Home உள்ளூர் செய்திகள் கொரோனா: சிங்கப்பூரிலிருந்து வந்த பெண்! தொற்றுடன் வந்தது தெரியாமல் வீடு திரும்பிய 169 பயணிகள்!

கொரோனா: சிங்கப்பூரிலிருந்து வந்த பெண்! தொற்றுடன் வந்தது தெரியாமல் வீடு திரும்பிய 169 பயணிகள்!

corona-test
corona test

சிங்கப்பூரில் இருந்து இன்று திருச்சி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. கொரோனா காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டாலும், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தில் மத்திய அரசு சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் அந்த நாட்டில் கொரோனா டெஸ்ட் எடுத்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த சான்றிதழ் இல்லாவிட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள்.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சிக்கு வந்தது. அதில், 169 பயணிகள் வந்தனர். அவர்களின் உடமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேஷன் அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த 38 வயது மதிப்புடைய பெண்ணின் மருத்துவ சான்றிதழை வாங்கிப்பார்த்த இமிகிரேஷன் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் கொரோனா டெஸ்ட் எடுத்திருந்த அந்த பெண்ணின் சான்றிதழில் பாசிட்டிவ் என இருந்தது.

பாசிடிவ் என்றால் கொரோனா இருப்பதாக அர்த்தம். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் உடனே அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”சான்றிதழில் பாசிடிவ் என தெளிவாக இருந்தும், கொரோனா பாதித்த பெண்ணை சிங்கப்பூரில் எப்படி விமானத்தில் ஏற்றினார்கள். இதுபற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த பெண்ணுடன் வந்த மற்ற 168 பேரும் அவர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். அவர்கள் திருச்சி மற்றும் அருகில் உள்ள புதுக்கோட்டை, கரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். மேலும் விமானத்தில் பணியாளர்களும் இருந்துள்ளனர். இதுதவிர விமான நிலைய வாசலில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை பெண் மூலம் இவர்களில் யாருக்காவது தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே பயணிகள் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.மேலும் விமான பணியாளர்கள், இமிகிரேஷன் ஊழியர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்” என்றனர்.

தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதித்த பெண் திருச்சிக்கு விமானத்தில் வந்ததும், அவருடன் வந்த பயணிகள் தனிமைப்படுத்துதல் இன்றி வீடுகளுக்கு திரும்பி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version