May 8, 2021, 9:33 am Saturday
More

  கேபிடல் ஹில்- தில்லி செங்கோட்டை.. அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி!

  delhi2
  delhi2

  விவசாயிகள் சட்டத்திற்கு அமெரிக்க அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம், இன்டர்நெட் துண்டிப்பு குறித்து அது விமர்சித்துள்ளது. இதையடுத்து கேபிடல் ஹில் கலவரத்தை – செங்கோட்டை மோதலுடன் ஒப்பிட்டு மத்திய வெளியுறவுத்துறை அமெரிக்காவுக்கு குட்டு வைத்துள்ளது.

  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடகி ரிஹன்னா, சுற்றுச்சூழலியல் போராளி கிரெட்டா துன்பர்க் உள்ளிட்டோர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சினிமாத்துறையினர் பலரும், சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் உலகினரும் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்ற ரீதியில் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, இன்டர்நெட் துண்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிடன் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் விவசாயிகள் போராட்டம் குறித்து முதல் முறையாக அமெரிக்க அரசு கருத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், பேச்சுவார்த்தை மூலமாக இரு தரப்புக்கும் இடையே சமூக நிலை எட்டப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

  (மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை மறைமுகமாக குறிப்பிட்டு) இந்திய சந்தைகளின் திறன் மேம்படுவதையும், அதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

  (தில்லி எல்லையில் இணைய வசதி துண்டிக்கப்பட்டதை குறிப்பிடும் வகையில் ) அதேசமயம், தகவல் பரிமாற்றம், இணையதளம் போன்றவை கருத்து சுதந்திரத்தின் அடித்தளமாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். அது இடையறாமல் கிடைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  அமெரிக்காவின் இந்த கருத்துக்கு உடனடியாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இரு நாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்த ஜனநாயகத்தையும் தார்மீக நெறிகளையும் கொண்ட நாடுகள்.

  ஜனவரி 26ம் தேதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தில்லி செங்கோட்டையில் அரங்கேறிய கலவரத்திற்கும், வன்முறைக்கும் எதிராக எப்படி நாட்டு மக்கள் மத்தியில் உணர்வுகள் எழுந்ததோ அதேபோலத்தான் வாஷிங்டனில் ஜனவரி 6ம் தேதி கேபிடல் ஹில்லில் நடந்த கலவரத்தின்போதும் அங்குள்ள மக்களிடையே எழுந்தது. இரு கலவரங்களும் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி முறையாக அடக்கப்பட்டன.

  இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய சீர்திருத்தங்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என்பதையே அவர்களின் கருத்து வெளிப்படுத்துகிறது. அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதை இந்தியாவின் ஜனநாயக மாண்புகளைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். இங்குள்ள சூழலின் பின்னணியில்தான் அதை அணுக வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளையும் போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரவும், சுமூகமான சூழல் ஏற்படவும் அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

  மேலும் வன்முறை பரவாமல் தடுப்பதற்காகத்தான், தில்லி பிராந்திய எல்லைப் பகுதிகளில் தற்காலிகமாக இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இவை தற்காலிக நடவடிக்கைதான் என்றார் அவர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,163FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »