Home சற்றுமுன் விலையேறிய வெங்காயம்! ரூ.130 வரை விற்பனை!

விலையேறிய வெங்காயம்! ரூ.130 வரை விற்பனை!

onion lory
onion lory

திண்டுக்கல்லில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப் பட்டது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மீண்டும் ரூ.130-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பெரிய வெங்காயம் பெரும்பாலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.

onion1

கடந்த ஆண்டு இறுதியில், வடமாநிலங்களில் பெய்த கன மழையால் பெரிய வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்ந்தது.

ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.80 வரை விற்றது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து விலை சீரானது. கடந்த ஆண்டு சின்ன வெங்காயமும் விளைச்சல் இல்லாததால் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து விற்றது. இதனால் விவசாயிகள் பெரும்பாலானோர் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் ஜனவரியில் பெய்த தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெங்காயச் செடிகள் அழுகின. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். இந்த நாட்களில் தலா 6,000 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது வெறும் 1,000 மூட்டை வெங்காயம் மட்டுமே வருகின்றன. இதனால் மொத்த மார்க்கெட்டிலேயே சின்ன வெங்காயம் விலை அதிகரித்து அதிகபட்சமாக கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது.

இது குறித்து வெங்காயம் ஏற்றுமதியாளர் கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கத் தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது:

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. இந்த ஆண்டுதான் இதுபோன்று விலை அதிகரித்துள்ளது. அறுவடை நேரத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்தன. வெளி மார்க்கெட்டில் ரூ.150 வரை விற்க வாய்ப்புள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version