுக்கு வந்த போது, எம்.ஜி.ஆரின் உத்தரவுப்படி ஜெயலலிதாவுக்கும், மெய்க்காப்பாளராக பணிபுரிந்தார். அப்போதிருந்து, 1989 வரை, ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளராக இருந்தார்.

  பின் வயது முதிர்வு காரணமாக, அப்பணியில் இருந்து விலகினார். எம்.ஜி.ஆர்., மறைந்த பின், 33 ஆண்டுகள் ஒருவித தனிமையில் தான் வாழ்ந்தார். பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவது, எம்.ஜி.ஆர்., பற்றிய நினைவுகளை கூறுவது என்றே, மீதி வாழ்க்கையை வாழ்ந்தார். எம்.ஜி.ஆருடன், 40 ஆண்டு காலம் இருந்த என் அப்பாவுக்கு, இயல், இசை, நாடக மன்றத்திலிருந்து மாதம் தோறும், 1,500 ரூபாய் வரும். அது தான் அவரது வருமானம்.’எம்.ஜி.ஆர்.,’ ஒரு சகாப்தம், என்ற பெயரில், பத்திரிகை ஒன்றில் அப்பா தொடர் எழுதினார். பின், இது நுாலாக வெளியானது. இத்துடன், ‘மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர்.,’ என்ற தலைப்பிலும், ‘வாழும் எம்.ஜி.ஆர்.,’ என்ற தலைப்பிலும் மூன்று புத்தகம் எழுதியிருந்தார். இவற்றின் விற்பனை மூலம் வரும் வருமானம் முழுவதையும், பாலவாக்கம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அப்பா எழுதி கொடுத்து விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

  புரட்சித்தலைவர் MGR அவர்களுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்த மெய்க்காப்பாளர் திரு.K.P.ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  என்று இராமகிருஷ்ணனின் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,179FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »